தேவையான பொருட்கள்:
முட்டை – 8,
கடலை மாவு – 2 1/2 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் – 1,
காய்ந்த மிளகாய் – 3 முதல் 4,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
டொமாடோ கெட்சப் – 4 முதல் 5 டீஸ்பூன்,
இடித்த பூண்டு – 10 பல்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
கருவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் முட்டையை போட்டு, முட்டை மூழ்கும் அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி அடுப்பில் வைத்து 10 நிமிடம் வரை வேக விட வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் பச்சை தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில், வெந்த முட்டையை ஒவ்வொன்றாக போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முட்டையின் சூடு வேகமாக குறையும். மூன்று நிமிடங்கள் கழித்து பச்சை தண்ணீரில் இருந்து முட்டையை எடுத்து அதன் ஓட்டை உரிக்க வேண்டும். பிறகு முட்டையை சின்ன சின்ன சதுர வடிவில் வெட்ட வேண்டும். இப்படி வெட்டிய முட்டையை ஒரு பௌலில் போட்டுவிட்டு அதோடு சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இப்படி எல்லாவற்றை சேர்த்து, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து(அதிக அளவில் சேர்க்க கூடாது) நன்றாக கிளற வேண்டும்.
தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு அதில் உருண்டை உருண்டையாக நாம் ஏற்கனவே செய்து வைத்த கலவையை போட வேண்டும். அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அவற்றை எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கருவேப்பிலை, சோம்பு, இடித்த பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை உப்பி மற்றும் மிளகாய் தூள் சேர்த்துவிட்டு அதோடு டொமாடோ கெட்சப் சேர்த்து 1 நிமிடம் வதக்கிவிட்டு அதோடு சேர்த்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்க்க வேண்டும். அதன் பிறகு அதோடு நிறுகிய கொத்தமல்லயை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவையான முட்டை 65 தயார்.