கணினி, லேப்டாப், செல்போன் திரை முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பாடங்களை கவனித்தபோது பலரும் சரியான உடல் தோரணையை பின்பற்றவில்லை.
கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலால் அறிமுகமான ஆன்லைன் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கியபடி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு சென்று பாடம் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் கல்வி முறை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு அசவுகரியங்களை எதிர்கொள்ள வைத்தது. டீன் ஏஜ் வயது மாணவர்களை விட குழந்தைகள்தான் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டார்கள் என்பது கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்கும் ‘பீரியாட்ரிக் ஆர்த்தோபயாட்ரிக்’ எனப்படும் எலும்பியல் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதி கரித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளின் போது தவறான தோரணையில் அமர்ந்திருந்ததுதான் அதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கணினி, லேப்டாப், செல்போன் திரை முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து பாடங்களை கவனித்தபோது பலரும் சரியான உடல் தோரணையை பின்பற்றவில்லை. அதனால் கழுத்துவலி, முதுகுவலி பிரச்சினையை எதிர்கொண்டார்கள். அதுவே எலும்பியல் நோய்க்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதுகுறித்து பஞ்சாப்பை சேர்ந்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஹுபாங் அகர்வால் கூறுகையில், ‘‘ஆன்லைன் வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எலும்பியல் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதி கரித்துள்ளது.
இந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அதிக எடை கொண்டவர்கள். தவறான உடல் தோரணையில் உட்கார்ந்தது, எத்தகைய உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தது போன்றவையும் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டன. பல குழந்தைகள் கழுத்து, முதுகெலும்பு பகுதிகளில் வலியை உணர்ந்துள்ளனர்’’ என்கிறார்.
கொரோனா காலகட்டத்தில் சூரிய ஒளி உடலில் படாமல் வீடுகளில் முடங்கி கிடந்ததும் மற்றொரு காரணம் என்கிறார், டெல்லியை சேர்ந்த டாக்டர் ரஸ்தோகி.
‘‘கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் இடைவெளி எடுத்துக்கொள்வது, சூரிய ஒளி உடலில் படும்படி சிறிது நேரம் செலவிடுவது, கை, கால்களை நீட்டி மடக்கும் எளிய பயிற்சிகளை மேற்கொள்வது, சரியான தோரணையில் அமர்வதற்கு ஏதுவான நாற்காலியை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பொருந்தும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் கட்டாயம் இடம் பெறவும் வேண்டும். ஓரிடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்தால் ஒரு நிமிடமாவது நிமிர்ந்து நிற்க வேண்டும். அது ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதை உறுதி செய்ய உதவும். தசைகளை பராமரிக்கவும் துணை புரியும்.
குழந்தைகளுக்கு முதுகு மற்றும் கழுத்து பிரச்சினைகள் ஏற்பட்டால் பெற்றோர் அலட்சியம் கொள்ளக்கூடாது. எலும்பியல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்’’ என்றும் சொல்கிறார்.
நன்றி | மாலை மலர்