April 2, 2023 3:12 am

ஞாயிறு 13/10/2013 : பதவியேற்பை நிராகரித்தற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவே | ஈபிஆர்எல்எவ், புளொட், டெலோ ஆகிய கட்சிகளின் தலைமை ஞாயிறு 13/10/2013 : பதவியேற்பை நிராகரித்தற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவே | ஈபிஆர்எல்எவ், புளொட், டெலோ ஆகிய கட்சிகளின் தலைமை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சண்டே லீடர்:

 

இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திடவுள்ள இரண்டு உடன்பாடுகள்:

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளில் இந்தியா இலங்கையுடன் ஒப்பமிடவுள்ளது. இவ் உடன் படிக்கைகளில் இலங்கை மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்பமிடவுள்ளனர் உடன்படிக்கை அமைந்திருப்பதாக வெளியுறவுத்துறைச் செயலாளர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

மக்கா பயணத்தில் மேலதிக கட்டணம்:

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேலதிகமாக வசூலித்து மக்காவிற்கு யாத்திரீகர்களை அனுப்பிய முகவர்கள் யார்? யார்? என அரசு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அரசு மக்கா பயணத்திற்காக 350,000 ரூபா தொடக்கம் 400,000 ரூபாய்களையே கட்டணமாக அறவிடவேண்டும் என விதித்திருந்தது. எனினும் சில முகவர்கள் இவ் எல்லையைத் தாண்டி மிக அதிகமான கட்டணங்களை அறவிட்டு பயணிகளை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் 6300 பயணிகளுக்கான அனுமதியை கோட்டாவாகப் பெற்ற இலங்கைக்கு இவ்வருடம் 2240 பயணிகளுக்கான கோட்டாவே கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

பத்து மில்லியன் செலவில் கண்காட்சி:

பொதுநலவாய மாநாட்டின் போது வருகை தருபவர்களைக் கவரும் நோக்குடன் நவம்பர் மாதம் 15 – 17 வரை கிங்ஸ்பறி விடுதியில் 10 மில்லியன் செலவில் இரத்தினக்கல் ஆபரணக் கண்காட்சி யொன்றை இலங்கை இரத்தினக்கல் ஆபரணக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளது. இச் செலவை அக் கூட்டுத்தாபன ஊழியர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். தமக்கு நிதி இல்லாததால் வருடாந்த மிகையூதியமாக 7500 ரூபாவை விட மேலதிகமாகச் செலுத்த முடியாது என மறுத்திருந்த கூட்டுத்தாபனத்திற்கு எங்கிருந்து இவ்வளவு நிதி தற்போது கிடைத்துள்ளது என அதன் ஊழியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன் வருகைதரவுள்ள அரச தலைவர்களின் வாழ்க்கைத் துணைக்கு பெருஞ்செலவில் நினைவுப் பரிசில்களை வழங்கும் நடவடிக்கையையும் ஊழியர்கள் எதிர்த்துள்ளனர்.

 

ரணில் பதவி விலகுவார்

 

மற்றொரு சிறந்த தலைவர் ஐக்கிய தேசியக்கட்சிக்குக் கிடைப்பாராயின் ரணில் தமது பதவியை இழக்கத் தயாராக இருக்கிறார் என ஐ.தே.க வின் தேசிய அமைப்பாளர் தயாகமகே தெரிவித்துள்ளார்.அவ்வாறே தானும், அப்பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை எனில், தமது பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் தோல்விகளுக்கு ரணில் விக்ரமசிங்க மட்டுமே பொறுப்பேற்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

ரத்துபஸ்வல மக்களுக்கு தீர்வு இல்லை:

நஞ்சாகும் தமது குடிநீர்ப்பிரச்சனைக்குப் போராடி பல உயிர்களை இழந்தும் ரத்துபஸ்வல மக்களுக்குத் தற்போதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. அதற்காக மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதிக்கத்தயாரகி வருகின்றனர் அதை அடுத்து கடந்த வெள்ளிக் கிழமை காவல்துறையுடன் அப்பிரதேச மக்களின் தலைவர்கள் உட்பட பிரதேச விஹாரையின் பிக்கு கூட்டமொன்றை நடாத்திச் சில கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக தெரிகின்றது. அதன்படி கையுறைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் எவரையும் வேலை செய்யவிடப்போவதில்லை என அம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சண்டே ஒப்சேர்வர்:

