ஞாயிறு 29/09/2013 : சப்பிரகமூவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – முரண்படும் செய்திகள்ஞாயிறு 29/09/2013 : சப்பிரகமூவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – முரண்படும் செய்திகள்

சண்டே லீடர் :

 

வடக்கின் தேர்தலில் இராணுவத் தலையீடு என குற்றச்சாட்டு:

தேர்தல் காலங்களின் போது இராணுவம் கடுமையான தலையீடுகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் இராணுவம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பிற்க்கு வாக்களிக்க வேண்டாம் என, எழுதப்பட்ட கடிதங்கள் பல வாக்காளர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக பேராயர் இராயப்பு யோசப் தெரிவித்துள்ளார். அவதானிப்பாளர்களும் அவ்வாறான தகவல்களைத் தாம் பெற்றுள்ளதாகவும், வடக்கில் மேலும் சில இடங்களில் அந்தரமான நிலைமைகள் தொடர்பாகவும், தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக தெரியவருகின்றது.

 

பாதீடோ, உரிய திட்டமோ இன்றி பொதுப் பணத்தில் பல்பொருள் அங்காடி:

உரிய திட்டமோ, அதற்கான செலவுப் பாதீடோ இன்றி பொதுமக்கள் பணத்தில் மிகபெரிய பல்பொருள் அங்காடியை நிர்ணயிக்கும் திட்டமொன்றை கோட்டை நகர மேயர் முன்னெடுத்துள்ளார்.

இவ் அதிசொகுசு பல்பொருள் அங்காடி வெலிக்கடைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது. இத் திட்டமானது நல்லதொரு எண்ணமாக இருப்பினும் உரிய முன்னேற்பாடுகள் இன்றி ஆரம்பிக்கப்படுவதால் பொதுமக்களின் பணத்தை விரயம் செய்யும் முயற்ச்சியாக இருந்துவிடும் என கோட்டை நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் தேர்தலில்:

பணத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டு நட்டத்திலோடும் இலங்கை போக்குவரத்து சங்கம் நடந்தேறிய மாகாணசபைத் தேர்தல்களால் மேலும் நட்டமடைந்துள்ளன என ஜே.வி.பி குற்றஞ்சா ட்டியுள்ளது. மூன்று மாகாணங்களிலும் நடைபெற்ற ஆளுங்கட்சி தேர்த பிரசாரங்களுக்காக மக்களை ஏற்றியிறக்கிய பொதுப் பேரூந்துகளாலேயே இவ்வாறு நட்டம் எழுந்துள்ளதாக போக்குவரவு ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

சொத்துக்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை:

தற்போது வரை தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளன. இம்முனைப்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று இறங்கியுள்ளதாகவும் அதற்கான திட்டவரையை அவர்கள் தயாரித்திருப்பதாகவும் அத்திட்ட வரைபை அனுமதிக்காக சட்டவாளர் சங்கத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சண்டே ஒப்சேர்வர் :

 

ஸ்ரீலங்கன் விமானம் திடீர் தரையிறக்கம்:                           

விமானப்பயணிகள் இருவர் மேற்கொண்ட அச்சுறுத்தலால் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசர தரையிறக்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் மேற்க்கொண்டுள்ளது. ஏர்பஸ் யு330267 பயணிகளுடன் பயணித்த போதே ஹீத்ரு விமான நிலையத்தில் அவசர தரையிறக்கத்திற்கான அனுமதியைக் கோரியது. எனினும் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. இவ்விமானம் கொழும்பில் இருந்து ஹீத்ரு நோக்கி பயணம் செய்தது. இரு பயணிகளின் சந்தேகத்திற்க்கு இடமான நடத்தை காரணமாகவே இத்திடீர் தரையிறக்கம் நிகழ்ந்துள்ளது. அவ்விரு பயணிகளையும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் கைது செய்த பின் இவ்விமானம் தனது பயணத்தை தெடர்ந்துள்ளது.

