ஞாயிறு 08/09/2013 : நவியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஐ.நாவின் செயலருக்குக் கடிதம்:ஞாயிறு 08/09/2013 : நவியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஐ.நாவின் செயலருக்குக் கடிதம்:

வீரகேசரி: 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக த.தே.கூ வெளியிட்ட விஞ்ஞாபனமானது கடும்  கண்டனங்களைச் சந்தித்துள்ளது. கடும் போக்காளர்களே இவ்வகைச் சாடல்களை அள்ளித் தெளித்துள்ளனர். கூட்டமைப்பின் விஞ்ஞாபனமானது 3 முக்கிய் வியடங்களைச் சுட்டி நிற்கின்றது. தன்னாட்சி அதிகாரத்துக்காகக் குரல் கொடுத்தல், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், மேற்கு மட்டும் தமிழரை ஆளாமல் வடக்கு மக்களும் தம்மைத் தாமே ஆள வேண்டும் என்ற விடயம் ஆகியனவே அவை. வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகப் பூமியாக ஏற்றுக்கொண்டால் அது தனிநாட்டுக்கான முதற்படியாக அமைந்து விடும் என பலர் நம்புவதாலேயே விஞ்ஞாபனமானது பிரிவினை வாதத்தைத் தூண்டுவதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் சம்பந்தனோ அவ்வாறான எண்ணமுடன் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படவில்லை என்பதுடன் நாட்டைப் பிளவு படுத்தும் எண்ணம் தமக்கில்லை என்றும் சொல்லியுள்ளார்.  அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்படும் இனவாதக் கருத்துக்களால் நாட்டின் நிம்மதி குலையும். மக்களின் நெருக்கடிகள் சரியாக ஆராயப்பட்டு தீர்வுகள் காணப்பட்டால் இனவாதச் சிந்தனைகள் தலைதூக்க மாட்டா.

 

நாட்டைப் பிளவுபடுத்த நாமல்ல ஆட்கள் – சம்பந்தன்:

அதிகாரப் பரவலாக்கல் போலித்தனமாக இருக்கக் கூடாது. மாறாக அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறான தீர்வொன்றையே நாம் வேண்டி நிற்கின்றோம். அதற்கமையவே எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர நாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களோ அல்லது நாட்டைப் பிளவு படுத்தும் நோக்கங்களோ எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

அன்று ஐநாவைப் புகழ்ந்தவர்கள் இன்ற தூற்றுகின்றனர் – ஐ.தே.க:

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முதன் முதலில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் அறிக்கை சமர்ப்பித்தவர்கள் மகிந்த ராசபக்ச உள்ளிட்டவர்களே. ஆனால் அன்று நடுநிலையாகத் தென்பட்ட மனித உரிமை ஆணையகம் இன்று நடுநிலையற்றதொன்றாகத் தெரிவது வேடிக்கையானது என ஐ.தே.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

 

97 பேர் கைது:

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தேர்தல் வன்முறைக் குற்றச்சாட்டில் சுமார் 97பேர் கைதாகியுள்ளனர். 07.09.2013 வரையான காலப்பகுதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகள் 102 ஆகக் காணப்படுவதாகவும் அம்முறைப்பாடுகளின் அடிப்படையில் கைதாகியவர்களே இவர்கள் என்றும் காவல்துறை சிரேட்ட பிரதிக் காவல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

மனித உரிமைப் பேரவையின் பருவகால அமர்வுகள் நாளை மறுநாள் ஆரம்பம்:

ஐக்கிய நாடுகள் சபையின் 24வது பருவ கால அமர்வுகள் நாளை 9ம் திகதி முதல் 27ம் திகதி வரை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வமர்வுகளின் போது மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள், நடவடிக்கைகள் தொடர்பாக நவநீதம்பிள்ளை அவர்கள் உரையாற்றவுள்ளார். அவ்வுரையின் போது இலங்கை தொடர்பாகவும் அவர் பேசவுள்ளார்.

 

அச்சுறுத்தும் புலனாய்வுத்துறை – ஸ்ரீதரன் நா.உ:

த.தே.கூ வின் பிரசாரக் கூட்டங்களுக்கு வருகை தரத் தயாராகும் மக்களை படையினரும், புலனாய்வாளரும் தேடிச் சென்று அச்சுறுத்தி வருவதாக மக்கள் பல முறைப்பாடுகளை தமக்குத் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

 

தமிழர்களைக் கைவிட்டு இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே செயற்படுகின்றது –கருணாநிதி:

கடல் எல்லையைப் பாதுகாக்கவென இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை இந்தியா வழங்கவுள்ளது. கடலில் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் வடக்கில் தமிழருக்குச் சுதந்திரமில்லை. இந் நிலையில் இந்தியா இவ்வாறான உதவிக் கரத்தைத் தொடர்ந்தும் இலங்கை அரசிற்கு நீட்டுவதால் அது ஒட்டுமொத்த தமிழர்களையும் கைவிட்டு இலங்கையின் அரசிற்கே உதவுவதாகத் தெரிகின்றது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம்கள் பற்றிப் பேசும் அரசியல் அதிகாரம் த.தே.கூ உண்டு – ஹஸன் அலி:

