சுடர்ஒளி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் வடக்கில் சுமார் 35வீத வைத்தியருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இப்புள்ளி விபரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக தெரிகின்றது. அதனால் தவிர்க்கமுடியாத சந்தேகமாக அரசு வடக்கில் பாராமுகமாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது. தேர்தல்கால வாக்குறுதிகள் காற்றில் பறப்பது இருக்க வன்னி மக்களுக்கு உளப்பூர்வமாகச் சேவையாற்ற அரசும், அரசின் கூஜாத்தூக்கிகளுக்கும் மனம் வரவேண்டும். அது சாத்தியமா? என்பதை காலம் தான் பதிலளிக்க வேண்டும்.
தமிழரிடமும் பொது மன்னிப்புக் கோருமா அரசு?
வெலிவேரியவில் கொல்லப்பட்ட மூவருக்காககவும் பொது மன்னிப்புக் கோரியுள்ள அரசு வடக்கில் கொல்லப்பட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்காக இதுவரை பொது மன்னிப்பு கோரவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய மக்களிடம் பஸில் மன்னிப்பு:
கம்பஹா மாவட்டத் தலைவர் என்ற முறையில் வெலிவேரிய தாக்குதலுக்கும் அத்தாக்குதலின் காரணமாகக் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்குமாக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன் என அமைச்சர் பஸில் ராசபக்ச தெரிவித்துள்ளார்.
பால்விலை எகிறாது!!
பால்மாவின் விலைகளில் எக்காரணம் கொண்டும் அதிகரிப்பு ஏற்படாது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பால்மாக் கம்பனிகளால் விலை அதிகரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளைச் சபை நிராகரித்து விட்டதாகவும் அறிவித்துள்ளது.
புலித்தலைவர் வீட்டில் புதையல்
மட்டக்களப்பு மாவட்டப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கௌசல்யனின் முகாம் அமைந்திருந்த பிரதேசத்தில் புதையல் தோண்டிய எண்மர் கைதாகியுள்ளனர்.
வவுனியாப் பெண் லண்டனில் கொலை
பெண்குழந்தையொன்றின் தாயான மயூரதி குணராசா என்பவர் கடந்த 6ம் திகதி லண்டனில் வைத்துக் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதியின் எச்சரிக்கை
இராணுவம் தனது கடமைகளுக்கு அப்பால் செய்யும் எவற்றையும் தாம் சகித்துக்கொள்ளப் போவதில்லை என புதிய இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். படையினர் கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கற்பிட்டி வீதிவிபத்தில் ஒருவர் காலி
கப் ரக வாகனமொன்றில் மோதுண்ட மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் அவ்விடத்திலேயே பலியாகியுள்ளார். கற்பிட்டி வீதியின் நரக்கலி பகுதியில் நடந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கெப் வாகனம் தப்பியோடியுள்ளது.
வெலிவேரிய தாக்குதலுக்கு சுயாதீன விசாரணை தேவை
வெலிவேரிய தாக்குதலுக்கு சுயாதீன விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டுள்ளது. அத்துடன் தவறான தகவல்களை அரசு வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவ் அறிக்கை கோரியுள்ளது.
வீரகேசரி
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
தண்ணீர் கேட்ட மக்களுக்கு அரசு கொடுத்த பரிசு அரசை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தலைகுனியச் செய்துள்ளது. இத்தாக்குதலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மறைந்திருந்த கும்பலொன்று மேற்கொண்ட பெற்றோல் குண்டு, துப்பாக்கிச்சூடு,கல்வீச்சு போன்றனவே காரணம் என்ற அமைச்சர் ஒருவரின் கூற்று செல்லாக்காசாகி விட்டது. வெலிவேரியத் தாக்குதல் போலவே வன்னியிலும் நடந்திருக்கும் என மக்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர். இவ்வாறான சம்பவங்களால் நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியே ஏற்படும்.
வெலிவேரியவுக்கு மன்னிப்பு –வெள்ளை முள்ளிவாய்க்காலுக்கு மௌனம் – த.தே.கூ சாடல்
வெலிவேரியவில் கொல்லப்பட்ட மூன்று பொது மக்களுக்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்ட பஸில் ராசபக்ச வடக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு அமைதிகாப்பது அவரது இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என சுரேஸ் எம்.பி சாடியுள்ளார்.
பொது பல சேனாவின் தாக்குதலில் நவநீதம்பிள்ளை
பிரவினைவாதத்தைத் தோற்றுவிக்க முயற்சிப்பவராகவே நவநீதம்பிள்ளை உள்ளார் என பொது பல சேனாவின் பொதுச் செயலர் தெரிவித்துள்ளார். பிள்ளை உண்மைக்குப்புறம்பான விடயங்களை உலகிற்கு எடுத்துக்கூறி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் அவரை, ஒரு நடுநிலைவாதியாகக் கொள்ள முடியாது என மேலும் செயலர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியப் பங்குபற்றலை தவிர்க்க முனையும் தமிழ் அமைப்புக்கள்
பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவதைத் தவிர்க்கும் முனைப்புடன் கடுமையான அழுத்தங்களை பிரித்தானியத் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய அரசின் மீது மேற்கொண்டுள்ளன. இதனை முன்வைத்துப் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை அங்கு நிகழ்த்த அவ்வமைப்புக்கள் தயாராகி வருகின்றன.
இலங்கைத் தமிழர் அகில உலக ரோட்டரிக்கழகத் தலைவராகத் தெரிவு
2014-15ம் நிதியாண்டுக்கான உரக ரோட்டரிக்கழகத் தலைவராக இலங்கை ரோட்டறிக்கழக முன்நாள் ஆளுனரும், கொழும்பு ரோட்டரிக்கழக முன்னால் தலைவருமான கே.ஆர். இரவிந்திரன் தெரிவாகியுள்ளார்.
வெலிவேரியக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக – அமெரிக்கா
வெலிவேரியவில் குடிநீருக்காக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மெற்கொல்லப்பட்ட கொலைகள் தொடர்பாக விசாரணைகளைத் துரிதப்படுத்தி கொல்லப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இக் கோரிக்கையில் இலேசான விசனத்தையும் அமெரிக்கா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவப் பெண்கள் கடலில் போராட்டம்
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவரை விடுவிக்கக்கோரி நாகர்பட்டினத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் கறுப்புக்கொடியேந்திக் கடலில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – சுலோகம் – “அரச பயங்கரவாதத்தை எதிர்ப்போம்”
14ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொது ஆர்ப்பாட்டமொன்றில் எதிர்கட்சிகள் இணைந்து அரச பயங்கரவாதத்தை எதிர்ப்போம் என்ற சுலோகத்துடன் ஆர்ப்பாட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளன.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)