Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வாராணசி கவிதைகள் | சுகுமாரன்

வாராணசி கவிதைகள் | சுகுமாரன்

4 minutes read

காலம்       

ங்கே

காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று

காலங்களுக்கு அப்பாலான  காலம்

 

இங்கே

இன்று பிறந்த இன்றும்

நாளை பிறக்கும் நாளையும்

பிறந்ததுமே

இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன

 

இங்கே

அன்றாடம் உதிக்கும் சூரியன்

முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது

முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது

 

இங்கே

காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்

யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்

மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.

 

இங்கே

ஒசிந்து பெய்யும் மழையில்

முதலாவது மேகத்தின்

உலராத ஈரம் தேங்கியிருக்கிறது.

 

இங்கே

பிரபஞ்சத்தின் சுவாசத்தால் சிலிர்த்தோடும் நதியில்

ஆதி நாடோடியின்

உமிழ்நீர் ஊறிச் சுவைக்கிறது.

 

இங்கே

மரங்களிருந்து கேட்கும் பறவைக் குரல்களில்

மொழிக்கு முந்திய மௌனத்தின் வார்த்தைகள்

எழுத்துக் கூட்டி உச்சரிக்கப்படுகின்றன

 

இங்கே

குறுகிய சந்துகளில் பதியும் புதிய காலடிகளின்கீழ்

ஆயிரமாயிரம் அறியாச் சுவடுகள் புதைந்திருக்கின்றன

 

இங்கே

முதலாவது கங்குதான் கனன்று கனன்று

உயிரின் சுடராக அலைந்து அலைந்து இன்னும் எரிகிறது

 

இங்கே

வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது

சாவின் கொள்ளிகளுக்கு இடையில் வாழ்க்கை புன்னகைக்கிறது.

 

இங்கே

மனிதர்கள் வந்துபோவது

இன்றை விருந்தோம்பவோ

நாளையை வரவேற்கவோ அல்ல

இறந்த காலத்தில் புகலடைய

 

ஏனெனில்

வாராணசியில் காலம் ஒன்றே ஒன்று

காலங்களைக் கடந்த காலம்.

 


 

உஸ்தாத்

 

 கதவுஎண்சி.கே. 46 / 62,  

 ஹராகாசராய்வாராணசி

 

மேற்குறிப்பிட்ட முகவரி இல்லத்தில்

பிஸ்மில்லா கான் இல்லை

ஆனால்

அந்த வீட்டில்தான் அவரைப் பார்த்தேன்

 

குறுகிய வரவேற்பு அறை மூலையில்

அவருடைய காலணிகள் இல்லை

ஆனால்

தாளகதியுடன் நகரும் இரண்டு பாதங்களை

அந்த மூலை அருகில்தான் பார்த்தேன்

 

கூடத்தின் தரையில் செவ்வண்ண ஜமக்காளத்தின் மீது

அவர் உட்கார்ந்திருக்கவில்லை

ஆனால்

சுருதி பிடித்து மகா குரு ஸ்வரம் கற்பிப்பதை

ஜமக்காளத்தின் மறுமுனையில் அமர்ந்துதான் பார்த்தேன்

 

ளுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தும்

அறைக்குள்  அசைவில்லை

ஆனால்

இருகை உயர்த்தி இறைஞ்சும் குல்லா அணிந்த நிழல்

அந்த மேற்குச் சுவர்மேல் அசைவதைப் பார்த்தேன்.

 

காட்சிப் பேழைக்குள்

வரிசையாக மௌனித்திருந்த குறுங்குழல்கள்

அப்போது உயிர்பெற்று விம்முவதைக் கேட்டேன்

 

விழிபனிக்க நிலத்தில் மண்டியிட்டு வணங்கி நிமிர்ந்தேன்

ஒரு முதிய ஆள்காட்டி விரல்

கண்துளிர்ப்பைத் துடைப்பதைக்

கண்ணி்மைக்காமல் பார்த்தேன்

 

அந்த விரலை முகர்ந்தபோது

பனாரசி பானின் வாசனையும்

கங்கையின் குளிர்ச்சியும்

மண்ணின் சொரசொரப்பும் இருந்தன.

