கடந்த வார ஆங்கில பத்திரிகைகள் மீதான கண்ணோட்டம்…
சண்டே டைம்ஸ் :
மக்கள்வங்கி அறும்நிலையில்:
கடன்களில் மூழ்கும் நிலையிலுள்ள மக்கள் வங்கியினைக் காப்பாற்றிக் கொள்ள அவ் வங்கியினை அரைப்பங்கு தனியார் மயமாக்குவதற்காக பங்குகளைத் தனியாருக்கோ அல்லது ஏனைய நிறுவனங்களுக்கோ விற்க வேண்டும் எனும் கதை எழுந்துள்ளது. 52 ஆண்டு கால அரச வங்கியின் நிலை இவ்வாறிருப்பதாகத் தெரிகின்றது. தனியார் மயமாக்கலை எதிர்க்கும் அவ் வங்கியின் ஊழியர்களின் எதிர்ப்பைப் பின்தள்ளிவிட்டு அச் செயலை முன்னெடுக்க வேண்டிய நிலை தோன்றியிருக்கின்றது. இந் நிலையை ஒட்டுமொத்தமாக மறுத்த வங்கியின் உயரதிகாரியொருவர் சிறுகச் சிறுக வங்கியின் மொத்த மூலதனமான 50 மில்லியன் ரூபாய்களுக்கும் மேலதிகமாக அரசு பணத்தை வங்கிக்குட் செலுத்துவதாகத் தெரிவித்தார். 2004ம் ஆண்டு தொடக்கம் 08ம் ஆண்டு வரை சுமார் 7.1 பில்லியன் ரூபாய்களை அரசு வங்கிக்குட் செலுத்தியுள்ளது என்றார். என்றாலும் சட்ட வரைஞர் ஒருவர் மக்கள் வங்கிச் சட்டமான 1961ம் ஆண்டின் 29ம் இலக்கச் சட்டத்தை மாற்றியமைக்கும் உத்தேசச் சட்டத்தை வரைந்து வருவதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது.
வெலிவேரியவில் எழுந்து நிற்கும் மக்கள்:
வெலிவேரியவிலுள்ள கையுறை உற்பத்திச்சாலையை மீளத் திறக்கும் முயற்சியை மக்கள் போராட்டத்தால் கைவிட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்த மக்கள் அப் பிரதேசத்தின் விகாராதிபதியின் தலைமையில் ஆலையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பெண்கள் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந் நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பின் நிமித்தம் நூற்றுக் கணக்கில் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஆயினும் அவ்வாலையைத் தற்காலிகமாகத் திறக்கும் அனுமதியை சனாதிபதியே வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது…… சனநாயகம் சாகின்றது….
போரின் பின்னர் கிடைத்த அற்புதமான வாய்ப்பைக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ள அரசின் போக்கினால் சனநாயகம் செத்துக் கொண்டு இருக்கின்றது என்பதுடன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை நாய்களின் திருமணம் – குரைப்பும் கடிப்பும்:
காவல்துறை நாய்களுக்குச் சிங்களக் கலாசார முறையில் திருமணஞ் செய்து வைத்ததால் எழுந்துள்ள சர்ச்சைகள் முடிந்தபாடில்லை. இன்னமும் அதிகமாகக் குரைப்புக்களும் கடிப்புக்களும் அரங்கேறி வருகின்றன. கண்டிய முறைப்படி நடந்த திருமணத்தின் உண்மை நிலையைக் கண்டறிய சிரேட்ட காவல்துறை மா அதிபர் ஒருவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளார். கலாசார அமைச்சரின் வேண்டுகோளை ஏற்ற காவல்துறை மா அதிபர் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சிரேட்ட காவல்துறை மா அதிபரான காமினி நவரட்ணவை நியமனஞ் செய்துள்ளார். காவல்துறையினர் மன்னிப்பைக் கோரியுள்ள போதிலும் அம் மன்னிப்பு கணக்கெடுக்கப்படவில்லை
சண்டே லீடர் :
கும்பிடுவதற்கு இனிப் புதிதாக இடம் தர மாட்டேன்:
கோட்டை நகர சபைக்குட்படும் எல்லைகளுக்குள் புதிதாக இனி எந்தவொரு வணக்கத்தலத்தையும் உருவாக்க அனுமதிக்கப் போவதில்லை என கோட்டை நகர மேயர் அறிவித்தல் விட்டுள்ளார். நகர திட்டமிடல் வடிவத்திற்கு ஏற்ப நகரம் இருப்பதை உறுதிப்படுத்தவே இவ் அறிவித்தல் விடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார். அத்துடன் தவறனைகளும், இறைச்சிக் கூடங்களையும் புதிதாகத் திறப்பதற்கான ஒழுங்குவிதிகளையும தாம் வினியோகித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மு.கா விலக ஐ.ம.சு.மு வளர்கின்றது:
மாகாணசபைத் தேர்தல்களில் அரசிற்க ஆதரவளிப்பதில்லை என்ற முடிவை மு.கா தலைமைப் பீடம் மேற் கொண்டுள்ளது. அத்துடன் மு.காவின் தலைமைப் பீடத்துடன் பேசாமல் தாமாகவே இலங்கை சுதந்திரக் கட்சிக்குத் தாவி அக்கட்சியின் வேட்பாளர்களாக மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஐந்து மு.கா உறுப்பினர்களதும் அங்கத்துவத்தை இல்லாதொழிக்கவும் மு.காவின் உயர் பீடம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மு.காவின் செயலர் தெரிவித்துள்ளார்.
