ஞாயிறு 15/12/2013 :மன்னார் ஆயர் நியாயத்திற்காக குரல் எழுப்புபவர்- த.தே.கூ வின் ஆலோசகர் அல்ல – கூட்டமைப்புஞாயிறு 15/12/2013 :மன்னார் ஆயர் நியாயத்திற்காக குரல் எழுப்புபவர்- த.தே.கூ வின் ஆலோசகர் அல்ல – கூட்டமைப்பு

Rayappu Joseph_CIசண்டே லீடர் :

 

ஜெனீவாவை நோக்கிய இராசதந்திர நகர்வுகள்:

மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரைக் கருத்திற் கொண்டு அரசு பெரும் எடுப்பிலான இராசதந்திர நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. அதற்குக் கட்டியம் கூறுமாற்போல பாதுகாப்புப் படைகளால் தயாரிக்கப்பட்ட எட்டு சலனப்படங்கள் (வீடியோ) உலகெங்கும் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வாறு அந்தளவிற்கு நிகழ்ந்துள்ளன என கொழும்பிலுள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தொடர்ந்து விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது.

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன:

உள்ளுராட்சி சபைகள் பலவற்றில் 2014ம் ஆண்டுக்கென முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டன என்பதை ஆராயும் நடவடிக்கைகளை சனாதிபதி செயலகம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான நிலைமை ஐ.ம.சு முன்னணிக்கு எழுந்ததற்கு தேசிய மட்டத்தில்  செயற்படும் அக் கட்சியின் சில அரசியல் தலைவர்களே பொறுப்பு எனவும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்; கூறப்பட்டுள்ளது.

 

சொகுசுக் கார்களைக் கம்பனிக்கு வழங்கினால் நடவடிக்கை – ஜே.வி.பி :

பொதுநலவாயத் தலைவர்களின் பாவனைக்கு எனத் தருவிக்கப்பட்ட சொகுசு வாகனங்களை மீண்டும் உரிய கம்பனியிடம் திருப்பிக் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.வி.பி தெரிவித்துள்ளது.                     54 பென்ஸ் கார்களை திருப்பிக் கொடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது என்ற தகவல் வெளியான நிலையிலேயே ஜே.வி.பி இவ்வாறு அறிக்கையிட்டுள்ளது. இக்கார்களை வரியின்றிக் கொள்வனவு செய்துள்ள இலங்கையின் நிதியமைச்சானது அக்கார்களைக் கொள்வனவு செய்வதற்கான முழுச் செலவையும் ஏற்கனவே செலுத்தியுள்ளது. இந்நிலையில் கார்களைத் திரும்பவும் கம்பனிக்கு ஏன் வழங்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பி அக் கார்களைப் பகிரங்க ஏலத்தில் விற்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

 

மேல்மாகாண சபை தலைமை வேட்பாளர் யார்?

எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலில் தனது தலைமை வேட்பாளர் யார்? எனத் தற்போதுவரை தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

 

இலங்கையிலும் மரிஜூவானா உற்பத்திக்கு முயற்சி:

இலங்கையில் மரிஜூவானா விற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரும் சட்டமூலமொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப் போவதாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.                                ஆயுர்வேத வைத்தியத்தில் ஓர் மருந்துப் பொருளாகக் காணப்படும் மரிஜூவானா ஓர் போதைப் பொருளாகவும் இருப்பதாலேயே இலங்கையில் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 

ஹிரூணிகா எதிர்பார்க்கும் முதலமைச்சர் பதவி:

சுட்டுக் கொல்லப்பட்ட சனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்ர வின் மகள் ஹிரூணிகா, மேல் மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளராகப்  போட்டியிட விருப்பம் கொண்டுள்ளார். அதனை சனாதிபதியிடம் தெரிவிக்கும் பொருட்டு ஹிரூணிகாவும் அவரது தாயாரும் சனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

 

கொழும்பு மாநகரசபை ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்:

உள்ளக விசாரணைகள் மற்றும் உள்ளக இடமாற்றங்களில் தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் கொழும்ப மாநகர ஆணையாளரின் அதிகாரங்களை குறைக்கப்போவதாக கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் தெரிவித்துள்ளார்.

