[highlight][/highlight]2ம்இணைப்பு
வீரகேசரி
ஆசிரியரின் பேனாவிலிருந்து
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கருத்து முரண்பாடு வலுத்துள்ளது. முன்னணிக்குள் இருக்கும் கட்சிகள் தனித்தனியாக தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்பட போவதாக முடிவெடுத்துள்ளன. 13வது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி உறுதியாக இருக்க ஏனைய இடதுசாரி கட்சிகளும் முஸ்லீம் காங்கிரசும் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன. இம் முரண்பாடுகளை களைந்தால் மட்டுமே அனைத்தினங்களும் நிம்மதியாக வாழ முடியும் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டால் சரி.
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிய வருகிறது.
13ல் திருத்தங்கள்– ஈ.பி.டி.பி ஆதரவளிக்காது
13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை உண்டு பண்ண முயற்சிக்கும் அரசின் செயற்பாட்டிற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது என அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் நடந்ததை அறிய சர்வதேச விசாரணை– நவநீதம்பிள்ளை
சுர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை உட்படுத்த வேண்டும் என மீண்டும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தது என்ன என்ற உண்மையை அறிவதற்கு சர்வதேச விசாரணை ஒன்று நம்பத்தகுந்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கோத்தாவின் கைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது.
அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயராஜபக்சவின் கைத்தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது. அத்துடன் மேலும் பல முக்கியமானவர்களின் கைத்தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து விசாரணை ஆரம்பம்.
பசில் இந்தியாவுக்கு மேனன் இலங்கைக்கு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் இந்தியா பயணமாகவுள்ளார். அதேவேளை இந்தியாவிலிருந்து சிவ்வசங்கர்மேனன் இலங்கை வருவார் என தெரிய வருகிறது.
தமிழ்தந்தி
ஆசிரியரின் பேனாவிலிருந்து
சர்வதேசம் இலங்கையின் அரசியல் பிரச்சினையில் தூர நோக்குடன் செயற்படும் என்பதை தற்போது வரை ஏமாற்றம் தருவதாக உள்ளது. இந்தியா தமிழர் இன பிரச்சினையை தனது வெளியுறவு கொள்கைகளின் நன்மைகளுக்கப்பால் பார்க்குமா என்பதும் சந்தேகமே? இந்நிலையில் தெற்கில் கிளர்ந்துள்ள மிதவாக போக்கு தமிழர் பிரச்சினை தீர்வில் சர்வதேச தலையீட்டை ஒருபோதும் அனமதிக்காது. இனியாவது சர்வதேசம் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தலையீட்டு முடிவொன்றைத் தருமா?
கூட்டமைப்பு பல்டி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – கஜேந்திரகுமார்
தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது முடிவுகளை திடீரென மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கஜேந்திரகுமார் தெரிவித்துக் கொண்டார். ஏனெனில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாய்வு மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட தெரிவுக்குழுவில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்கப் போவதில்லை என்ற தற்போதைய முடிவை இந்தியாவின் அழுத்தத்தினால் சில வேளைகளில் மாற்றிக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
50 வருடங்களில் சிங்களவரின் பலம்
இலங்கையில் சிங்களவர்களின் பலம் இன்னும் 50 வருடங்களில் இருக்கும் என அஸ்கிரிய மகாநாயக்க தெரிவித்துள்ளார். தூர நோக்கற்ற சிங்கள மக்களின் செயற்பாடுகளால் அவர்களின் கலாசாரம் 50 வருடங்களில் முழுமையாக அழிந்துவிடும் என தெரிவித்தார். மேலும் சிறிய தொகைக்காக தமது பரம்பரை காணிகளை மற்றைய இனங்களுக்கு விற்பதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் அதிக குற்றச் செயல்களும் பாலியல் வன்முறைகளும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுவதால் இலங்கை வரும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்குமாறும் தமத பதிவுகளை முறையாக மேற்கொள்ளுமாறும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்தள்ளது.
சிறைச்சாலை பேரூந்தில் சிறுவர்கள் இல்லை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது சிறைச்சாலை பேரூந்தில் அழைத்து வரக்கூடாது என்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்தள்ளது.
வாக்காளர் பதிவு நீடிப்பு
யுலை 5ம் திகதி வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும் என தெரியவருகின்றது.
சுடர்ஒளி
ஆசிரியரின் பேனாவிலிருந்து
பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டத்தவர்களின் தொலைபேசி அழைப்புக்களை அயல்நாடு ஒன்று ஒட்டுக்கேட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவ்வயல் நாட்டுடன் ஏற்கனவே இருக்கும் உறவு இழுபறியில் இருப்பதால் இந்நடவடிக்கை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கிறது.
தொலைபேசியை ஒட்டுக்கேட்டது றோ
பாதுகாப்பு செயலர், பாதுகாப்பு உயர்மட்டத்தினரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட செய்தி கசிந்ததை தொடர்ந்து விசாரணைகளின் போது அதன் பிண்ணனியில் இந்தியாவின் றோ இருப்பதாக தெரியவருகிறது.
13ம் தொடர்பில் இந்தியா தலையிடக்கூடாது
13வது திருத்தம் தொடர்பான நடவடிக்கையில் இந்தியா எவ்வகையிலும் தலையீட்டை மேற்கொள்ளகூடாது என வலியுறுத்தி பொதுபலசேனா மனு ஒன்றை கொடுக்கஉள்ளது. இம்மனு இந்திய தூதரிடம் வழங்கப்படவுள்ளது.
