துர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்

மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள்

book-review

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது.

தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் என்பதால் இந்த நூல் தமிழக வாசகர்களுக்கும் அவசியமானது. அடிப்படையில், துடியான தெய்வமாகவே அறியப்பட்டிருந்த துர்க்கை அம்மன் மங்கலத் தெய்வங்களாகக் கருதப்பட்ட லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை எப்படி மிஞ்சினார் என்பதற்குச் சமூகவியல்ரீதியான ஊடாட்டங்களையும் சேர்த்து ஆய்வுசெய்கிறார் நூலாசிரியர்.

கல்விக்கோ வேலைக்கோ பெண்கள் வெளியே செல்ல முடியாதென்ற சூழல் சென்ற நூற்றாண்டின் முன்பகுதி வரை யாழ்ப்பாணத்திலும் நிலவியதைக் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்குமான கல்வியையும் படிக்கும் சூழலையும் கிறிஸ்தவப் பள்ளிகள் முன்னெடுத்த நிலையில், பெண்கள் கல்விக்கும் வேலைக்கும் வெளியே வர ஆரம்பித்த சூழலில்தான், துர்க்கை அம்மன் வழிபாடு விசேஷ முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார்.

பெண்கள் திரளாகத் துர்க்கையம்மனை வழிபடத் தொடங்கும்போது, அங்கே புதிய வழிபாட்டு முறைகள் ஏற்படுகின்றன. சைவ ஆகம முறைகளுக்கு மாறாக எழுந்த துர்க்கைக் கோயில் நிர்வாகத்தில் பெண் தலைமைத்துவம், கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த சமூகப் பணிகள் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவும் சாதி முறைமைகள், திருமண உறவுகள், மாறிவரும் விழுமியங்களையும் ஒரு நாவல்போல இந்த நூலில் வாசிக்க முடிகிறது. சென்ற நூற்றாண்டில் 1980-களின் இறுதியில் தமிழகத்தில் பிரபலமான ஆதி பராசக்தி வழிபாடு ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு சமூகத்திலிருந்துதான் கோயில்களும் வழிபாடுகளும் தோன்றுகின்றன. அதனால், அந்தச் சமூகத்தின் நம்பிக்கைகள், அது அடையும் மாறுதல்கள், அதன் பண்பாடு ஆகியவற்றையே கோயில்களும் கடவுள்களும் வழிபாடுகளும் பிரதிபலிக்கின்றன. அந்த வகையில், தொ. பரமசிவன் எழுதிய ‘அழகர் கோயில்’ நூலும், அ.கா.பெருமாள் எழுதிய ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் திருவட்டாறு கோவில் வரலாறு’ நூலும் முக்கியமானது.

இலங்கையின் வடபுல யாழ்ப்பாணத்தில் பிறந்த சமூகவியல் பேராசிரியர் சண்முகலிங்கன் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூலைப் பேராசிரியர் பக்தவத்சல பாரதி மொழிபெயர்த்துள்ளார். தமிழகத்தில் பிரத்யங்கரா தேவி, நரசிம்மர், ஷிர்டி சாய்பாபா போன்ற புதிய தெய்வங்களும் அவர்களின் ஆலயங்களும் பரவலான செல்வாக்கைச் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் அதற்குப் பின்னரான உலகமயமாதல் சூழலும் சமூக மாறுதல்களும் ஆராயப்பட வேண்டியவை. இந்தியா முழுமையும் வணங்கப்படும் தெய்வங்கள் பிராந்தியத் தெய்வங்களை வேகமாக இடம்பெயர்க்கும் மாற்றங்களை அறிவதற்கு இந்த ஆய்வு நூல் தூண்டுதலைத் தரலாம்.

ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

துர்க்கையின் புதுமுகம்
என்.சண்முகலிங்கன்
தமிழில்: பக்தவத்சல பாரதி
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர்,
சென்னை-83.
தொடர்புக்கு:
044 – 24896979
விலை: ரூ.190

ஆசிரியர்