காணாமற் போனோர் தொடர்பாக விசாரணைகளைத் துவக்குக:
வலுக்கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்க வேண்டும் என அம்னஸ்டி இன்ரநெசனல் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு காணாமற் போனோரில் அறிக்கையிடப்பட்டவர்கள் தொகை 1980ம் ஆண்டு முதல் சுமார் 12,000 எனவும் உண்மைத் தொகையாக 1994ம் ஆண்டுவரை சுமார் 30,000 பேர் இருந்திருக்கலாம் எனவும் அதன் பின் வரும் ஆண்டுகளில் மேலும் பல ஆயிரங்களை இத் தொகையுடன் கூட்ட வேண்டும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது. உலகில் கட்டாயப் படுத்தப்பட்டுக் காணாமற்போனோரின் பட்டியலில் இலங்கை ஈராக்கிற்கு அடுத்தபடியாக இருப்பதாக அவ்வமைப்பு குற்றங்கூறியுள்ளது. ஜுலை 26, 2013ல் அரசு காணாமற்போனோர் பற்றி அறிய சனாதிபதி ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
*************************************************************************
சுடரொளி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு முன்னொரு காலத்திலிருந்தது போல மீளத் துளிர்க்க வேண்டும். அதற்கு பொது மக்கள் நம்பத்தகுந்த வகையில் காவல்துறை செயற்பட வேண்டும். முன்னொரு காலத்தில் காவல்துறையினர் தமது பிரதேசங்களில் குற்றச்செயல்கள் நடைபெற இடமளிக்காது நடந்தார்கள். தற்பொது அத் துறை இதனை இழந்திருப்பது மக்களுக்கான ஒரு சாபக்கேடே!
சர்வாதிகாரப் பாதையில் இலங்கை:
போரின் முடிவு கொடுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சனநாயகத்தை உருவாக்குவதற்குப் பதிலாக அரசு சர்வாதிகாரப் போக்கில் செல்வது கவலையளிக்கின்றது என நவி பிள்ளை அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஜெனிவா திரும்பினார் ஆணையாளர்:
ஏழு நாட்கள் உத்தியோகபூர்வப் பயணத்தை முடித்துக்கொண்டு பிள்ளை அவர்கள் 31.08 காலை ஜெனிவா திரும்பியுள்ளார்.
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுக – அரசிடம் பிள்ளை:
இராணுவத்தின் ஒரு சில முகாம்கள் தேவைப்படும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இருப்பது வேதனையளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையில் உறுதி – அஞ்சும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்:
இலங்கையின் மீது அனைத்துலக விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நவநீதம்பிள்ளை நிச்சயம் முன்வைப்பார் என தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் கூறியுள்ளது.
மேற்குலகின் அரசியல்வாதிகளுக்கு புலிகள் லஞ்சம் – மகிந்த:
இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேற்குலகின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு புலிகளின் வலையமைப்புக்கள் ஊடாக லஞ்சப்பணம் பெருமளவில் கிடைப்பதாக இலங்கை சனாதிபதி கண்டுபிடித்துள்ளார். இங்கைக்கு எதிராக மனித உரிமைப் பிரச்சனைகளை அவ்வமைப்புக்கள் முன்வைத்துள்ளன என்றும் தெரிவித்தார்.