பிக்குவின் துடுப்புமட்டை தாக்குதல் குடும்பஸ்தர் பலி
காலி அக்மிமண பிரதேசத்தின் லபுதுவ விகாரையின் பிக்கு ஒருவரும் மேலும் இரு இளைஞர்களும் சேர்ந்து குடும்பஸ்தர் ஒருவரை துடுப்புமட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர்.
ரைம்ஸ் சஞ்சிகைக்கு இலங்கையில் தடை
மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் பிக்குவான விராது மற்றும் பௌத்தம் 969 என்ற அமைப்பையும் இலங்கையில் பொதுபலசேனாவுடன் ஒப்பிட்டு ரைம்ஸ் சஞ்சிகை கட்டுரை ஒன்றை வரைந்திருந்தது. அச்சஞ்சிகைக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணலாறில் புதிதாய் சிங்கள கிராமம்
ராணுவத்தினரின் குடும்பங்களை குடியேற்றி மணலாறில் ரணவிரு பியச சம்பத் நுவர என்ற கிராமம் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ளது. 52 படையினரின் குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையில் தமிழர்கள் மீது தாக்குதல்
கொழுவாமடு பகுதியில் விவசாயம் செய்யும் தமிழ் விவசாயிகள் 22பேரை நேற்று தாக்குதலுக்கு உள்ளாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வயல் நிலத்திற்கு நீர்பாச்சும் பிரச்சினை ஒன்றில் நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ் விவசாயிகளே தாக்கப்பட்டுள்ளனர்;.
1ம்இணைப்பு
மலைமுரசு
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வுகளை எவ்வாறாயினும் இலங்கை அரசு மீள எடுத்துக் கொள்ளத்தான் போகின்றது. ஆனால் அதற்கான வழியாக அத் திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாது ஒழிக்காமல் வேறு சட்டங்கள் ஊடாக இத் திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை மத்திய அரசிடம் பாரப்படுத்திவிட்டால் தானாகவே 13வது வலுவிழந்துவிடும். இந் நடவடிக்கையானது கோடொன்றைச் சிறிதாக்குவதற்கு அக் கோட்டிற்கு அருகில் மற்றொரு பெரிய கோட்டைக் கீறும் தந்திரோபாயம் தான். 13வது இல்லாமல் போவதைத் தடுப்பதற்காக தமிழரின் அரசியற் தலைமை கடுமையாகப் போராட வேண்டியிருப்பதுடன் அப் போராட்டத்துடன் நின்று விடாமல் 13வது வலுவிழந்தால் அடுத்து எதனைத் தமிழர்கள் பற்றியிருக்க வேண்டும் என்பதை இப்போது சிந்தித்துக்கொள்வது சாலச் சிறந்தது. சிந்திப்போமா?
13வது ஐ இல்லாதொழிக்கும் முயற்சியைக் கைவிடவும்
13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் முயற்சியைக அரசு கைவிட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக திருகோணமலை நகரசபை நிறைவேற்றியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் இழுபறி நீடிக்குமா?
தற்போதைய முதலமைச்சரையோ, ஆளுனரையோ அந்த பதவிகளிலிருந்து மாற்ற முடியாது என இலங்கையின் சனாதிபதி திட்டவட்டமாக அறிவித்திருப்பதால் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையில் இழுபறி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கிழக்கின் மாகாண அமைச்சர்கள் நால்வரும் ஏனைய ஆளுங்கட்சி அங்கத்தவர்களும் மே மாதம் நடைபெற்ற மாதாந்த மாகாணசபை அமர்வின் பின் ஏனைய அமர்வுகளுக்குச் சமூகமளிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருந்தனர். அதன்படி ஜுன் மாதம் 18ம் திகதிய அமர்வுகளைப் புறக்கணித்த அவர்கள் மாகாண முதல்வரையும், ஆளுனரையும் மாற்றித்தர வேண்டும் எனக் கோரியிருந்தனர். அக் கோரிக்கை தற்போது திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஜுலை மாத அமர்வுகளின் நிலை எவ்வாறிருக்கும் என எதிர்வு கூற முடியாதுள்ளது.
தேசிய வலைப்பந்தாட்ட இளையோர் அணியில் திருமலையின் அவிஷ்னி
புரூணைக்குப் பயணமாகியுள்ள தேசிய வலைப்பந்தாட்ட அணியில் திருமலையைச் சேர்ந்த பாக்கியராஸா அஸ்வினி என்ற இளைஞியும் இணைக்கப்பட்டுள்ளார். கிழக்கிலிருந்து இவ்வணியில் இடம்பிடித்துள்ள அஷ்வினியுடன், வடக்கிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமலிங்கம் வேணிஜாவும் இடம்பிடித்துள்ளார்.
கன்னியா வெண்நீரூற்றில் விகாரைக்குக் காணி
உலகப் பிரசித்தமான கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் சுமார் ஒரு ஏக்கர் காணி விகாரையொன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் காணி ஆணையாளரால் மாகாண சபைக் காணி ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கட்டளைக்கு இணங்க இக் காணி விலகம் ரஜமகா விகாராதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
கசினோக்கள் தடைசெய்யப்பட வேண்டும் – ஜம்இய்யத்துள் உலமா
நாட்டில் அதிகரித்து வரும் கசினோ சூதாட்ட நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்கள் என்பன எதிர்கால சந்ததிகளின் ஒழுக்க விழுமியங்களை பாதிக்கும் என்பதால் இவை முற்று முழுதாக தடை செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துள் உலமாசபை நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்..)