 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மாற்றங்கள்:

கடந்த மாகாண சபைப் தேர்தலில் ஏற்பட்ட கடும் பின்னடைவை அடுத்து கட்சி மறுசீரமைப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவென அனைத்து முக்கிய அங்கத்தவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐக்கிய பிக்குகள் முன்னணி ஈடுபட்டுள்ளது. மகாசங்கத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள ஐக்கி தேசியக் கட்சிக்கான தலைமைத்துவ குழு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

2014ம் ஆண்டில் இருந்து திரிபோசா விசுக்கோத்து:

மாணவர்களுக்கு திரிபோசா விசுக்கோத்துகளை 2014ம் ஆண்டில் இருந்து வழங்குவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.       மூன்று வருடங்களுக்கு முன்னர் 60 வீத இயலளவில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிய லங்கா திரிபோச கம்பனி தற்போது 90 வீத இயலளவில் இயங்கும் நிலையில் உள்ளது. இவ்வாறு இயலளவு அதிகரிப்பதற்க்கு சுமார் 150 மில்லியன் செலவில் புதிய இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

 

உயர்ந்த புள்ளி இல்லை – தந்தையால் அடி, உதை:

கடந்த புலமைப் பரீட்சையில் வெற்றிப் புள்ளியினை கடக்காத மாணவனை தகப்பனார் கடுமையாகத் தாக்கி நெருப்புச்சூடுவைத்த சம்பவம் பொஹவந்தலாவையில் நடந்துள்ளது. லயன் அறையில் வசிக்கும் மாணவனே இவ்வாறு முகத்திலும் கையிலும் நெருப்புச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார் மாணவன் வைத்திய சாலையிலும் தகப்பனார் சிறையிலும் தற்போது உள்ளனர்.

 

 

சியராலியோன், பொட்ஸ்வாணாவுடன் உறவு நெருங்குகிறது:

நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பொட்ஸ்வானா மற்றும் சியாராலியோன் அமைச்சர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு அந்நாடுகளுடன் வெளிநாட்டுறவை வளர்த்துள்ளார்.

 

அக்டோபர் 27 ல் கட்டுநாயக்காவிற்கான அதிவேக பாதை:

கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பிற்கான அதிவேக பாதையை எதிர்வரும் 27ம் திகதி சனாதிபதி திறந்துவைக்கவுள்ளார் கடல்மண் சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள முதலாவது அதிவேக பாதையாக அப்பாதை அமைந்துள்ளது. சுமார் 25.8 கி.மீற்றர் நீளமான இவ் அதிவேகப்பாதைப் பயணத்தின் ஊடாக சுமார் 20 நிமிடங்களை மீதப்படுத்திக் கொள்ள முடியும்.

 

 

 

சண்டே டைம்ஸ்: 

 

இலங்கை கடற்பரப்பில் அத்து  மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியாவின் அத்து மீறலை எதிர்த்து ஐரோப்பிய  ஒன்றியத்திடம் முறையிட இலங்கை தீர்மானித்துள்ளது.                                                               இவ் விடயம்  தொடர்பாக நடவடிக்கை எடுக்க தயங்கும் பட்சத்திலேயே இலங்கை இவ்வாறு செயற்படும் என கடல் வள பிரதி அமைச்சர் தெரிவித்தார் . அண்மையில்  இலங்கை வர உள்ள வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்த்திடம்  தமிழக மீனவரின் அத்து மீறல் தொடர்பான உண்மை தடயங்களை வெளியிடப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.                 இவ் உண்மை தகவல் ஏற்கனவே இந்தியா, மற்றும் இலங்கைக்கு தெரிந்திருந்த போதிலும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இவ் விடயத்தை பேசபோவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் கம்பனிக்கு நகர அபிவிருத்தி ஒப்பந்தம்:

பல மில்லியன் ரூபா பெறுமதியான நகர விருத்தி ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்த்தான் கம்பனி பெற்றுள்ளது. கம்பனி விதியில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை இக் கம்பனி 99 வருட  குத்தைகைக்கு பெற்றுள்ளது . அந்நிலத்தில் உல்லாசவிடுதி  இரண்டு வீட்டுத்திட்டம்  உள்ளடங்கலாக பாரிய அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ் வீட்டுத்திட்டங்களை தொடரூந்து   சேவை ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது . அத்துடன் கொழும்பு அபிவிருத்தி திட்டத்திற்காக அங்கிருந்து அகற்றப்படும் மக்களும் இவ் வீட்டுத்திட்டத்தில் குடியிருத்தப்படுவர் என தெரிகிறது .  .

