எத்தனை பேர்?
எத்தனை நூல்
எத்தனை சொற்பொழிவுகள்?
பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே
இது தேவையா? திருக்குறளுக்கு
சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம்.
தேவை தான்.
விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும்
பாத்திரத்தை.
பாத்திரம் என்றது
திருக்குறளை அல்ல.
நம்மை.
ஆம்.நம்மை நாமே தான்.
திருக்குறளை வைத்து
விளக்கிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.
ராமாயணம் என்றால்
அந்தக்காலத்து நரசிம்ம பாரதி
என்.டி.ராமராவ்
இப்போ
தனுஷ் ஆர்யா வரைக்கும்
வில் வளைத்து
சீதையோடு
கண்ணோடு கண்ணோக்கி
பத்து தலை அரக்கனோடு
வதம் செய்வது வரை
காட்டிக்கொண்டே இருக்கலாம்
பாராயணங்கள்
தொடந்து கொண்டே இருக்கலாம்.
உரை மேல் உரைகள் இருக்கலாம்.
கால ஓட்டத்தின் காட்சி சக்கரங்களில்
ஓடும் வேகத்தில்
நசுங்கிய
வரலாற்று சதைக்கூளங்களில்
பிதுங்கியவை எத்தனை எத்தனையோ?
அவை எழுதும் உரைகளில்
குறள் எழுப்பிய குரல்களுக்கு
பிசிறு தட்டியதே இல்லை.
தெய்வத்தான் ஆகாது…என்றானே
வள்ளுவன் என்ன நாத்திகனா?
ஆம்.
அவன் வாழ்ந்த காலத்தில்
தெய்வங்கள்
கதைகளாவும்
ருசிகரச்சம்பவங்களின்
தொகுப்புகளாகவும்
குறுகிப்போனார்கள்.
அரசர்ககளின்
செல்லப்பூனைக்குட்டிகளாகவும்
ஆகிப்போனார்கள்.
பதினெண்கீழ் கணக்கு இலக்கியங்கள் தான்
அப்போது மருந்து புகட்ட வந்தன.
வாழ வேன்டிய
மானுட அறத்துக்கு
கண் காது மூக்கு ஒட்டி
கதைகள் சொன்ன போதும்
அறத்தின் கூர்மை மழுங்கியதே மிச்சம்.
அதற்கும் ஒரு
அரம் செய்ய வேண்டிய அவசியமே
அப்போதைய தேவை.
அதனால்
இந்த நீதி நூல்கள் கூட
அங்கங்கே
அழகிய உவமைகள் பூத்து
அறம் காட்டின.
கடவுளை நம்பி கல்லாய் கிட
என்று
அந்த கல் கூட போதிக்கவில்லை.
கல்லைப் பிளந்து வா என்றுதான்
அந்த கல்லும் சொன்னது.
ஒரு அணுவும் அசையாது என்று
உன்னை அசையாது படுத்திரு என்றா
அது சொன்னது.?
அணுவைத்துளைத்து ஏழ்கடலைக் காண்
என்று தான் அதுவும் சொன்னது.
இருப்பினும்
இன்னும்
கூடங்குளங்கள்
கூடி வரவில்லை.
அரசியலே மதம் ஆகிப்போனது
நம் நாட்டில் மட்டும் தான்.
விஞ்ஞானம்
வியர்க்க வியர்க்க
சிந்திப்பதே முயற்சி.
நம் கைகளையும்
கால்களையும் இயக்கும் கயிறு
அதில் தான்
கட்டப்பட்டு இருக்கிறது.
அந்த மெய்வருத்தம்
எத்தனை
கழுமரங்களால்
தூக்கு மரங்களால்
சிரச்சேதங்களால்
மிரட்டப்பட்டிருக்கும்.
மனிதன்
அதைக்கடந்த பின்
அடைந்த கூலியின்
பரிமாணாம்
புரிகிறதா?
ஆம்.அது
பரிமாணம் இல்லை.
பரிணாமம்.
உள்ளங்கையில்
சுக்கிரமேடும் சூரியமேடும்
பார்த்துக்கொண்டிருந்தவர்களே!
சோழி குலுக்கியது போதும் என்று
கையை உதறி வீட்டு
கணினியுகம் வந்த பின்
அந்த
சுக்கிரனை நோக்கியே
சுற்றுலா போகலாம்
என்று டிக்கட் புக் பண்ண
தயார் ஆகி விட்டீர்களே!
இது எவ்வளவு பெரிய கூலி.
திருக்குறளை நாம் நினைக்கவில்லை.
திருக்குறள் தான்
நம்மை நடத்திக்கொண்டு இருக்கிறது!
நன்றி : ருத்ரா | வார்ப்பு இணையம்