சுடரொளி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
கோழைத்தனமான செயல்களால் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க முனைந்திருப்பது மோசமான நடவடிக்கை ஆகும். அனந்தியின் மீது தாக்குதல், போலிப்பத்திரிகை வினியோகம், போலியான இலக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதம வாக்காளருக்கு வழங்கியமை போன்ற பல்வேறு கோழைத்தனமான செயல்கள் வடபுலத்தில் நிகழ்ந்துள்ளன. தமிழ் மக்களின் மீதான அடக்கு முறையின் வெளிப்பாடுகளே இவை. மக்களைப் பயப்படுத்தி அல்லது குழப்பி வாக்களிக்கச் செய்யவிடாது தடுப்பதே அதன் நோக்கமாக இருந்தது. போலிப்பத்திரிகை அடித்து வினியோகிக்கும் அளவிற்கு துணிச்சல் கொண்ட மேலிடத்தின் ஆதரவு கொண்ட இத் தீய சக்திகள் இனியும் சுமமா இருக்கப் போவதில்லை. கூட்டமைப்பு மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
வடக்கில் 69வீத வாக்குப்பதிவு:
மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் வடக்கிலேயே அதி கூடிய வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. அதன் படி வடக்கில் 69 வீதமும் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 60 வீதமும் வாக்குப் பதிவு நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சியில் கண்காணிப்பாளர் மீத தாக்குதல்:
கிளிநொச்சியில் கண்காணிப்பு நடவடிக்கையிலிருந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கபே அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகின்றது.
கொடிகாமத்தில் துப்பாக்கிச்சூடு:
கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வாகனத்தின் மீது கொடிகாமத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இனந்தெரியாதவர்களால் கட்டடமொன்றில் காவலில் வைக்கப்பட்டிருந்த சாவகச்சேரிப் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் யோகராசாவை மீட்பதற்காகச் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.
போலி உதயன் வெளியானது:
யாழில் திடீரென வெளியான உதயன் பத்திரிகையானது போலியானது எனத் தெரிய வந்துள்ளது. அனந்தி அரசுடன் இணைவு, கூட்டமைப்பு தேர்தலைப் புறக்கணிப்பு ஆகிய செய்திகளுடன் வந்திறங்கிய நான்கு பக்க உதயன் பத்திரிகையே போலியானதாகும். அரசின் அடிவருடிகளால் மட்டுமே இது சாத்தியமாகும்.
வன்முறைகளைத் தகர்த்து வடக்கில் தமிழர்கள் எழுச்சி:
வடக்கில் இராணுவ அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் இடையே பெருமளவுத் தமிழர்கள் வாக்களித்திருப்பதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ மிரட்டல்கள் – நேற்று மட்டும் 101 வன்முறைகள்:
வடக்கு மாகாண சபைத்தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்களுக்கு எதிராக இராணுவ அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான 11 சம்பவங்கள் நேற்று மட்டும் பதிவாகி உள்ளன.
மக்களை மிரட்டிய புலனாய்வாளரை மடக்கிப் பிடித்த மாவை:
வாக்களிக்கச் சென்ற மக்களை சாதாரண உடையில் வந்த புலனாய்வாளர் மிரட்டிக் கொண்டிருந்ததை அவதானித்த மாவை அப் புலனாய்வாளரை கையுங்களவுமாகப் பிடித்து காவ்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் கொல்லங்கலட்டிப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அதேவேளை வாக்களிக்க வந்த தமிழ் மக்களை இராணுவத்தினரும் கூலிப்படையினரும் தாக்கித் திருப்பியனுப்பிய சம்பவங்கள் கிளிநொச்சி, ஊர்காவற்றுறை மற்றும் மாதகல் பகுதியில் நடைபெற்றுள்ளதாகத் த.தே.கூ குற்றஞ்சாட்டியுள்ளது.
