வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் மட்டுமல்ல நமது நடையிலும் கவனம் வைத்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அறியலாம்.
பிறந்த குழந்தையின் முதல் நடை அழகானது. அந்த நடை வளர வளர பல்வேறு மாறுதல்கள் அடைந்து தனி அடையாயங்களை அளிக்கிறது. ஒவ்வொருவரின் நடைக்கும் தனியொரு பாணி உண்டு. சில பேர் வேகமாக நடப்பார்கள். சிலர் மெதுவாக நடப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடையை மாற்றி கொள்வர்களும் உண்டு. சிலரின் நடை ரசிக்க வைக்கும். சிலரது நடை சிரிக்க வைக்கும் சிலர் நடை வித்தியாசப்படும். இவ்வாறு நடைகள் பலவிதம்.
நடையில் என்ன இருக்கிறது என்று நாம் நினைத்துகொண்டிருக்கும் போதே எங்கோ ஒருவரின் நடக்கும் விதம் யாரோ ஒருவரின் மூலம் ரசிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கால்கள் நகரும்விதம், அதற்கோற்றாற்போல் நகரும் கைகள், காற்றில் சற்று அசையும் உடைகள், கையில் இருக்கும் பொருட்களை தாங்கி கொள்ளும் விதம், அலைமோதும் கண்கள், லாடம் கட்டியது போல் சில பார்வை, ஆண் என்றால் மிடுக்கு, பெண் என்றால் நளினம் என நடையில் பல்வேறு மொழிகள் அடங்கியிருக்கிறது.
அவரவர் நடந்து செல்லும் முறை அவர்களின் அன்றாட செயல்பாட்டை உணர்த்தும்.
நடக்கும் வேகம், ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும், செல்களை சுறுசுறுப்பாகி புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகிறது. ஒரு நாளுக்கு 5000 அடிகள் நடப்பதால் செரிமான சக்தி வலுப்பெறும் என்கிறார்கள் மருத்துவர்கள். நடக்கும் போது வெளியேறும் வியர்வையின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும் எனவும், திறந்த வெளியில் நடப்பதன் மூலம் சுவாசம் மேம்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஆரோக்கித்திற்கு முன்னுரிமை அளித்து எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சீரான அளவு உடலுழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே. வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் மட்டுமல்ல நமது நடையிலும் கவனம் வைத்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அறியலாம்.
நன்றி | மாலை மலர்