வீரகேசரி :
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனைத் தடுப்பதற்கு பெற்றோரும் அரசம் கடும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் இரட்டிப்புக் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக நகர்ப்புறங்களில் போதைப் பாவனை அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. மூலைக்கு மூலை மேற்கொள்ளப்படும் இவ் வியாபாரத்தை முறிக்க அரசு சட்ட எந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவது நடைமுறையிலுள்ளது. எனவே அனைவரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் நாடு சீரழிவுப் பாதையில் நகரும் என்பதே உண்மை.
சிறப்புத் தூதுவர் அல்லது சர்வதேச ஆணையம்:
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கடும் நிலைப்பாட்டிலுள்ள அமெரிக்கா இம் மீறல்களை விசாரிக்கவென ஐநாவின் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிப்பதையோ அல்லது சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடலாம் என இராசதந்திரி தயான் ஜெயதிலக எச்சரித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன:
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்; சிறியதும் பெரியதுமாக 54 இராணுவ கடற்படை வான்படைத் தளங்கள் உள்ளன. அவை 646 ஏக்கர் நிலப்பரப்பைத் தம்மகப்படுத்தியுள்ளன என்றும் த.தே.கூ தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணை வரும்- சுரேஸ்:
இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளதை முதலில் ஐ.நா வின் செயலாளர் அமைத்த குழுவும், பின்னர் இலங்கைக்கு வந்த ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையும், கோhக்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க தூதர் ஸ்டீபன் ரெப்பின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் போர்க்குற்றம் தொடர்பாகச் சர்வதேச விசாரணையொன்றைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தாம் உறுதியாக நம்புவதாக த.தே.கூ வின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் விலகிச் செல்ல முடியாது – ஐ.தே.க:
ஜெனீவாவில் எழவுள்ள மனித உரிமைப் பிரச்சனையை இலங்கை அரசினால் தவிர்க்கமுடியாது. அதற்கு முகம் கொடுத்தே ஆக வேண்டும் அவை பெரும் சவால்களாக அரசிற்கு இருப்பதுடன் நாட்டுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
சுடர் ஒளி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
வடபகுதி மக்களின் உறக்கத்தைக் கெடுத்த வாள் வெட்டுக் குழு கைதாகியிருப்பது பாராட்டுக்குரியதே. ஆனாலும் 30 பேரைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்ட இக்குழுவில் 13 பேர் மட்டுமே கைதாகியுள்ளனர். தெற்கைப் போன்று வடக்கிலும் போதைப்பொருள், விபசார நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. அக் கவலையினை அரசு புரிந்து கொண்டு எதிர்கால சந்ததிக்காக நடவடிக்கைகளை இப்போதே முன்னெடுக்க வெண்டும்.
தெற்கில் தேர்தல் சமர்:
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் சமரை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் இழுபறிகளை சந்தித்துள்ளன அவ் அரசியல் கட்சிகள். தேர்தலுக்கான மொத்தச் செலவாக 40 கோடி செலவாகும் என தெரிகின்றது.
ஸ்டீபன் ரெப் பின் அறிக்கை அமெரிக்க வெளியுறவுத் துறையிடம்:
இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள சர்வதேசப் போர்க்குற்றங்களைக் கையாளும்அமெரிக்கப் பிரதிநி;தி ஸ்டீபன் ரெப் தாம் சேகரித்த தரவுகளை அமெரிக்க வெளியுவுத் துறையிடம் கையளிக்கவுள்ளார். இவ்வறிக்கையின் தகவல்களை ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு அமெரிக்கா பயன்படுத்தவுள்ளது.
தண்டவாளக் கடத்தல் முறியடிப்பு:
நுணாவில் மத்தியிலுள்ள கந்தசாமி கோவிலடியில் பாரஊர்தி நிலத்தில் புதைந்ததால் அப்பார ஊர்தியில் கடத்தப்பட்ட இருந்த பெருமளவு இரும்புப் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அக்கோயிலுக்கு அருகிலுள்ள படை முகாம் விரைவில் அகற்றப்படவிருப்பதால் அப்படைமுகாமிலுள்ள தண்டவாளங்கள் மற்றும் செல் மூடிகள் உட்படப் பல இரும்புப் பொருட்களைப் பாரஊர்தியூடாகக் கடத்த முனைந்த நடவடிக்கையே இவ்வாறு முறியடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி 12 வயது – கணவனுக்கோ 15 வயது:
அக்கரைப்பத்தனை பிரதேச தோட்டமொன்றின் சிறுமியொருவர் கர்ப்பமாகியுள்ளார். தமது 12 வயது மகளின் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்ததை அவதானித்த பெற்றோர் அவரை வைத்தியரிடம் பரிசோதனை செய்த போதே தமது 12 வயதுடைய மகள் கர்ப்பமாக இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மகளிடம் விசாரித்த போது நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை அவர் பெற்றோருக்குத் தெரியப்படுத்தவே காவல்துறையின் உதவியுடன் 15 வயதான சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளான்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)