வீரகேசரி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
வடக்குக் கிழக்கில் தமிழ்மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன, இராணுவப் பிரசன்னம் நீடிக்கின்றது, மனித உரிமை மீறல்களும் தொடர்கின்றன, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை, காணாமற்போனோர் விவகாரம், யுத்தக்குற்றச்சாட்டுகள் என நீள்கின்றது பட்டியல். இவ்விடயங்களை இலங்கை அரசு இதய சுத்தியுடன் பொதுநலவாயத் தலைவர்களின் உதவியுடன் தீர்க்க முயற்சிக்க வேண்டும். தமிழர்களுக்குத் தொடரும் தலையிடி அரசிற்கும் தான் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை – டேவிட் கமரூன்:
அடுத்தவருடம் மார்ச் மாதத்திற்குள் யுத்தக் குற்றச்சாட்டகள் தொடர்பான சுயாதீன விசாரணையை நிறைவு செய்யாது விட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து சர்வதேச விசாரணையைக் கோருவோம் என ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெமரூன் தெரிவித்துள்ளார்.
9 சனாதிபதிகள் 16 பிரதமர்கள் உட்பட 50 பிரதிநிதிகள்:
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதநலவாய நாடுகள் தலைவர்களின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டவர்களில் 9 சனாதிபதிகள், 5 உப சனாதிபதிகள், 16 பிரதமர்கள், 5 வெளிவிவகார அமைச்சர்கள் உட்பட ஐம்பது பிரதிநதிகள் 47 நாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ளனர்.
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பான சர்வதேச விசாரணையை ஏற்க மாட்டோம்:
இறுதி யுத்தத்தில் நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கையின் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
கெலம் மக்கரேயின் விடயத்தில் நாட்டிற்கு அபகீர்த்தி – ஐ.தே.க:
கெலம் மக்கரே தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்ட முறையினால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் அராஜக நடவடிக்கை மேலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் ஊடக சுதந்திரம் இருப்பதாகத் தெரிவித்தே கலம் மக்கரேயிற்கு விசா வழங்கிய அரசு தனது நடவடிக்ககைகளால் அவ்விசாவிற்கு எவ்வித வலிதும் இல்லை என்பதை வெளிக்காட்டி விட்டது என மேலும் தெரிவித்துள்ளது.
“வணக்கம்” நீக்கப்பட்டது ஏன்? – “எனக்குத் தெரியாது” | அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா:
பொதுநலவாயச் சின்னத்திலிருந்து வண்க்கம் என்ற தமிழ் வரவேற்பெழுத்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிங்கள வரவேற்ப எழுத்தான ஆயுபொவன் எனத் தமிழில் ஏன் எழுதப்பட்டுள்ளது என வெளிநாட்டுத் தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தான் அக்குழுவில் இடம்பெறவில்லை என்று பதிலளிளத்துத் தப்பிக்கொண்டார்.
இளவரசர் சாள்ஸ் கண்டிக்கும் பயணம்:
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் மற்றும் கமீலா தம்பதியினர் மலைநாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர். கண்டி, நுவரஎலிய போன்ற இடங்களுக்கும் பயணித்த அவர்கள் பேராதனைத் தாவரவியல் பூங்காவிற்கும் பயணித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
சுடரொளி:
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
பிரித்தானியப் பிரதமரின் வரலாற்றுப் பயணமாக வடக்கின் பயணம் அமைந்திருந்தது. அப்பயணத்தின் போது பொது மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. வடக்கு மக்கள் இன்றும் போரின் மத்தியிலேயே வாழ்கின்றார்கள் என்று பிரித்தானியப் பிரதமர் சொன்னதற்கு அரசே காரணங்களை வகுத்துக் கொடுத்துள்ளது. பிரதமர், உதயன் ஊடக நிறுவனத்திற்குப் பயணித்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்வேன் எனத் தெரிவித்துள்ளமை நாடு முழுவதுமுள்ள ஊடகவியலாளர்களுக்கு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான உந்து சக்தியாக இருக்கப் போகின்றது என்பதே உண்மை.
சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாது – கெமரூன்:
அடுத்த நான்கு மாதத்திற்குள் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை அரசு மேற்கொள்ளாது விட்டால் சர்வதேச விசாரணையைத் தவிர்க்க முடியாது போகலாம் என பிரித்தானியப் பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய இறுதி அறிக்கையில் மனித உரிமைகளுக்கா முதலிடம்?:
பொதுநலவாய மாநாட்டின் இறுதி அறிக்கையில் வெளிப்பட இருக்கின்ற பொதுநலவாய அமைப்பின் எதிர்கால நோக்கம் தொடர்பாக சிக்கல் நிலை எழுந்துள்ளது. பலமான நாடுகளான பிரிட்டன், கனடா, மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட அரசுகள் பொதுநலவாயத்தின் எதிர்கால நோக்கங்களாக மனித உரிமைகளை பாதுகாத்தல், போர்க் குற்றங்களைத் தவிர்த்தல், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல், போன்ற விடயங்களைக் கரத்திற்கொள்ள ஆசிய, ஆபிரிக்க நாடுகளோ அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட கொள்கைகளே முன்வைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளன.
மாநாட்டு வாய்ப்பினை உதறியது மொறீசியஸ்:
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மொறீசியஸ் மறுத்துவிட்டது. இதனால் அடுத்த மாநாட்டை நடாத்தும் வாய்பபை அந்நாடு இழந்துள்ளது. ஏனெனில் 23வது மாநாட்டிலேயே அடுத்த மாநாடான 24வத மாநாடு நடாத்துப் பொறுப்பை குறித்த நாடு பெற்றுக் கொள்ள வேண்டும்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)