 

மன்னார்க் கடலில் சுற்றுலாப்பயணிகள் மூழ்கினர்:

உள்ளூர் சுற்றுலா பயணிகளை  ஏற்றி சென்ற படகு ஒன்றும் மீன்பிடி படகு ஒன்றும் மன்னார் கடலில் மூழ்கி உள்ளன. இந்து சமுத்திரக் கடல் பிரதேசத்தில்  அதிகரித்த காற்றாலும், கடல் சீற்றத்தாலும் இவ் இரு படகுகளும் மூழ்கி உள்ளதாக தெரிகிறது. இவ் இரு விபத்துகளில்  மொத்தமாக  5 பேர் காணமல் போய்யுள்ளனர்.

18 உல்லாச பயணிகளை ஏற்றி சென்ற படகானது முசலியில் தாண்டுள்ளது. இப் படகில் இருந்து  14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் .கடற்படை மாலுமி ஒருவரின் மனைவி, குழந்தை, மாமனார், மாமியார், மச்சாள் ஆகிய நால்வரும் கடலில் கணாமல் போயுள்ளனர். மீன்பிடிப் படகானது முள்ளிக்குளம் பகுதியில் தாண்டுள்ளது. அப் படகில் இருந்த ஒரு மீனவர் மீட்கப்படுள்ளார். அவரது மகன் காணாமல் போயுள்ளார்.

 

 

 

சுடரொளி: 

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

மக்கள் நலனையும் சேவையையும் முன்னிறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுவிழந்து போய்விடும் போலுள்ளது. வடமாகாண சபையின் பிறப்பின் போதே புறக்கணிப்பும், உள்வீட்டுச் சண்டையும் பெரும் அபசகுணங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கா நாம் வாக்களித்தோம், இவர்களையா நாம் எமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்தோம்? வெட்கத்திலும் வெட்கம்!!!!. மக்கள் நலன் மட்டுமே முன்நிறுத்தி தமிழ்தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவக் கட்சிகளும் செயற்படல் வேண்டும் என்பதே எமது விருப்பம். மக்களுக்கா அரசியல் நடாத்த முனையும் எல்லோரும் இதனை தம் மனத்திற் கொள்வது எப்போது?

 

இறுதிப் போரில் மக்கள் பாதுகாப்பை இலங்கை நிராகரித்தது ஐ.நா:

இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மக்கள் பாதுகாப்புத் தொடர்பாக ஐக்கிய நாடுகள்  சபை முன்வைத்திருந்த திட்டங்களை அரசு முழுஅளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தம் வலியுறுத்தி வந்தது. அத்துடன் யுத்தத்தைத் தற்காலிகமாகவேனும் நிறுத்தி மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திக்கொண்டிருந்த போதும் இலங்கை அதனைக் கவனத்திற்கொள்ளவே யில்லை என இன்னர்சிட்டி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

 

முள்ளிவாய்க்காலில் 9 உறுப்பினர் பதவி ஏற்பு:

பொதுப் பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணித்த தமிழத் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் தமது பதவியேற்பை நிகழ்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

தி.கா., பிரபா, ராதா, அருந்திக்க, சொய்ஷா, சுதர்சினி ஆகியோருக்கும் பிரதி அமைச்சர் பதவிகள்:

ஏற்கனவே பெரும் அமைச்சர் பட்டாளத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சரவை மேலும் விரிவாக உள்ளது. இவ்வமைச்சரவை விரிவாக்கத்தின் போது திகாம்பரம், பிரபா கணேசன், இராதாகிருஸ்ணன் ஆகியோருக்குப் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.

 

இறுதிப் போரின்போது ஐ.நாவின் தோல்வி; 

இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செய்ல்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் தொடர் அறிக்கையினை சபை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியில் ஐநா வின் செயலாளர் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைகள் சந்திப்பு:

ரணில், கரு மற்றும் சஜித் ஆகியோர் ஐக்கிய தெசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிகின்றது. அதற்காக இவர்கள் அடுத்த வாரம் அளவில் சந்தித்துப் பேசுவர் எனவும் தெரிகின்றது.

