கவிதை | கிருத யுகத்தின் கவிஞன் | வ.ஐ.ச.ஜெயபாலன்


*
காவியங்கள்
பேராபத்துக்களை உதைத்து
வரமான வாளொடு நிமிர்ந்த
மாவீர்கள் பற்றியதே. ஆனாலும்,
எங்கள் காவியம் வேறு. அது,
கொரோனா கொள்ளையர் மிரள
சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொல் புதிதாய், சோதியுடன்
சிறகசைகிற எங்கள் கவிஞன்.
மனுஷ்ய புத்திரன் பற்றியது.
*
அவன் கொரோனாவின் பொறியில்
விழ்த்தப்பட்டது உண்மைதான்.
அவன் ஒரு புழுக்கூட்டில்
சிறை வைக்கப்பட்டதும் உண்மைதான்.
அதனால் என்ன இப்ப?
துரியோதனனின் பொறிக்கிடங்கில்தானே
கண்ணன் விஸ்வரூபம் எடுத்தான்.
அதுதான் நிகழ்கிறது இங்கும்.
ருசியும் வாசனையுமற்ற புழுக்கூடு அது
பட்டாம்பூச்சிச் சிறகு முளைத்து
மனுசர் தேவதைகளாகிற புழுக்கூடு அது.
*
இது இறைவனின் சூட்சிதான்.
அவன் சூட்சியாளர்களுக்கெல்லாம்
மேலான சூட்சியாளன் என
எழுதபட்டிருக்கிறதே.
*
சூரியனை உடைக்கிற பனித்துளிபோல
கொரோனாவின் கூடு அதிர
வண்ணச் சிறகுகளாக அசைகிறாய்
நீ கிருமி மனிதன் அல்ல
கிருத யுகத்தின் கவிஞன்.

*

-வ.ஐ.ச. ஜெயபாலன்

ஆசிரியர்