வானத்தின் தழுதழுப்பும் இருந்தது.


 

முக்தி

 

காசிக்கு வந்தால்

அதி விருப்பமானதை

இங்கேயே கைவிட்டுப் போவது மரபு.

 

மரபுக்கு அஞ்சி

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகிறார்கள்

 

சிலர் அம்மாக்களை

சிலர் பிள்ளைகளை

சிலர் மனைவிகளை

சிலர் கணவர்களை

சிலர் காதலிகளை

சிலர் அநாதைகளை

சிலர் ரட்சகர்களை

 

இவ்வாறு  கைவிடப்பட்டவர்களால்

நகரம் நெரிபடுகிறது.

 

சிலர் ஆடுகளை

சிலர் மாடுகளை

சிலர் குதிரைகளை

சிலர் மயில்களை

சிலர் பன்றிகளை

சிலர் குரங்களை

சிலர் காகங்களை

 

இவ்வாறு கைவிடப்பட்டவையால்

தெருக்கள் முட்டிக்கொள்கின்றன.

 

சிலர் ஆடைகளை

சிலர் ஆசைகளை

சிலர் மலர்களை

சிலர் நம்பிக்கைகளை

சிலர் பிணங்களை

சிலர் சாம்பற்குடங்களை

சிலர் ஆவிகளை

 

இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்

படித்துறைகள் திணறுகின்றன

 

சிலர் ருசியை

சிலர் காட்சியை

சிலர் கேள்வியை

சிலர் மணத்தை

சிலர் தொடுகையை

சிலர் உணர்வை

சிலர் அறிவை

 

இவ்வாறு கைவிடப்பட்டவையால்

கங்கை விம்முகிறது

 

சிலர் கனவை

சிலர் நம்பிக்கையை

சிலர் காமத்தை

சிலர் மோகத்தை

சிலர் ஞாபகத்தை

சிலர் தேகத்தை

சிலர் ஆன்மாவை

 

இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்

விசுவநாதன் தடுமாறுகிறான்.

 

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகும்போது

கையோடு காசியையும் கொண்டு போகிறார்கள்.

ஒவ்வொருவரும்

ஒவ்வொருமுறையும்

காசியை நினைக்கும்போதும்

கைவிட்டவையும் கூடவே வராதா?

காசியையும் கைவிடுவதுதானே கதி மோட்சம்?


 

சுடர்கள்

ல்லாயிரம்கோடிக் கைகள் கற்பகோடிக் காலம்

தொட்டுத் தழுவி உயிரூட்டிய

நம்பிக்கைக் கல்லை நலம்விசாரித்து

ஆலய வாசலில் வந்து அமர்ந்தேன்.

 

ஒட்டி அமர இடங்கேட்டு முன்னால் நின்றவனுக்குப்

பனித்த சடை, பவளமேனியில் பால்நிறச் சாம்பல்,

குனித்த புருவம், கோணற்சிரிப்பு,

இடது பொற்பாதத்தில் பித்த வெடிப்பு.

 

உடல்நகர்த்தி உட்கார இடம் கொடுத்தேன்

கைவச உணவில் கொஞ்சம் கொடுத்தேன்

யுகப்பசியுடன் விழுங்கிய பின்பு

‘மந்திர் மேம் மூர்த்தி; பாஹர் ஹை ஈஸ்வர்’ என்று

ஊழி ஏப்பமிட்டு கனிவாகச் சிரித்தான்.

 

கங்கையில் மிதக்கவிடப்

பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்

அழியாச் சுடர்களைப் பார்த்தேன் அப்போது.


 சுகுமாரன்

நன்றி – கனலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More