அனுமதியட்டை இல்லாத அமைச்சர் வாக்களிக்க அனுமதி மறுப்பு:
சிலாபம் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த அமைச்சர் ஒருவரை வாக்களிப்பு நிலைய அலுவலர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. தனது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சர் தயாசித்த திசேராவை அலுவலர்கள் கேட்டுக்கொண்ட போது அவர் அடையாள அட்டையின்றி வாக்குச்சாவடிக்கு வந்திருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து வீட்டுக்குத் திரும்பிய அமைச்சர் தனது அடையாள அட்டையுடன் வந்தபோதே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
வீரகேசரி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
நடந்து முடிந்த தேர்தல்கிளின் பின்னர் அநாவசியமான தேர்தல் வன்முறைகளுக்கு இடமளிக்கக் கூடாது. இதனைக் காவல்துறையும் படையினரும் உறுதி செய்ய வேண்டும். அதற்கும் அப்பால் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் பொதுவானவை என அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். வெற்றியடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் நடக்காமலிருக்க வேண்டும். அதேவேளை ஆதரவாளர்களும் தம்மிடையே அநாவசியச் சச்சரவுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இதற்குக் காத்திரமான நடவடிக்கைகள் அவசியமானவை என்பதை உரிய தரப்பினர் புரிந்து கொண்டால் சரி.
பெரும் எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பு:
மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு வாக்களித்துள்ளனர். அதற்கமைய வடக்கில் யாழ்ப்பாணத்தில் 62 வீதமும் கிளிநொச்சியில் 70 வீதமும் முல்லைத் தீவில் 71 வீதமும் மன்னாரில் 70 வீதமும் வவுனியாவில் 65 வீதமும் வாக்களிப்பு நிகழ்ந்துள்ளது. பாரிய அசம்பாவிதங்கள் எவையும் பதிவாகவில்லை.
முறைப்பாடுகள் 200- கைது 147:
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடைபெற்று முடிந்த தினம் வரைக்குமான காலப்பகுதியில் மூன்று மாகாணங்களிலும் மொத்தமாக 200 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றுடன் சம்பந்தப்பட்ட 147 பேர் கைது செய்யப்பட்டுக் காவலிலிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிபூர்வமான வாக்களிப்பு மகழ்ச்சி தருகின்றது:
வடமாகாணத் தமிழ் மக்கள் தமது முதலாவது மாகாண சபைத் தேர்தலில் உணர்வுபூர்வமாக வாக்களித்துள்ளனர். அம் முடிவு எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதேவேளை சாதாரன மக்களாக சில இடங்களுக்கு வருகை தந்த இராணுவத்தினர் மக்களை வாக்களிக்க விடாமல் தடைகளை ஏற்படுத்தியது தொடர்பாகத் தாம் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்களித்துவிட்டு வந்த அதிபர் விசாரணையில்:
மன்னார் மாவட்டத்தில் வாக்களித்து விட்டு வருகை தந்த அருட்சகோதரரான அதிபர் ஒருவரைக் காவல்துறையினர் விசாரணைக்காக இட்டுச்சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மன்னார் கருங்கண்டல் அதிபரும் ஆசிரியை ஒருவரும் வாக்களித்து விட்டுத் திரும்பி வரும் போது சந்தித்த சில நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற காவல்துறையினர் இவர்கள் இருவரும் பிரசார நடவடிக்கையிளல் ஈடுபடுவதாகச் சந்தேகித்து காவல்நிலையத்துக்கு இட்டுச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். விசாரணைகளைப் பதிவு செய்த பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
தேர்தல் கடமைக்குச் சென்றவர் குளவி கொட்டி மரணம்:
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிக்கும் நிலையத்திற்குக் கடமைக்காகச் சென்றவர் அங்க கடமையில் இருந்த போது குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமாகியுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த மேலும் இரு அலுவலர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை ஐந்து மணிக்குக் கடமைக்காக தமது நிலையத்திற்குச் சென்றவர்களுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்களிக்கச் சென்ற மாற்றுத் திறனாளிகளின் பேருந்து தாக்குதலுக்கு இலக்கானது:
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் வாக்களிப்பதற்காக மாற்றுத் திறனாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் ஓட்டுனர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆயுததாரிகளான முகம் மூடியணிந்தவர்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் வாக்களிப்பிற்கென கபே அமைப்பு விசேட பேருந்துச் சேவைகளை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
இன்டர்போல் தேடும் கே.பி செய்தியாளர் மாநாடு நடத்துகின்றார் – ரணில்:
இரணைமடுவில் அரசிற்கு ஆதரவாக மாநாடொன்றை இன்ரபோல் தேடும் கே.பி நடத்தியிருப்பதாக அறிய முடிகின்றது. இது அப்பட்டமான தேர்தல் மீறலாகும் என ரணில் குற்றஞ்சாட்டிக் கடிதமொன்றை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார். இன்ரபோலால் தேடப்படும் அவர் தேர்தல் மாநாட்டை இலங்கையில் நடாத்தியது நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)