மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! | நகுலேசன்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
என்றபடி
மகத்தான இன்னுயிரை ஈந்து
முப்பத்தி மூன்று ஆண்டுகளானது
இடையிலே என்னென்னவோ
நடந்து முடிந்தது

அவவப்போது வசதிப்படும்போது
கலர் கலராய் பதாகைகள் கட்டி
போட்டியாய் கலர்காட்டும்
புள்ளடி அரசியல் கூட்டங்களுக்கும்
இன்று முடிவு என்றானது

எங்கள் பிள்ளைக்கு அஞ்சலிக்க
அந்நிய நீதிமன்ற தடை உத்தரவு

பேய்கள் அரசாண்டால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்
பாரதி சொல்லிப்போயும் எத்தனை காலம்

எல்லாம் வெளிச்சமானது
வார்த்தை அரசியல்…
வசதிப்படியான போராட்டம்…
இவற்றால்
ஆவது ஏதும் இல்லை
தெள்ளத் தெளிவானது

உயிர் விடும்வேளை
திலீபன் உரைத்த மொழி
ஒன்றே எங்களை விடுதலை செய்யும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

நகுலேசன்

ஆசிரியர்