ஞாயிறு 20/10/2013 : இலங்கைவரும் இந்திய அமைச்சர்கள் இந்திய மீனவர்கள் தொடர்பில் பேசுவது கிடையாதுஞாயிறு 20/10/2013 : இலங்கைவரும் இந்திய அமைச்சர்கள் இந்திய மீனவர்கள் தொடர்பில் பேசுவது கிடையாது

வீரகேசரி:

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

 

பொருளாதாரமும் அரசியலும் தனித்துவமான தமிழர் எழுச்சிக்கு எப்போதுமே துணை நிற்பவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பல தடவைகள் தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை இழந்து, பொருளாதார வளங்கள் சிதைக்கப்பட்ட போதும் அவர்கள் மீள எழுச்சி கண்டார்கள் என்பது வரலாற்றுப் பதிவு. அதனை இனிச் செம்மைப்படுத்தும் பணி வடமாகாண சபையிடம் தேங்கிக் கிடக்கின்றது. வடக்கில் போர் உருவாகக் காரணமானவற்றில்; வேலையின்மையும் ஒன்றே. எனவே அவற்றைக் கருத்திற்கொண்டு வடக்கில் ஊழல்கள் அற்ற சிறந்த அரசை ஓச்சுவார்களாயின் வடபகுதியில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதற்கு உள்வீட்டார் அனைவரும் ஒத்துழைப்பதுடன் மத்திய அரசுடன் விட்டுக் கொடுத்து பயணிப்பதும் இன்றியமையாதது.

 

கூட்டமைப்பும் இந்தியாவும் ஒன்றிணைந்து அமைக்கவுள்ள தமிழீழம்:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இந்தியா தமிழீழத்தை அமைக்க முற்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அதனையிட்டு அரசு கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும். அத்துடன் தூரநோக்குடன் செயற்படவும் வேண்டும் எனத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

 

முதலமைச்சர் மாநாட்டில் வடக்கின் முதல்வர் | ஏற்றுக்கொள்ள முடியாது மாவை:

சனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் வடக்கின் முதல்வரையும் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பை ஏற்றுக்கொள்வது ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்வதற்குச் சமமானது என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி முறையை ஏனைய தேசிய இனங்கள் மீது திணிக்கும் செயற்பாடாகவே அதனைக்கருத வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

காலநிலைப் பாதிப்பால் காலன் ஒரு உயிரைக் கவர்ந்தான்:

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக தற்போதுவரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அத்துடன் சுமார் 2000 பேர் பாதிப்புள்ளாகியும் உள்ளனர்.

 

ஒற்றுமையை உடைக்க மாட்டோம் – சித்தார்த்தன்:

கூட்டமைப்பின் ஒற்றுமையை எப்போதுமே உடைத்துச் சீரழிக்க மாட்டோம் என பளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார். சில முடிவுகள் எடுக்கப்பட்ட போது எமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றோமே ஒழிய எச்சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பை குலைக்க நாம் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும்:

இலங்கைத்தழிழர்கள் உட்பட இந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும் என பாரதிய சனாதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

விலையேற்றங்களை மறைக்கவே பொநலவாயக் கொண்டாட்டங்கள் – ஐ.தே.க:

அன்றாடம் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றித் தமக்கான சுயலாபங்களைத் திரட்டிக்கொள்ளும் பணியில் அரசு இருப்பதாக ஐ.தே.க குற்றங்சாட்டியுள்ளது.

 

இலங்கைவரும் இந்திய அமைச்சர்கள் இந்திய மீனவர்கள் தொடர்பில் பேசுவது கிடையாது:

இலங்கைக்குப் பயணிக்கும் இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அவ்வமைச்சர்களும் அதிகாரிகளும் இந்திய மீனவர்கள் தொடர்பாகப் பேசுவதேயில்லை.அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது இந்திய மீனவர் பிரச்சனையை அவர் இலங்கையில் விவாதிக்கவே இல்லை. அவர் இந்தியா திரும்பிய மறுநாளே 22 மீனவர்கள் கைதாகியுள்ளனர் என இராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்.

 

 

– மாயன் –

 

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

ஆசிரியர்