சண்டே லீடர்
ஜெனிவா நோக்கி குழு பயணம்:
ஜெனிவாவில் நடைபெறுகின்ற 24வது மனித உரிமை கூட்டத்தொடரில் பங்கேற்க இலங்கையிலிருந்து குழுவொன்றை அனுப்ப அரசு தீர்மானித்துள்ளது. ஒரு உயர்மட்ட குழுவை இக்கூட்டத்தொடருக்கு அனுப்ப வேண்டிய தேவை எதுவுமில்லை என தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறுகின்ற மனித உரிமை அமர்வுகளுக்கே உயர்மட்ட குழுவை அனுப்பப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது செல்லுகின்ற குழுவிற்கு ஜெனிவாவிலுள்ள இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமை ஏற்று அக்கூட்டத்தொடரில் இலங்கை சார்பாக பேசுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இக்குழுவிற்கு மனித உரிமை விவகாரங்களுக்கான சனாதிபதியின் சிறப்புத் தூதரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தன்னையும் இக்குழுவுடன் அனுப்புமாறு கேட்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கு முக்கியமாக அவர் குறிப்பிடுவது தூதருக்கு பேச வழங்கப்படும் நேரத்தை விட அதிகளவான நேரம் விசேட பிரதிநிதிக்கு வழங்கப்படும் என்பதே ஆகும்.
மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அறிக்கை ஒன்றை நவநீதம் பிள்ளை அவர்கள் செப்டம்பர் 25ஆந் திகதி இச்சபையில் வாசிப்பார். எனினும் அவரது பயணத்தின் முழு அறிக்கையும் கண்டுபிடிப்புக்களும் அடுத்த வருட மார்ச் மாத அமர்விலேயே வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை அறிக்கை பிள்ளைக்கு:
எதிர்வரும் வாரமளவில் வெலிக்கடைச் சிறைச்சாலை கலவர அறிக்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை புனருத்தான அமைச்சர் சந்திர ஸ்ரீ கஜதீர விடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இவ்வறிக்கையின் பரிந்துரைகளை மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் கேட்டால் காட்டமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனினும் இவ்வறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்காது என்பதை அவர் தெரிவித்தார். பிள்ளை அவர்களின் இலங்கை வருகையின் போது வெலிக்கடை கலவரம் தொடர்பாக சில கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய வனங்களை பாதுகாக்கவுள்ள பாதுகாப்பு படைகள்:
தேசிய வனங்கள் மற்றும் சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கு படையினரின் உதவியைக் கோரி காட்டுவள பாதுகாப்பு அமைச்சர் வி.வி.சொய்சா பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வனப்பாதுகாவலர்கள் மிகக் குறைவாக இருப்பதால் தேசிய வனங்களையும் சரணாலயங்களையும் பாதுகாப்பது தம்மால் இயலாத காரியங்கள் என அவர் தெரிவித்தார். ஒப்படைகளும் காவல்துறையும் வனப் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் போது கஞ்சா பயிரிடுகை, புதையல் தோண்டுதல், யானைத்தந்தத் திருட்டு போன்றவற்றைத் தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மனிதனுக்கும் யானைக்கும் இடையே நடைபெறும் சீவ மரணப் போராட்டத்தில் தன்னை அனைவரும் குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்த அவர் தான் தற்போதே இவ்வமைச்சை ஏற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
வட மாகாணசபைத் தேர்தல்களைக் கண்காணிக்கவுள்ள ஐக்கிய இராச்சியம்:
இம்மாதக் கடைசியில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தல்களை நுணுக்கமாக அவதானிக்கவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இத்தேர்தலைக் கண்காணிப்பதற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் அழைப்பிதழ் கிடைத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் செயலர் தெரிவித்துள்ளார்.
