ஞாயிறு 07/07/2013 : இலங்கையின் 3டி – இந்தியா வரவேற்பு (2ம்இணைப்பு)ஞாயிறு 06/07/2013 :இலங்கையின் 3டி – இந்தியா வரவேற்பு (2ம்இணைப்பு)

சுடர்ஒளி

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பசில் நாடு திரும்பியுள்ளார். அவர் இலங்கையின் நிலைமைகளை விளக்கிக் கூறியுள்ளார். இலங்கை 13ல் கைவைக்கக் கூடாது என்று இந்தியா அறிவுறுத்தியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிற்கு எதிராகப் பொதுவான போக்கில் செயற்படும் இலங்கையை அப்படியொன்றும் அமைதியாக நட்புடன் இந்தியா கையாண்டிருக்க வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழருக்காக 13 பிளஸ் எனக் குரல் கொடுக்கப் போய் இந்தியா சர்வதேச மட்டத்தில் மைனஸ் ஆகிவிடாமலிருந்தால் சரி.

இலங்கையின் 3டி – இந்தியா வரவேற்பு

இந்தியா சென்று திரும்பிய இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச இலங்கையின் 3 டி திட்டத்திற்கு இந்தியா பெரும் ஆதரவையும் வரவேற்பையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 3டி என்பது அபிவிருத்தி, இராணுவக் குறைப்பு, மற்றும் சனனாயகத்தன்மை என்பவை ஆகும்.

வடமாகாணசபைத் தேர்தல் – சர்வதேசக் கண்காணிப்பில்

வடமாகாண சபைத் தேர்தலுக்கு சார்க் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தும் எண்ணத்துடன் தேர்தல்; திணைக்களம் செயற்பட்டு வருகின்றது. அத்துடன் வடமாகாண சபைத் தேர்தல் கண்காணிப்புக்கு விசேட பிரிவொன்றும் அங்கு நிறுவப்படவுள்ளது.

நல்லிணக்க அனுபவப் பகிர்வு தென்னாபிரிக்காவுடன்

இலங்கையின் குழுவொன்று நல்லிணக்க அபிவிருத்தி விடயங்களைத் தெரிந்துகொள்வதற்காக தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கு தென்னாபிரிக்கா ஆதரவளிக்கத் தீர்மானித்தமையே இப் பயணத்திற்கான காரணமாகவுள்ளது.

கைவிடப்படும் பெற்றோர்கள்

நாட்டில் கைவிடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டி நிற்கின்றன. இதனால் பெருமளவு சீவனாம்சக் கோரிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருப்பதும் தெரியவருகின்றது.

வடமாகாணசபைத் தேர்தல் நாட்காட்டி

வேட்புமனுத்தாக்கல் திகதி எதிர்வரும் 10 அல்லது 11ல் அறிவிக்கப்படும்

தேர்தல்கள் திணைக்களத்தில் முக்கிய கூட்டம் 12ம் திகதி

வேட்புமனுத் தாக்கல் காலப்பகுதி ஜுலை 24 தொடக்கம் ஒகத்து 07 வரை.

வீரகேசரி

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

பொருளாதாரச் சுமையால் பெருமூச்செறியும் மக்கள்:

யுத்தத்தின் பின்னர் பொருளாதாரச் சுமை குறைவடையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்குக் கிடைத்ததென்னவோ தலை கீழான முடிவுதான்.  யுத்தத்தின் போது அதிகரித்திருந்த விலைகளுக்கு யுத்தம் காரணமாகிப் போனது. ஆனால் அதன் பின்னரும் விலைவாசி அதிகரிப்பால் அல்லலுறும் மக்கள் அவற்றிற்கு எதிராகக் குரலெழுப்பமுடியாது பெருமூச்செறிகின்றனர். நாட்டின் விவசாயத் துறையைக் கட்டியெழுப்பி  வாழ்வாதாரத்தை அதிகரிக்க அரசு துரிதமாகச் செயற்படல் வேண்டும்.

 

மூன்று மாகாணங்களுக்கு ஒரே நாளில் தேர்தல்

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் செப்டெம்பர் கடைசி வாரத்தில் நிகழும். இத் தேர்தல்களைக் கண்காணிக்க பொதுநலவாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் வருகை?

 

இந்தியப் பிரதமரின் செய்தியுடன் சிவ்சங்கர் மேனன்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய செய்தியைத் தாங்கியபடி சிவ்சங்கர் மேனன் இலங்கை வரவுள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலில் ..சு.மு யின் பிரதம வேட்பாளர் யார்?