 

80 மில்லியன் பெறுமதியான காலவதியான உணவு:

கொட்டகென பிரதேசத்தில் நடாத்தப்பட்ட தேடுதலின்போது  சுமார் 80 மில்லியன் பெறுமதியான காலாவதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகக் கூடுதலான காலாவதியான பொருட்களிலே இதுவே எனத் தெரியவருகின்றது. தற்போதும் உணவுத் தரக் கட்டுபாட்டாளர்கள் அவ்வுணவுப் பொருட்களின் காலாவதித் திகதிப் பட்டைகளை பரீட்சித்து வருவதாகவும் அந்நடவடிக்கை முடிவடைந்த பின்னரே அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் பறவைகளுக்கு ஆபத்து:

நாட்டின் ஈரநிலப் பகுதிகளில் பெரும்பாலான புலம்பெயர் பறவைகள் வந்து போவது வருடாவருடம் நிகழ்வதாகும் எனினும் அப்பறவைகளுக்கான ஆபத்து இலங்கையரின் நடவடிக்கைகளால் பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. வயல் நிலங்களுக்குப் பாய்ச்சப்படும் நன்நீர் சதுப்பு நில ஏரிகளுடன் கலப்பதால் அச்சதுப்பு நில ஏரிகளின் உவர்தன்மை குறைவடையத் தொடங்குகின்றது. இவ்வாறு நிகழ்ந்தால் சதுப்பு நில உவர்ப்பில் உருவாகும் புலம்பெயர் பறவைகளின் உணவு அருகிவிடுவதால் புலம்பெயர் பறவைகள் இலங்கைக்கு வருவதை குறைத்துக் கொண்டுள்ளன.

 

அரசு வடக்கில் தோற்றால் பிரிவினைவாதமே வெல்லும்:          

வடமாகாண சபைத்தேர்தலில் அரசால் வெல்லமுடியாது போய்விட்டால் அரசிற்கு பிரிவினை வாதத்தை எதிர்கொள்ளும் சவால் இருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

 

சண்டே டைம்ஸ் :

 

இலங்கை மீனை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு:

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் புகுந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு பல பில்லியன் ரூபா பெறுமதியான மீனை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதாகத் தெரிகின்றது.                                   அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வருடாந்தம் பல பில்லியன் ரூபா பெறுமதியான மீனை தமிழ்நாடு ஏற்றமதி செய்து வருகின்றது. இலங்கைக் கடற்பரப்பில் புகுந்து தொழில் செய்யும் இந்திய மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக அத் தொழிலில் ஈடுபடுகின்றார்களா எனப் பார்த்தால் அவ்வாறில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.               இம் மீன்பிடி நடவடிக்கை யானது ஏற்றுமதித் தொழில் நடவடிக்கை யாகத் தமிழ்நாட்டில் பரிணமித்துள்ளது என்றே கூறலாம். 2004-2005ல் தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதி வருமானம் 2,995 கோடி இந்திய ரூபாய்களாக இருந்ததை இங்கு நினைவு கூறலாம்.     இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடி றோலர்களால் மீன் பிடி நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட நுட்பங்களாக இருப்பதால் இலங்கை மீனவரின் வாழ்வாதாரமா மீனபிடித் துறை நலிவடைந்து செல்வதைக் காணலாம்.

 

பகிடிவதை – முரண்படும் செய்திகள்

சப்பிரகமூவ பல்கலைக்கழகத்தில் நிகழந்ததாக ஊடகங்களில் வெளியான பகிடிவதைச் செயற்பாடு தொடர்பாகப் பல்கலைக்கழக அறிக்கைகள் ஒன்றைச் சொல்ல உயர் கல்வி அமைச்சின் அறிக்கைகள் வேறொன்றைச் சொல்கின்றன.

மாணவர்களாலும் அவர்களின் பெற்றோராலும் உயர் கல்வி அமைச்சிற்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை அடுத்து பல்கலைக் கழகத் துணைவேந்தரை விசாரணை களை செய்யுமாறு அமைச்சு அறிவித்தது. ஆனால் விசாரணைகளைத் தொடக்கி வாரம் ஒன்ற கழிந்துள்ள நிலையிலும் அவ்வாறானதொரு கடுமையான பகிடிவதை அங்கு நடந்ததாகத் தெரியவரவில்லை என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

 

இராசதந்திரிகளின் பயணச் செலவுகளுக்கு ஆப்பு:

இலங்கைத் தூதுவராலயங்களின் பயணச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு வெளிநாட்டு அமைச்சு அனைத்துத் தூதுவராலயங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.             தேவையற்ற பயணங்களைக் செய்யாமலிருக்குமாறு கேட்கப் பட்டுள்ளதாக அமைச்சின் செயலர் தெரிவித்தார்.

