வீரகேசரி:
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
அரசாங்கம் இனியாவது மக்களின் மன உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியச் சென்ற வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவை அரசு தடுத்துள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சனாதிபதி செயலில் காட்ட வேண்டும் -சம்பந்தன்:
வடக்கு மாகாணசபையுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக சனாதிபதி தெரிவித்துள்ளார். இதனை அவர் நோர்வேயின் இராசதந்திரிக்குத் தெரவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் ஆனால் அதனை அவர் செயலில் காட்ட வேண்டும். அதியுயர் பாதுகாப்பு வலையமான வலிகாமம் பிரதேசத்தில் தமிழருக்குச் சொந்தமான வீடுகள், கோவில்கள் ஆகியன உடைத்தழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவ்வாறு செய்து கொண்டு இவ்வாறு கூறுவது பொருத்தமற்றது என்றார் சம்பந்தன்.
இந்து ஆலயங்கள் இரத்தினபுரியில் உடைந்தன:
நான்கு இந்து ஆலயங்கள் இரத்தினபுரியில் ஒரே வாரத்தில் உடைத்து தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் நிகழ்ந்த இக் கொள்ளைகளால் பெறுமதியான பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக மனோகணேசன் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கொள்ளையர்க்கு எதிரான நடவடிக்கைளை முன்னெடுப்பதாகக் காவல்துறைமா அதிபர் உறுதியளித்துள்ளார்.
மாவீரர் தின நடவடிக்கைகள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை:
மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நடைபெற்றதாகக் கூறப்படும் விழாக்கள் பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பாகத் தனித்தனியாக விசாரணைகள் நடைபெறும் என்றும் அறியக்கிடைக்கின்றது.
பிரிட்டன், கனடா, அமெரிக்கா தமிழீழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கமுடையவை – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்:
மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்குள் ஊடுருவி தமிழீழ இராச்சியத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவை செயற்படுகின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தொடரும் இராணுவக் கண்காணிப்பால் நாம் அச்சமடைந்துள்ளோம். – வட மாகாண கல்வி அமைச்சர்:
கடந்த 27ம் திகதிக்குப் பின்னர் புலனாய்வாளர்களின் தொடர் கண்காணிப்பால் தான் அச்சமடைந்துள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர் கண்காணிப்பானது தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு வித அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
சுடர்ஒளி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
அல்குவேதா தலைவர் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனை நினைவு கூற அமெரிக்க அனுமதிக்குமா ? என பாதுகாப்புச் செயலர் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூறுதல் தொடர்பாகப் பேசும் போது கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதில் ஆம் என்றே வரும். ஏனெனில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை நினைவு கூறும் செயற்பாடு அமெரிக்காவில் வருடாவருடம் நிகழ்கின்றது. அதனை அமெரிக்க அதிகாரிகள் தடுப்பதில்லை. அதனைச் சரியாகப் பாதுகாப்புச் செயலர் விளங்கிக் கொள்வாராயின் உண்மையான நல்லிணக்கம் இலங்கையில் ஏற்பட்டு விடும்.
யாழ் பயணமாகும் ஐ.நா விசேட ஆணையர்:
ஐ.நாவின் விசெட அறிக்கையாளர் யாழப்பாணத்திற்கும், முல்லைத்தீவிற்கும் பயணமாகவுள்ளார். அங்குள்ள மக்கள். அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளார்.
முதலில் நடைபெறவுள்ளது மேல்மாகாணசபைத் தேர்தலா சனாதிபதித் தேர்தலா?
2014ல் முதலில் மேல்மாகாணசபைத் தேர்தலையா? சனாதிபதித் தேர்தலையா நடாத்துவது என்பதில் ஆளும் கூட்டுக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
ஈரானியத் தடையில் இலங்கைக்கு விதிவிலக்கு:
அமெரிக்கா ஈரானின் மீது விதித்துள்ள தடைகளில் இருந்து இலங்கைக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபைத்தவைர் கொலை பலகோணங்களில் விசாரணை:
நெடுந்தீவு பிரதேச சபைத்தவைர் படுக்கையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இக் கொலை தொடர்பாகப் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் விசாரணையின் ஊடாகச் சாதகமான பதில்கள் எவையும் தற்போது வரை கிடைக்கவில்லை.
இனமதச் சுதந்திரம் தொடர்பாக விசாரணை – அமெரிக்கா:
இன மற்றும் மதச் சுதந்திரம் இலங்கையில் இருக்கின்றதா என்பதை அறிய அமெரிக்க காங்கிரஸ் குழுவொன்றை நியமித்துள்ளது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)