 

வடக்குக் கடற்கொந்தளிப்பில் மூழ்கிய படகுகள் 150:

வடமராட்சி தொடக்கம் முல்லைத் தீவின் செம்மலை வரை ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால் சுமார் 150 மீனவ வள்ளங்கள் கடலில் மூழ்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. வடமராட்சிப் பிரதேசத்தில் 100 வள்ளங்களும் முல்லைத்தீவில் மேலும் ஐம்பது வள்ளங்களும் கடலிற்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவற்றுள் பெருமளவான வள்ளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வடமாகாண மீனவர் சங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

வீரகேசரி:

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியைச் சேர்ந்த சிலர் பங்கேற்க மறுத்துள்ளமையானது அவ்வமைப்புக்குள் குத்துவெட்டு உருவாகியுள்ளதைக் காட்டி நிற்கின்றது. அதனால் பேரினவாதிகளுக்கும் சிங்களக் கடும்போக்காளர்களுக்குமே கொண்டாட்டம். தமிழ் மக்களோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த வெற்றியைப் பார்த்து உலகமே வியந்துள்ள நிலையில் அக் கூட்டமைப்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதுவிட்டமை வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தமைக்குச் சமனாகும். அதனை மக்கள் எப்போதுமே மன்னிக்கமாட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமையை மனிதாபிமானத்துடன் வலியுறுத்திக் கூறவிரும்பகின்றோம்.

 

மக்களுக்குத் துரொகம் இழைக்கும் வகையில் நாம் எப்போதுமே செயற்படமாட்டோம் – சம்பந்தன்:

அமைச்சர்களைத் தேர்வு செய்தவர் விக்னேஸ்வரனே! அந் நியமனங்கள் தகுதியிலும் நேர்மையின் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தள்ளார். அமைச்சரவை மற்றும் அங்கத்தவர் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்கள் ஏன் பங்குகொள்ளவில்லை எனக் கேட்ட போதே இத்தகவலை சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்போது சில கட்சித் தலைவர்கள் தமது விருப்பங்களை வெளியிட்டு அதற்கேற்ப அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மக்களின் நம்பிக்கைகளை வீணடிக்காதீர்கள் – மன்னார் ஆயர்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிப்பிரமான வைபவத்தில் உறுப்பினர்களிற் சிலர் கலந்துகொள்ளாததைக் கடுமையாகக் கண்டித்துள்ள மன்னார் ஆயர் இவ்விடயம் பெருங்கவலையை ஏற்படுத்துவதாகவும், கண்டிக்கத்தக்கதாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தெரிவுக்குழுவின் தீர்மானம் திணிக்கப்படப் போகின்றது மு.கா:

இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினதும் முஸ்லிம்காங்கிரசினதும் பங்குபற்றுதல்கள் இல்லாமற் போய்விட்டது. எனவே இத் தெரிவுக்குழுவால் எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை எம்மீது திணிக்கவே அரசு முயற்சிக்கப்போகின்றது என மு.கா செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

நாகை மீனவர்களை வாளால் வெட்டியவர்கள் தென் இலங்கை மீனவரே:

நடுக்கடலில் காகை மீனவர்களை திடீரெனத் தாக்கி வாளால் வெட்டிப் படுகாயப் படுத்தியவர்கள் இலங்கையின் தென் பகுதி மீனவர்களே என நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10ம் திகதி இந்திய மீனவர்கள் நால்வர் கோடிக் கரைக்குத் தெற்காகத் தமது கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

 

நவம்பரில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கும்:

ஏழு வீதத்தால் பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்கப்போவதாக தனியார் போக்குவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு நவம்பர் மாதம் முதல் அமுலுக்குவரவுள்ளது.

 

பதவியேற்பை நிராகரித்தற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவே:

தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் ஒருமித்த முடிவைப் பெற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையான முடிவினை எடுத்தபடியாலேயே பதவியேற்பினைத் தாம் புறக்கணித்தாக ஈபிஆர்எல்எவ், புளொட், டெலோ ஆகிய கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது.

 

– மாயன் –

 

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்