அரை வருடத்திற்கு ஒருமுறை மீள் பார்வைக்குட்படும் தூதுவராலயங்களிள் செலவுகளினைக் கண்காணித்த பின்னரே இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதுவராலயங்களின் பயணச் செலவுகளே ஏனைய நாடுகளிலுள்ள தூதுவராலயங்களின் பயணச் செலவுகளை விட மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.       65 அலுவலகங்களில் சுமார் 300 அலுவலர்கள் தூதுவராலயங்களில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயணச் செலவுப் பாதீடாக ரூபா 250 மில்லியன் இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

வீரகேசரி :

 

ஆசிரியரின் பேனாவில் இருந்து:

சனநாயக அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுக வேண்டும் என்ற விடயத்தை மக்கள் மற்றொரு முறை வடக்கின் தேர்தலின் ஊடாக அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனை அரசு உனர்ந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதுடன் அதற்கும் மேல் சென்று யாதாயினும் தேவையானவற்றை வழங்கி இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்க வேண்டும். அதேவேளை தமக்குக் கிடைத்துள்ள அரசியல் ஆணையைப் பயன்படுத்தி த.தே.கூ மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முனைப்புடன் செயற்பட வேண்டும். இரு தரப்பும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லாதுவிடில் தமிழரின் கதை மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதாய்ப் போய்விடும்.

 

அத்துமீறும் படகுகள் பறிமுதல் – நாடுகள் இடையே முறுகல்:

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகளைக் கைப்பறினால் அப் படகுகளில் வரும் மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்படுவர் என்றும் அவர்களின் படகுகள் இலங்கைக்கு உடமையாக்கப்படும் என்றும் இலங்கை அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கையால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் ஏற்படும் ஆபத்து எழுந்துள்ளது.

இவ்விடயம் தமிழகத்தில் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கி விட்டுள்ளது. தாம் பலகோடி ரூபாய்களை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அம் மீனவர்கள் அச்சங் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய அரசியற் கட்சிகள் யாவும் தமிழக மீனவருக்கு ஆதரவாக குரலெழுப்பத் தொடங்கியுள்ளன.

 

ஐ.நா  வில் இலங்கையின் ஐக்கியத்திற்குப் பலமான ஆதரவு- நிரந்தர அலுவலகம் அறிக்கை:

ஐநாவின் மனித உரிமைக்குழுவில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க, ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் பல இலங்கையின் ஐக்கியத்திற்கே ஆதரவளிக்கின்றன என ஐ.நாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம் அறிக்கையொன்றை விட்டுள்ளது.

 

3 முதல்வர்கள் 3ல் சத்தியப் பிரமாணம்:

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணத்திற்கான முதலமைச்சர்கள் மூவரும் எதிர்வரும் 3ம் திகதி சனாதிபதியின் முன் முதலமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிகின்றது.

 

சனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் : ஆளுனரின் முன் அல்ல:

வடமாகாண சபையின் முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள சி.வி ஆளுனரின் முன் தான் சத்தியப் பிரமாணம் செய்யப் போவதில்லை என்று உறுதி படத் தெரிவித்துள்ளார். அதன் படி அவர் சனாதிபதியின் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார் என்ற தெரிகின்றது.

 

வடக்கின் சிங்களக் குடியேற்றத்தை த.தே.கூ வால் தடுக்க முடியாது:

அரசியலமைப்புச் சட்டப்படி நாட்டின் எப்பாகத்திலும் யாரும் குடியேறமுடியும். த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் கொழும்பில் வசிக்கின்றார்கள். அவ்வாறாயின் ஏன் சிங்களவர்கள் வடக்கில் குடியேறி வசிக்க முடியாது என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மலையக மக்கள் எம்மோடு – இ.தொ.கா:

எம்மை எவரும் பலமிழக்கச் செய்ய முடியாது. ஏனெனில் மலையக மக்கள் எம்மோடுதான் இருக்கின்றார்கள் என இ.தொ.காவின் பிரதி அமைச்சர் பதவி வகிக்கும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

கரு வைத் தலைவர் ஆக்குக!:

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் பெரும்பாலான எம்பிக்களும், கட்சியின் முன்னாள் எம்பிக்களும் கட்சியின் தலைமைப் பதவிக்கு கரு ஜெயசூரியவை நியமிக்க வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளனர்.