சண்டே டைம்ஸ்
திறைசேரியை தன்னியக்கமாக்க 2.4 பில்லியன் செலவில் திட்டம்:
வரி செலுத்துவதிலிருந்து தப்பி வருபவர்களை குறிவைத்து பிடிப்பதற்காக திறைசேரியை 2.4 பில்லியன் செலவில் தன்னியக்கமாக்கும் நடவடிக்கைகளை அரசு பாதிட்டுள்ளது. தென் கொரியாவின் சேம்சுங் கூட்டுத்தாபனம் இத்திட்டத்தை செயற்படுத்தும் கேள்வியை வென்றுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக அரச பாதீட்டு வருமானத்தை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது ஒன்றிணைக் கப்பட்ட திறைசேரி முகாமைத் தகவல் முறைமை (Integrated Treasury Management Information Sysytem – ITMIS) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் 22 மாதங்களுள் இயங்கு நிலைக்கு வரும் இத்திட்டத்தினால் திறைசேரியின் செயற்பாடுகளின் வினைத்திறன் அதிகரிக்கும்.
உலகச் சூதாட்ட மன்னன் பாக்கரின் முதலீட்டுத்திட்டம்:
உலக சூதாட்ட வர்த்தகத்தில் புகழடைந்துள்ள ஆஸி நாட்டைச் சேர்ந்த பாக்கரும் அவரது இலங்கைக் கூட்டாளியும் தமது இலங்கை முதலீட்டுத் திட்டத்தின் வடிவமைப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதற்கான அமைச்சரவைப் பத்திரங்கள் நான்கினைத் தாம் சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் படி 400 அறைகளைக் கொண்ட பெரிய சொகுசு உல்லாச விடுதியொன்றை இலங்கையில் நிர்மாணிக்க பாக்கர் அனுமதிக்கப் படுவார். அவ்விடுதியில் அறைகள், கூட்டத்தொடர்களை நடத்தும் வசதிகள் உட்பட சூதாட்ட நிலையமும் திறக்கப்படும் எனத் தெரிகின்றது
வரிசெலுத்தாது விட்டாலும் அனுமதிப் பத்திரம் பெறும் சாராயக் கம்பனிகள்:
கலால் திணைக்களமானது, சுமார் 1.6 பில்லியன் வரிப்பாக்கிகளைக் கொண்டுள்ள ஐந்து முக்கிய சாராய உற்பத்திக் கம்பனிகளின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை மீள்வலுவாக்கி உள்ளது. எனினும் அக்கம்பனிகள் வரிப்பாக்கியைச் செலுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்களது அனுமதிப்பத்திரம் மீளவலுவாக்கப்பட்டதாக கலால் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவ்வைந்து கம்பனிகளும் வரி செலுத்துவதில் 2009ம் ஆண்டிலிருந்தே விளையாடிவருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாண்டில் மொத்தமாக 1.4 பில்லியன் ரூபாய்களும் 2010ல் 1.6 பில்லியன் ரூபாய்களும், 2011ல் 1.7 பில்லியன் ரூபாய்களும் வரி நிலவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிக் கம்பனிகளுக்கு ஆபாத் பாண்டவனாக மத்திய வங்கி:
நிதிப் பிரச்சனைகளில் மூழ்கும் நிதிக்கம்பனிகளை மீட்டெடுப்பதற்கு நிதியுதவி புரிய இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது. கடந்த வாரம் இலங்கையின் நிதிக் கம்பனிகளில் ஒன்றான மத்திய நிதி மற்றும் முதலீட்டுக் கம்பனி வங்குரோத்து அடையும் நிலையை எட்டியுள்ள நிலையிலேயே இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.
பல பில்லியன் வீதி அபிவிருத்தித் திட்டம்- அக்ஸஸ் கம்பனியிடம்:
பல பில்லியன் ரூபா பெறுமதியான வீதி அபிவிருத்தித் திட்டத்தை அக்ஸஸ் கம்பனி வென்றுள்ளது.
உள்நாட்டுக் கம்பனிகளுக்கு உள்நாட்டு அபிவிருத்தித் திட்டங்களில் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தான் விரும்புவதால் இத் திட்டத்திற்கு உள்நாட்டிலேயே வழங்குனரை தேர்ந்துள்ளதாக சனாதிபதி தெரிவித்துள்ளார்.