 

 

வீரகேசரி :

ஆசிரியரின் பேனாவில் இருந்து:

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டிடங்கள் உடைக்கப்படுவது பெரும் துன்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. சிறுகச் சிறுக அமைத்த வாழ்விடங்களும் வீடுகளும் வியாபாரத் தளங்களும், கோயில்களும் உடைக்கப்படுவது போரினால் நொந்துபோயிருக்கும் மக்களின் வலியையும் வேதனையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இவற்றை விடுத்து இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் குடியமர வழி செய்தால் மட்டுமே மனிதாபிமானத் தீர்வொன்றை மக்களுக்கு வழங்கியதாக இருக்கும்.

 

அனைத்து அதிகாரங்களும் சனாதிபதியிடம் – நல்லதல்ல – சம்பந்தன்:

நல்லிணக்கத்துக்கு குந்தகமாக அமையப் போவது சனாதிபதி அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்வதே. இந் நடவடிக்கை நல்லதல்ல. வடக்கு மக்களின் சனநாயகத் தீர்ப்பை இந்த அரசும் அரச அதிகாரிகளும் ஏற்று நடக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

வடமாகாணசபையின் சீரான இயக்கத்துக்கு ஆளுனராக வரவேண்டியவர் ஒர் சிவிலியனே – ஐதெக:

வடமாகாண சபையின் சீரான செயற்பாட்டிற்கு அரசாங்கம் வழி செய்ய வேண்டும். அதற்கு முக்கியமாக இராணுவத் தளபதியொருவரை ஆளுனராக நியமித்தது தவறானது. அவரை விடுத்து சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிப்பதே நல்லது என ஐ.தே.க தெரிவித்துள்ளது.

 

தர்மபுரத்தில் பரீட்சை எழுத வந்த முதலை:

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் க.பொ.த பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திடீரென 5 அடி நீளமான முதலை அம் மண்டபத்திற்குள் புகுந்தது. பரீட்சார்த்திகள் அதனைக் கண்டவுடன் அல்லோலகல்லோலப் பட்டுள்ளனர். பின்னர் முதலை அம் மண்டபத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.

 

மன்னார் ஆயர் நியாயத்திற்காக குரல் எழுப்புபவர்- த.தே.கூ வின் ஆலோசகர் அல்ல – கூட்டமைப்பு:

அமைச்சர் சம்பிக்க ரணவக்க மன்னார் ஆயரைக் கூட்டமைப்புடன் தொடர்புபடுத்தி நாடாளுமன்றில் பேசியதை வன்மையாகக் கண்டித்துள்ள கூட்டமைப்பு அவர் நியாயத்திற்காகக் குரல் கொடுப்பவரெயொழிய கூட்டமைப்பின் ஆலாசகர் அல்ல எனத் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் பேசிய ப.அரியநேந்திரன் ஆயர் கூட்டமைப்பின் அங்கத்தவர் கூட அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

 

யாழ் போதானா வைத்தியசாலை ஊழியர் கவனயீர்ப்புப் போர்:

யாழ் போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் தம்மைச் சேவையில் நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்தும் இரண்டாவது நாளாகக் கவனயீர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

 

யசூசி ஒரு முகமூடிக்காரன் – குணதாச அமரசேகர:

புலிகளின் கனவை நிறைவேற்ற இன்று பலர் முயன்று வருகின்றார்கள். ஜப்பானியத் தூதுவரின் செயற்பாடுகளும் கருத்துக்களும் கூட அதற்குத் தூபம் போடுபவையாகவே அமைந்துள்ளன. இவ்வாறான முகமூடிக்காரர்களை நம்பக் கூடாது என தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

 

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

ஆசிரியர்