தமது முன்னணியின் பிரதம வேட்பாளராக ஐ.ம.சு.மு யின் அங்கத்தவர்களை இறக்கப் போவதில்லை என அம் முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த் தெரிவித்துள்ளார். ஆனால் யாரைத் தலைமை வேட்பாளராகக் களம் இறக்குவது என்பது தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

மாணவர்களைக் கொன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது

திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்களைச் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் 12 அதிரடிப்படையினர் கைதாகியுள்ளனர். அவர்கள் இரகசியக் காவல்துறையினரால் கைதாகி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது ஜுலை 18 வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

அரசு பொறுப்பிலிருந்து விலகிச் செல்லக்கூடாது – குர்ஷித் வலியுறுத்தல்

13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் செயலில் ஈடுபடாமல் அத்திருத்தத்திற்கு அப்பால் சென்றும் தீர்வொன்றை அரசு முன்வைக்க வேண்டும் என குர்ஷித் பசிலிடன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தமிழர் பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடியவரே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும்.

பல்சார் திறமைகள் கொண்ட ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என மன்னார் ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்த்தந்தி

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

தமிழ் அரசியற் தலைமைகள் ஒன்றுபடல் வேண்டும்:

தமிழ் அரசியற் தலைமைகள் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுதலே காலத்தின் கட்டாயமாகும். தமிழ் பேசும் மக்களின் அவல வாழ்வுக்குக் காரணமான இந்திய அரசை நம்பிச் செயற்படல் நல்லதல்ல. எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டுச் செயற்படுவது கட்டாயமானதாகும்.

 

பொதுநலவாயமாநாடு இலங்கையில் நடக்காது விட்டால் நன்று என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்

இம்மாநாடு தொடாபாக பல நாடுகளில் பல அதிருப்திகள் காணப்படுகின்றன. பொதுநலவாய அங்கத்துவம் பெற்ற நாடான இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தினால் அதனடிப்படையில் இம் மாநாட்டை வேறு எங்காவது நடாத்துவது நலம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

தீர்வை முன்வைத்தால் தான் யுத்தத்திற்கு உதவி செய்வோம் – அமைச்சர் திஸ்ஸ விதாரண 

யுத்தகாலத்தில் அரசால் நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்மொழியப்பட்ட தீர்வுகளை முன்வைத்தால் மட்டுமே யுத்தத்திற்கு உதவி செய்வதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல கோரியிருந்தன என சனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக சிரேஷ்ட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

 

அரசு தப்பிக்கொள்ள மீண்டும் முன்னெடுப்பது இனவாதத்தையே – நா. விஜித ஹேரத்

தற்போது நாடளாவிய அடிப்படையில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளைச் சமாளிக்கவே இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என நா.உ விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வெளிநாட்டுப் பிரதி நிதியாக இப்ராஹிம்.

இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் தீர்வொன்றைக் கட்டியெழுப்புவதற்காக தென்னாபிரிக்க வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் இப்ராஹிமை நியமிக்கலாமா? என அரசு ஆலோசித்து வருகின்றது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான சர்வதேச முகவராக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்தவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகும். அவ்வாறானதொரு நியமனமாகவே இப்ராஹிமின் நியமனமும் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

தங்கத்தில் விலை வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததால் இலங்கைச் சந்தையில் அதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் தங்க அடைவு பிடிப்பவர்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 

வெளிநாட்டு அமைப்புக்களே உளவுபார்க்க முயற்சிக்கின்றன – கோட்டபாய

கையடக்கத் தொலைபேசிகளை செவிமடுக்கும் இயலுமையை சில வெளிநாட்டுத் தூதரகங்கள் கொண்டுள்ளன எனத் தெரிவித்த கோட்டபாய தனது கையடக்க தெலைபேசியைப் பாவிக்கும் போது அலைவரிசையின் செறிவு மாத்திரிமின்றி அழைப்புக்களின் நிலைமையும் குறைவடைவதாக தெரிவித்துள்ளார்.

 

600 இலங்கையர் நிர்கதி

சவுதியில் வேலை தேடிச் சென்ற நிலையில் இன்னல் பலவற்றுக்குள்ளான சுமார் 600 பேர் நிர்க்கதியாக தமாமிலுள்ள இலங்கையின் குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்…)

 

ஆசிரியர்