வீரகேசரி
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
தேர்தலுக்கு இன்னும் ஆறே நாட்கள் உள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமே அனைத்து மாகாணங்களிலும் உள்ள மக்களால் பேசப்படும் விடயம் ஆகிப் போயுள்ளது. அவ் விஞ்ஞாபனத்திற்குப் பதிலளித்துள்ள சனாதிபதி சுயநிர்ணய உரிமையைத் த.தே.கூ கேட்பது தவறானது என்று கூறியுள்ளதுடன், தனிநாடு குறித்துக் குறிப்பிட்டுள்ளதும் நல்லதல்ல என்ற தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஊடகங்களுக்கான அமைச்சரான அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய, த.தே.கூ வை புலிகளின் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றார்கள் என்றே தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜெயந், இளைஞர்களுக்கு சயனைட் வில்லைகளைக் கொடுத்து மீண்டும் வடக்கைக் கலவர பூமியாக்கப் போகின்றதா த.தே.கூ என்று கூறியுள்ளார். இவ்வாறு பலர் பலவிதமாகக் குரல் கொடுத்துள்ள இவ் வேளையில் வாக்காளப் பெருமக்கள் தமது பொன்னான வாக்குகளை சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைக்கும் மனிதர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
வடக்கில் அபிவிருத்தி பன்மடங்காக வேண்டுமா? மக்கள் எமக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் – சனாதிபதி
வடக்கில் அபிவிருத்திகள் துரித கதியில் நிகழ்கின்றன. அரச படைப்பிரிவில் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம். தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கும் துரித கதியில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவுள்ளோம். வட பகுதி இப்பொழுதே சுதந்திரமாக இயங்கக் கூடியதாக உள்ளது. அபிவிருத்தி இன்னும் பன்மடங்காக வேண்டுமாயின் மக்கள் எமக்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
இராசதந்திரிகளே வாருங்கள்.. வடக்கின் தேர்தல் நடைபெறும் விதத்தைப் பாருங்கள்… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு!:
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதராலயங்களின் பிரதிநிதிகளை வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலைக் கண்காணிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இவ்வழைப்பின் மூலம் வடமாகாண சபைத் தேர்தலில் நிகழவிருக்கின்ற அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள், இறுதி நேரப் பிரசாரங்கள், இலவசச் சலுகைகள் போன்றவற்றை தடுத்து நிறுத்தவோ அல்லது அவ்வாறு நிகழ்வதை உலக அரங்கிற்குத் தெரியப்படுத்தலாம் எனத் தாம் நினைப்பதாக த.தே.கூ தெரிவித்துள்ளது.
யாழ்தேவி கிளிநொச்சி வரை:
23 வருடங்களுக்கு முன்னர் தனது சேவையை நிறுத்திக் கொண்ட யாழ்தேவி தொடருந்துச் சேவை 14.9.2013ல் தனது சேவையைக் கிளிநொச்சி வரை தொடங்கியுள்ளது.
“சுயநிர்ணய உரிமையைக் கோருவது தவறு” – சனாதிபதி
“சனாதிபதியின் கூற்றை நிராகரிக்கின்றோம்” – மாவை:
வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையைக் கோருவது தவறானது என சனாதிபதி வடக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருப்பதைத் தாம் வன்மையாக மறுப்பதாகவும், முற்றாக நிராகரிப்பதாகவும் மாவை கூறியிருக்கின்றார்.
திருமலையில் முஸ்லிம்களின் காணி பறி போகின்றது:
திருகோணமலை புல்மோட்டைப் பகுதியிலுள்ள அரிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய் வீதிகளிலுள்ள அரச மற்றும் முஸ்லிம்களுக்கான காணிகளை தொல்பொருட்துறை, விகாரை, படைமுகாம் விஸ்தரிப்பு, பூஜா பூமி என்ற பல பெயர்களில் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை முஸ்லிம் அரசியற் தலைமைகள் கண்டும் காணாதிருப்பதாக இருப்பதாகவும், அந் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த அவர்கள் முன்வரவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியத் தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் கூட்டம்:
இலங்கை வந்துள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று தேர்தல்களில் போட்டியிடும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளனர். இக்குழுவிற்கு தலைமை தாங்கி வந்துள்ளவர் இந்திய தேர்தல் முன்னாள் ஆணையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)