ஞாயிறு 28/07/2013 : தபால்மூல வாக்களிப்பில் கடுமையான மோசடி – ஸ்ரீதரன் எம்பிஞாயிறு 28/07/2013 : தபால்மூல வாக்களிப்பில் கடுமையான மோசடி – ஸ்ரீதரன் எம்பி

தினக்குரல்

ஆசிரியரின் பேனாவிலிருந்து:
ஐக்கிய இலங்கைக்குள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவ்வாறு மன்மோகன்சிங் சொல்வது முதல் தடவையல்ல. என்றாலும் இலங்கை 13வது திருத்தத்தை வெட்டிக் குறைக்கும் அரசமுயற்சி பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு வரை பின்போடப்பட்டுள்ளது. அதற்கு இந்திய அழுத்தமே காரணம். இம் மாநாட்டுக்கு இந்திய ஆதரவு தேவை அதனாலேயே இலங்கை இத் திட்டத்தைப் பின் போட்டுள்ளது என்பதை இந்தியா புரிந்து கொண்டால் சரி.

பொது மக்களைப் பாதுகாக்க அரசு தவறியுள்ளது – அமெரிக்கா கண்டுபிடிப்பு:
அமெரிக்க அறிக்கையொன்று வன்னியில் இறுதிப் போர் நடந்த போது இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேசங்களினதும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வாவணத்தை அமெரிக்க முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமடலின் அல்பிறைட், சூடானுக்கான அமெரிக்க சனாதிபதியின் முன்னாள் தூதுவர் றிச்சட் வில்லியம்ஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பில் கடுமையான மோசடி – ஸ்ரீதரன் எம்பி:
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தபால்மூல வாக்களிப்பில் மோசடி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீதரன் எம்பி தெரிவிப்பு. சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிடம் வாக்குச் சீட்டுக்களைக் கொடுத்து தாம் சொல்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு சிவில் பாதுகாப்புப் படையில் சுமார் 5000 பேர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசிய முகாமிலிருந்து 3 இலங்கையர் மாயம்:
66பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தோனேசிய முகாமிலிருந்து 6 பேர் தப்பியோடியுள்ளனர். இவர்களுள் மூவர் இலங்கையர். அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களான இவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மட்டு. விகாராதிபதி பெரும் அட்டகாசம்:
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் காணிச் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று நேற்று மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நடந்தது. அங்கு திடீரென நுழைந்த மங்களராம விகாராதிபதி தேசிய சமாதானப் பேரவை உறுப்பினர்களைத் தாக்கி மண்டபத்தின் பிரதான வாயிலை மூடித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். காவல்துறையினர் வந்து நிலைமையைச் சுமுகமாக்கினர்.

தெரிவுக்குழுவுக்கு ‘டாடா’ சம்பிக்க – விமல்:
13வது திருத்தம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு நேற்று கூடிய போதும் முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேச முடியாது போனதால் கடுப்பாகிய விமலும் சம்பிக்கவும் தெரிவுக்குழுவை விட்டு விலகப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

பருத்தித்துறையில் நகரிலிருந்து துறைமுகம்வரை செல்லும் சுரங்கம் கண்டுபிடிப்பு:
பருத்தித்துறை நகரில் பேரூந்துத் தரிப்பிடத்தைத் திருத்தும் பணிகளை மேற்கொண்ட போது அங்கிருந்து துறைமுகம்வரை செல்லும் சுரங்கப்பாதையொன்றைத் திருத்துனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இச் சுரங்கம் புலிகளால் அமைக்கப்பட்டதாகவே பிரதேசவாதிகள் கருதுகின்றனர்.

வீரகேசரி

ஆசிரியரின் பேனாவிலிருந்து:
அவுஸ்திரேலியா நோக்கிய ஆபத்துப் பயணம் பல உயிர்களை காவுகொள்கின்றது. ஆஸியில் நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையிலேயே இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனாலும் ஆஸியின் பிரதமர் ‘சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களை பப்புவா நியுகினியா என்னும் வறிய நாட்டிலேயே குடியேற்றுவோம்’ என அறிவித்துள்ளார். அவ்வாறு வருபவர்களிலும் உண்மையான அகதி அந்தஸ்த்து உடையவர்களுக்கே இவ்வாறு பப்புவா நியுகினியாவில் இருக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்றும் தெரிய வருகின்றது. ஏனையோர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர். எனவே போலி ஆட்கடத்தல்காரரின் வார்த்தைகளை நம்பி பணத்தையும் உயிரையும் விரயமாக்காமல் இருப்பது நலம்.

தமிழருக்காதரவாக ஆர்ப்பாட்டம் – தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 08ல்:
டெசோ இயக்கமானது ‘தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை’ ஆகஸ்ட் 08ம் திகதி நடத்தவுள்ளது. 13வது திருத்தம் இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக அமையாது என்பதையும் இவ் ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக கருணாநிதி அமைப்பினர் கூறியுள்ளனர்.

விக்கியை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை – சம்பந்தன் காட்டம்:
வடமாகாணசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகக் களம் இறக்கியுள்ள விக்கியை விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதையில்லை என சம்பந்தன் தெரிவித்துள்ளார். பஷில் ராசபக்சவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். விக்கி வடக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழருக்கு ஏற்ற தலைவர் எனப் புகழாரமும் சூட்டியுள்ளார்.

இந்தோனேசியப் படகு விபத்தில் 4 பெண்களின் சடலங்கள் மிதந்துள்ளன:
ஜாவாத் தீவுகளுக்கு அருகில் கடலில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில் பயணம் செய்த மேலும் நான்கு பெண்களின் உடலங்கள் கடலில் மிதந்துள்ளன. இதன் படி இவ் விபத்தில் மரணமானவர்களின் தொகை தற்போது வரை 15 ஆக உயர்ந்துள்ளது.

பிரித்தானியக் கிளை சாதகமான கருத்தை வெளியிட்டது:
இலங்கையில் பொது நலவாய அமைப்பின் தலைவர்கள் மாநாட்டை நடாத்தும் சாதக நிலைமைகள் தென்படுவதாக இலங்கைக்கான பணத்தை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பொதுநலவாய அமைப்புக்களின் பிரித்தானியக் கிளையின் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் தனித்துப் போட்டி – மு.கா தீர்மானம்:
வடமாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான முடிவை மு.காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. அரசுடன் இணைந்து போட்டியிடும் முயற்சியைக் கடைசிவரை முயன்றும் முடியாமல் போனதாலேயே தனித்துப் போட்டியிடும் முடிவை மு.கா எடுத்துள்ளது.

வடக்கில் மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்:
பயிர்ச்செய்கைக்கான காணி, வீட்டுக்காணி போன்றவற்றுடன் வீடுகளை இராணுவத்தைக் கொண்டு நிர்மானித்து வடக்கில் மிக வேகமாக 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்தையும் கணக்கெடுக்காமல் பதவியா, பராக்கிரமபுர, ஹொரவப்பொத்தான ஆகிய பிரதேசங்களின் எல்லைகளில் இக் குடியேற்றம் நிகழ்வதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

ஆசிரியர்