 

ராகுல் காந்தியின் கருத்தால் பதவியைக் கைகழுவும் மன்மோகன்?:

அவசரச் சட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களால் தனது பதவியில் இருந்து விலகும் முடிவைப் பற்றி மன்மோகன் ஆலோசனை நடத்துவதாகத் தெரிகின்றது. ராகுல் காந்தி அவசரச் சட்டம் முட்டாள் தனமானது எனத் தெரிவித்த கருத்தாலேயே கடுப்பாகிப் போன மன்மோகன் இம் முடிவுக்கு வந்துள்ளார்.

 

 

சுடரொளி :

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

போரின் பின் ஷஹலால்| என்ற நாமத்துடன் ஆரம்பமான முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் தாக்குதல் வடமாகாண சபைத்தேர்தல் அறிவிப்புடன் மீண்டும் தமிழர்களின் பக்கம் திரும்பியிருக்கின்றது. 1915ம் ஆண்டில் ஆரம்பித்த முதலாவது இனக் கலவரத்திலிருந்து பல இனக் கலவரங்களை இந்த நாடு பதிவு செய்துள்ளது. அபிவிருத்தி என்ற இலக்கை அடைய முடியாமல் இந் நாடு தடுமாறுவதற்க காரணம் இவ் இனக் கலவரங்களும் தான். வடக்கின் மாகாண சபைத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இனவாதம் பேசவில்லை. ஆனால் இனவாதம் பேசியவர்களை அத் தேர்தல் நிராகரித்து விட்டது. அதுவும் இனவாதிகளின் சீற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இனியாவது இனவாதம் பேசி உணர்ச்சிகளைத் தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது நன்று.

 

ஆதாரம் எங்கே? நவி பிள்ளையைக் கேட்கிறார் சனாதிபதி:

நவி பிள்ளையால் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் தேவை என சனாதிபதி கோரியுள்ளார். தன்னை இலங்கையில் சந்தித்த போது நவிபிள்ளை இவ்வகையான எவ்வித கவலைகளையும் தன்னிடம் அவர் தெரிவிக்கவில்லை என்றும் சனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையைச் சில நாடுகள் கொடுமைப் படுத்துகின்றன. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 

யார் போனஸ் உறுப்பினர்கள்? யார் அமைச்சர்கள்? த.தே.கூ முடிவிற்காக கூடுகின்றது:

வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய த.தே.கூ விற்குக் கிடைத்த 2 மேலதிக ஆசனங்களை யாரைக்கொண்டு நிரப்புவது என்றும், யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்றும் முடிவுகளை எடுப்பதற்காக த.தே.கூ கூடுகின்றது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை யார்? முடிவு 7ம் திகதி:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ள கருத்துக்களுக்கு விடையளிக்கப் போகும் கூட்டமொன்றை அடுத்த மாதம் 7ம் திகதி கூட்டும் முடிவினை அக் கட்சி எடுத்துள்ளது.

 

கடும் செலவு!!! சுற்றுலாப் பயணிகள் வர அச்சப்படும் நாடாகும் இலங்கை:

அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் இலங்கையே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாப் பயணிகளுக்கான அதிக செலவினைக் கொண்ட நாடாக இருப்பதாகக் காட்டியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணத்துறையில் முதலிடத்தில் இருந்த இலங்கை பின்னொக்கிச் செல்ல இந்தோனேசியாவின் பாலித் தீவுகள் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளன.

 

வடமாகாண சபைக்கு முறையான நிதியை ஒதுக்குவீர்களா? சனாதிபதியிடம் பான் கீ மூன் கேட்பார்:

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியுடன் ஆட்சியமைக்க இருப்பதால்   அம்  மாகாண சபைக்கான நிதியை உரியமுறையில் சனாதிபதி ஒதுக்குவாரா? என்ற கேள்வியை சனாதிபதியிடம் ஐ.நாவின் செயலர் மூன் கேட்கவிருப்பதாகத் தெரிகின்றது.

 

பொதுநலவாய அமைச்சர்கள் மகாநாட்டில் பேசப்படாத இலங்கை விவகாரம்:

நியுயோர்க்கில் கூடிய பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வித பேச்சுக்களும் நடைபெறவில்லை. இக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசப்பட வேண்டும் என்ற கோரிக்கையிணை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

ஆசிரியர்