வீரகேசரி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
இலங்கையில் அபிவிருத்திப் பாதையில் பின் தங்கி நிற்பது வடக்கு மாகாணமே. போரினால் பெருமளவு அழிவுகளைச் சந்தித்துள்ள காரணத்தினாலேயே அம்மாகாணம் அபிவிருத்தியில் இந் நிலைக்குத் தள்ளப்பட்டது. வடக்கில் தற்போதுவரை காத்திரமான அளவில் தொழிற்சாலை என்று சொல்லிக்கொள்ள எவையும் இல்லை. இவ்வாறுள்ள நிலைமைகளில் வடபகுதியின் அபிவிருத்திக்கு உதவி செய்வதற்காக வெளிநாட்டுத் தூதரகங்கள் சில முன்வந்துள்ளன. முக்கியமாக வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப அமெரிக்கா சுமார் 12000 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா செலவிடத் தயாராயிருப்பதாக அமெரிக்கத் தூதர் வடக்கில் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரியாவால் வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க கொரியா முன்வந்துள்ளதாக அந் நாட்டுத் தூதர் அறிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஒருமித்து வடமாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்க முன்வந்தால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம் எவ்வாறு யுத்தத்தின் பின் மீட்சி கண்டது என்பதற்கு வடக்கு நல்லதோர் உதாரணமாக உலகிற் திகழும்.
இசைப்பிரியாவின் கொலை கண்டிக்கத்தக்கது – ப சிதம்பரம்:
விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளரானஇசைப்பிரியாவின் கொலையும் வன்புணர்வும் கண்டிக்கத்தக்கது என இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வாரா? இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு இன்னும் நிறையக் காலம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமற் போனோர் விபரங்களைத் திரட்டும் குழு வடக்குக் கிழக்கிற்கு இன்னும் வருகை தரவில்லை:
1990ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை காணாமற் போனவர்களின் விபரங்களைத் திரட்டுவதற்காக சனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஒரு முறையேனும் வடக்கிற்கோ அன்றேல் கிழக்கிற்கோ வருகைதரவில்லை என நீதி சமாதான ஆணைக்குழுவின் அதிகாரி வண. பிதா. மங்களராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளி:
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியினுள் முதன்முறையாக தீபாவளி கொண்டாடப்பட ஏற்பாடாகியுள்ளது. இவ் ஏற்பாட்டிற்காக அமெரிக்க இரு அவைகளான பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் இரு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அம் முன்மொழிவுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம் முன்மொழிவுகளுக்கு அமையவே தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.
நேசக்கரத்தை நாம் நீட்டியுள்ளோம்- அரசின் கைகளிலேயே முடிவுள்ளது:
வடமாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் நாம் நல்ல சமிக்ஞைகளை அரசிற்குக் காட்டியுள்ளோம் இனி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்;. இருந்தாலும் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன இந்த நிலைமை உண்மையான விசுவாசமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தென்னமரவாடியைப் பதவிஸ்ரீபுரவுடன் இணைக்க முயற்சி:
தொன்மை மிகுந்த தென்னமரவாடித் தமிழ்க்கிராமத்தை பதவிஸ்ரீபுரவுடன் இணைக்க அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது என கிழக்கின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். அதற்காகவே மகாவலி எல் வலயம் என்ற பெயரில் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)