சுதந்திரப் பயணம் ஓமந்தையில்:
தெற்கு வடக்குப் பாதையில் நிறுவப்பட்டிருந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் பணிகள் 31ம் திகதி முதல் நிறுத்தப்படுகின்றது என வன்னிக் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
சிறுவன் சடலமாக மீட்பு:
மாத்தளை உருவெல பிரதேசத்தில் காணாமற் போன சிறுவனின் சடலம் நான்கு நாட்களின் பின் நேற்றுக் கிடைத்துள்ளது. குளிக்கச் சென்ற தனது மூத்த சகோதரியைத் தேடிச் சென்ற இச் சிறுவன் கடந்த 28ம் திகதி முதல் காணாமற் போயிருந்தார்.
வீரகேசரி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
மாகாணசபைத் தேர்தல்களிற்குக் கட்டியம் கூறும் வன்முறைகள் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாகாணங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் முதலாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வடமாகாணத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்திருப்பது அங்கு துப்பாக்கிக் கலாசாரம் இன்னும் காணப்படுகின்றது என்பதை வெளிக்காட்டுகின்றதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களிடையே நிகழ்ந்த இச் சூட்டுச் சம்பவத்தால் யாழில் ஆயுததாரிகளாக ஆளும் கட்சியினர் செயற்படுவது தெரிய வந்துள்ளது. அத் தருணம் நவிபிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததது அரசிற்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது. சுதந்திரமானதும் நிம்மதியானதுமான தேர்தலை வடக்கில் நடாத்தி முடிக்கும் பொறுப்பை அரசு உணர வேண்டும்.
இலங்கை – சர்வாதிகாரப் போக்கில் பயணிக்கும் வெளிப்பாடுகள் தெரிகின்றன
பாதிக்கப்பட்ட மக்களிடம் உளரீதியான முன்னேற்றம் காணப்படவில்லை
சர்வதேசக் குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணையில் உண்மையில்லை.
போர்க்குற்றம் – உள்ளக விசாரணையின்றேல் சர்வதேச விசாரணை தேவை
பள்ளிவாயல், தேவாலயத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தேவை
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது
என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் விமர்சனம் –சனாதிபதி கவலை:
பிள்ளை அவர்களின் வருகை தொடர்பாக அமைச்சர்களின் விமர்சனங்கள் தமக்குக் கவலையளிப்பதாகவும் அதற்காகத் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் சனாதிபதி, பிள்ளை அவர்களிடம் தெரிவித்ததாகப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலைத் தாருங்கள் பரிசீலிப்போம் – கோத்தா:
வடக்கில் வகை தொகையின்றிக் கைதாகிக் காணமல் போனோரின் பெயர் விபரங்களைச் சமர்ப்பித்தால் அதனைப் பரிசீலக்க முடியும் என பாதுகாப்புச் செயலர் நவிபிள்ளையிடம் தெரிவித்தார். பாதுகாப்புப் பிரிவினரைக் குற்றஞ்சாட்டுவோர் இதனைச் செய்ய முன்வரவேண்டுமாம். 40,000 பேர் காணமற் போகவில்லையாம்.
பிரசாரத்திற்குப் படை தடை:
கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் படையினர் தடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைப் படையினர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிந்தது– பிரச்சினைகள் முடியவில்லை:
யுத்தம் முடிவடைந்த பின்னரும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. அத்துடன் நாட்டின் சனநாயகம் கேள்விக்குறியாகிப் போயுள்ளது என ஐதேக குற்றஞ்சாட்டியுள்ளது. அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐநா பக்கச் சார்பாகச் செயற்படவில்லை – நவிபிள்ளை:
இலங்கை விடயத்தில் ஐநா பக்கச் சார்பாகச் செயற்படவில்லை. அத்துடன் ஐநா விற்குள் புலிகளும் இல்லை. ஐநாவானது இலங்கையின் உறுதிப்பாடு மற்றும் பொறுப்புக் கூறும் விடயங்கள் தொடர்பாகவே செயற்பட்டு வருகின்றது என கொழும்பில் செவ்வியளித்த பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
250 கிலோ – 250 கோடி:
பாகிஸ்தானிலிருந்த கடத்தி வரப்பட்ட ஹெரொயினின் பெறுமதி 250 கோடிக்கு மேல் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இப் போதைப்பொருள் சுத்தமான, கலப்படமற்றது எனவும் தெரிவித்தனர்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)