வீரகேசரி
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
வடமாகாணசபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தல்கள் நெருங்க, நெருங்க வன்முறைகள் அதிகரிப்பதால் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவடைவதுடன் வாக்களிப்பவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை தோன்றுவது கடந்த கால அனுபவங்கள். அத்துடன் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தேர்தல் காலத்தின் போதே கொல்லப்பட்டிருப்பதும் பதிவுகள். முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கில் நிம்மதியான தேர்தலே நடைபெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
நவி.பிள்ளையிடம் சர்வதேச விசாரணைக்குக் கோருவோம்:
இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணைகளை நடத்த அம்மையார் முயற்சிக்க வேண்டும் என்ற விடயத்தையே த.தே.கூ வலியுறுத்தும் என அதன் சிரேட்ட உறுப்பனரான மாவை தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக தம்மால் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்றையும் அம்மையாரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
இந்தியாவைப் பொதுநல மாநாட்டில் கலந்து கொள்ளத் தடும்கும் முயற்சிகளில் தமிழ்நாடு:
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எடுத்திருக்கும் முடிவைக் கண்டித்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் ஓர் கட்டமாக கருணாநிதியின் தலைமையில் ரயில் மறியல் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மாநாடு நடைபெறும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடிகளை பறக்கவிடுமாறும் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
ஷிராணி சந்திப்பார் – பொன்சேகா சந்திக்க அனுமதிக்க வேண்டும்:
இலங்கை வரும் நவநீதம்பிள்ளையை பதவி பறிக்கப்பட்ட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா சந்திக்கவுள்ளார். அதேவேளை முன்னாள் இராணுவத் தளபதியும் இன்னாள் அரசியல்வாதியுமான சரத் பொன்சேகாவை அவர் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என ஐ.தே.க வேண்டுகோள் விடுத்துள்ளது.
நவிபிள்ளை அறிக்கை தயாரிப்பதற்காகவே வருகை தருகின்றார்:
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமைச் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அறிக்கையொன்றைத் தயாரித்து முன்னளிக்க வேண்டிய தேவைப்பாடு நவிபிள்ளைக்கு இருப்பதால் அதற்கான தகவல்களைத் திரட்டவே அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைவர்களைச் சந்திப்பாரா? ரணில்:
இந்தியாவிற்குத்தனிப்பட்ட பயணமொன்றை மெற்கொள்ளவுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் இந்திய அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காக அனுமதிகளைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாயத்திலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்:
பொதுநலவாய நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என ம.தி..மு.க மாணவர் அணி தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
தபால் கட்டணங்கள் 100 வீதம் உயர்வு:
அடுத்துவரும் இருவாரங்களுக்குள் தபால் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவினை தபால் தெலைத்தொடர்புகள் அமைச்சும், தபால் திணைக்களமும் எடுத்துள்ளன.
ஜெயலலிதா அரசியல் ஆக்கிரமிப்புச் செய்கின்றார் – ஜாதிக ஹெல உறுமய:
தொடர்ச்சியாக தமிழக முதல்வர் இலங்கை தொடர்பாகச் பேசி வருவது இலங்கையின் மீதான அரசியல் ஆக்கிரமிப்பாகப் பரிணமிக்கலாம் என ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
சுடர்ஒளி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
தமிழரின் எதிர்காலம் மனித நேயமுள்ள குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தான் தங்கியுள்ளது. சிறுவர்களின் மனநிலையில் நல்ல கருத்துக்களை விதைப்பதும் சிறுவர்களின் மனங்களில் நல்ல பண்புகளை ஊட்டுவதும் இன்றியமையாதது. எங்கள் எதிர்காலச் சந்ததியினரை நல்ல சந்ததியாக உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரிய சமூகத்தையும், பெற்றோரையுமே சார்ந்தது. இதனை வளர்ந்தோர்கள் கவனத்திற்கொளவாராக….
காணமற்போனோரின் உறவினரையும் நவி பிள்ளை யாழில் சந்திப்பு:
எதிர்வரும் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரின் உறவினர்களை நவி பிள்ளை சந்திப்பார் என தெரியவருகின்றது. இச் சந்திப்பின் போது மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஸ்ரீதுங்க ஜெயசூரிய வும் கலந்து கொண்டு உண்மை நிலையை விளக்குவார் எனத் தெரிகின்றது.
தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் பொதுபலசேனா:
இனப்பிரச்சனை தொடர்பில் பொதுபல சேனாவும் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது. எதிர்வரும் 25ம் திகதி இதனை முன்வைக்கவுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுக்குழப் பிரதிநிதி கலாநிதி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
தீவகத்தில் அரச ஆதரவு ஆயுதக் குழுக்கள் அராஜகம்:
தீவகப் பிரதேசத்தில் அரசின் ஆதரவுடன் இயக்கும் ஆயுதக் குழுக்களின் அராஜக நடவடிக்கைகளைக் கட்டப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளன. நெடுந்தீவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட த.தே.கூ ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட கடுந் தாக்குதலை அடுத்து இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புலிகள் வேறு இயக்கங்களுடன் தொடர்பு –றோ:
புலிகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களான லக்ஷர் இ தொய்;பா மற்றும் தலிபான் அமைப்புக்களுடன் இணையும் சாத்தியங்கள் உள்ளன என இந்திய உளவுப் பிரிவு அறிவித்தள்ளது. இவ்வாறு இணையுமானால் அவ் இணைவு இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அவ்வமைப்பு அச்சுறுத்தலாக அமையும் என மேலும் றோ தெரிவித்தள்ளது.
கூட்டமைப்பின் பெரும் பரப்புரை:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரை பெருமெடுப்பில் அடுத்த வார இறுதியில் யாழ் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தலைமையேற்று நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வருகைதரவுள்ள அதேவேளை பிரதான வேட்பாளருட்பட அனைவரும் இப் பரப்புரையில் கலந்து கொள்வர் எனத் தெரிகின்றது.
கோட்டாவின் பின்னணியை மறுக்கும் பொதுபலசேனா:
பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து வரும் வன்முறைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய உள்ளார் என்ற செய்திகளை பொது பல சேனா மறுத்தள்ளது. அவ்வமைப்பின் தேரர் பொதுபல சேனாவிற்கும் கோட்டாபாயவிற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என வன்மையாக மறுத்துள்ளார்.
அப்பு, ஆச்சி ஆண்டமண்ணை ஆள நினைப்பது எதிர்ப்பு அரிசியலா?
தமிழர்களாகிய நாம் தமக்குரிய உரிமைகளைக் கோருவது எவ்வாறு எதிர்ப்பரசியல் ஆகும்? என தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய கஜதீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)