ஐ.நா ஆணையர் பிள்ளை அவர்களுடனான சந்திப்பின் போது த.தே.கூ இலங்கையில் முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருப்பது வரவேற்கத் தக்கதொன்று எனத் தெரிவித்த மு.காவின் பொதுச் செயலர் ஹஸன் அலி அவ்வாறு பேசவும் கருத்துக்களைக் கூறவும் த.தே.கூவிற்கு உரிமையுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

சுடரொளி :

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

இனவாதச் சிந்தனை நாட்டைக் குட்டிச் சுவராக்கிவிடும். அதற்கேற்பவே தென்னிலங்கைத் தலைவர்கள் தமிழ் மக்களின் உண்மைத் தேவைகளைக் கூட தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஒரு வெற்றி வழியாகக் கண்டுள்ளனர். 13வது திருத்ததிற்கு எதிர்ப்பு, வடமாகாண சபைத் தேர்தலுக்கு எதிர்ப்பு எனப் போய்த் தற்போது த.தே.கூ வின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு எனத் திரும்பியிருக்கின்றது. நாட்டைப் பிளவு படுத்தும் நோக்கம் எதுவுமில்லை எனத் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ள போதும் அதனைப் பொருட்படுத்தாது விஞ்ஞாபனத்திற்கு இனவாத முலாம் பூசும் நடவடிக்கைகள் நாட்டை மேலும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

 

நவியின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து ஐ.நாவின் செயலருக்குக் கடிதம்:

ஐ.நாவின் மனித உரிமைச் செயலர் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய வேளையில் அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அரசு அதனை கடதமொன்றின் மூலம் ஐ.நா.வின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளது. அக் கடிதம் வெளிவிவகார அமைச்சின் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 

வடக்குத் தேர்தல் நீதியாக நடக்க வேண்டுமா?:

வடக்கின் மாகாண சபைத் தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் ஆயின் அத் தேர்தலை சர்வதேசம் மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அத்துடன் தனது முழுக் கவனத்தையும் அது செலுத்த வேண்டும் என த.தே.கூ கோரிக்கை விடுத்துள்ளது.

 

முதலில் உயர் மட்டக் குழு- பிறகே முடிவு:

பொதுநலவாயத் தலைவர்களின் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்குபற்றுவதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கமுன் இந்திய உயர் மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. சனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் போன்ற உயர் மட்டக் குழுவினரைச் சந்திக்கவுள்ள இக் குழு இந்தியாவிற்குச் சென்ற பின்னரே மன்மோகனின் இறுதி முடிவு வெளியாகும் போல் தெரிகின்றது.

 

சூட்டுக்கு ஆட்சி செய்யும் கட்சியின் ஆதரவாளர் இலக்கு:

கண்டியில் நடைபெற்ற சூட்டுச் சம்பவமொன்றில் ஐ.ம.சு.மு வின் ஆதரவாளர் ஒருவர் இலக்காகிக் காயமடைந்துள்ளார். இவர் மாகாண சபை வேட்பாளராவார். அதிகாலை 3 தொடக்கம் 4 மணிவரைக்குமான நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவராலேயே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

வடக்கில் கிடைக்கும் ஆணை ஐநாவை உந்தித்தள்ளும்:

வடக்கு மக்கள் த.தே.கூவிற்குத் தமது பேராதரவை நல்க வேண்டும். அவ் ஆதரவின் ஊடாகக் கிடைக்கும் ஆணையானது ஐக்கிய நாடகள் சபையினை அடுத்த கட்டம் நோக்கி உந்தித் தள்ளும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

இரகசியத் தடுப்பு முகாம்களா? இல்லவேயில்லை….:

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எங்குள்ளன எனக் கூறினால் அவை தொடர்பாக விசாரணைகளை நடாத்த முடியும் என கோட்டா தெரிவித்துள்ளார். நவி அம்மையாரும் இவ்விடயம் தொடர்பாகத் தன்னிடம் கேள்விகளை கிளப்பினார் என்றும் கோட்டா தெரிவித்துள்ளார்.

 

கபே யிடம் 400 முறைப்பாடுகள்:

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தற்போது வரை 405 தேர்தல் முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக அவ்வமைப்பின் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.

 

காணமற் போனோர் அனைவரும் சாவடைந்திருக்க வேண்டும் – பொன்சேகா:

இறுதி யுத்தத்தில் காணாமற் போனவர்கள் என்று எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்க வேண்டும் என பொன்சேகா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தோ, ஒப்படைக்கப்பட்டுக் காணாமற் போனோர் என்று எவருமே இல்லை. சரணைடந்த 12000 புலிகள் புனர்வாழ்விற்கு அனுப்பப்பட்டனர். 23000 புலிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அவர்களுக்குள் இந்தக் காணாமற் போனோரும் அடங்கலாம் எனத் தெரிவித்தார்.

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

ஆசிரியர்