வீரகேசரி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
பொதுநலவாயத்தில் பல்வேறான விடயங்களைப் பேசப் போவதாகப் பல்வேறு அரச தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றுள் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் காணுமாறு வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் பேச வேண்டி ஏன் ஏற்பட்டது எனில் போர் முடிந்து நான்கு வருடங்களாகியும் இன்னும் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலேயே. ஆகவே இம்மாநாட்டின் தருணத்திலாவது இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நல்லதொரு சமிக்ஞையை வெளியிட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
மன்மோகன்சிங் மாட்டார்- குர்ஷித் தான் வருவார்:
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன்சிங் வர மாட்டார் என்றும் குர்சித்தான் வருவார் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
தங்கக் கட்டிகளைக் கடத்த முனைந்தவர்கள் கைது:
இலங்கையில் இருந்து கட்டுநாயக்கா ஊடாகத் தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற இருவர் கைதாகியுள்ளனர். இந்தியர்களான இவர்கள் 17 தங்கக் கட்டிகளை இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயன்றபோதே கைதாகியுள்ளனர்.
இராணுவத்தை அகற்றுவோம் – ஆளுனரை மாற்றுவோம் என்ற த..தே. கூ எங்கே? ஈ.பி.டி.பி:
இராணுவப் பிரசன்னத்தை வடக்கில் குறைப்போம் என்றும், துயிலும் இல்லங்களைப் புனரமைப்போம் என்றும், ஆளுனரை மாற்றுவோம் என்றும் கூட்டங்களில் பேசியதாலேயே வடக்கின் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பேராதரவை வழங்கினார்கள். ஆனால் இவற்றை செய்வதற்கான எவ்வித முன்மொழிவுகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்காதிருப்பதாக ஈ.பி.டி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தத்தால் ஏற்பட்டஉயிரிழப்பை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்:
யுத்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துச் சேத விபரங்களைவ வீடு வீடாகச் சென்று திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இவ் வேலைத்திட்டத்தினை தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைத் தமிழர் மீது பிரத்தானியாவிற்கு அக்கறையில்லை – தே.ப.தே.இ:
இலங்கைத் தமிழர் மீது எவ்வித அக்கறையும் பிரித்தானியாவிற்கு இல்லை என தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறே இலங்கையின் மீதும் அந்நாட்டிற்கு எவ்வித அக்கறையும் இல்லை என அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)