ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

வீரகேசரி :

 

ஆசிரியரின் பேனாவில் இருந்து:

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பலர் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமது குடும்பங்களை எவ்வாறேனும் கரையேற்றி விடலாம் என்ற நினைப்பிலேயே அங்கு செல்கின்றனர். ஆனால் அங்கு நடப்பதோ வேறாக உள்ளது. செல்லும் பலர் சடலங்களாகவே திரும்பி வருகின்றனர். சிலரின் சடலங்கள் கூட இலங்கைக்குக் கிடைப்பதில்லை. உயிரோடு திரும்பும் பலர் மனநோயாளிகளாக இருக்கின்றனர். மேலும் பலர் இயலாமையுடன் இருக்கின்றனர். இவற்றைத் தடுக்க வேண்டுமானால் இலங்கை அரசு பல வேலைவாய்ப்புக்களை உருவாக்க முன்வரவேண்டும். அத்துடன் வெளிநாடு செல்லும் அனைவருக்கும் அந்நாட்டுச் சட்ட திட்டங்கள் தொடர்பாக உரிய அறிவைக் கொடுக்க வேண்டும். அதே போல அந் நாடுகளில் உள்ள தூதுவராலயங்களும் இந் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறிருந்தால் மட்டுமே ஓரளவிற்கேனும் இவ்வாறு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

 

கிழக்கின் தென்னமரவாடி தொடர்பாக வடக்கின் மாகாணசபை உறுப்பினர்:

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்க்கிராமங்களில் ஒன்றான தொன்மைவாயந்த தென்னமரவாடிக் கிராமத்தை அனுராதபுரத்துடன் இணைக்கும் அரசின் முயற்சிகள் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் வெளிப்படுத்தியுள்ளார்.

 

மன்னாரில் மண்டையோடுகள் 44:

மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது.

 

அரசு எதனையும் நிறைவேற்றவில்லை:

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையோ அல்லது ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இந்த அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன் வடமாகாண சபையின் சீரான இயக்கத்திற்கு உதவுவதாக அளித்த வாக்குறுதியையும் அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய மீனவர்கள் காலவரையறையின்றிய வேலை நிறுத்தம்:

இலங்கைச் சிறையில் வாடும் இந்திய மீனவர்களின் விடுதலை வேண்டியும், இலங்கை அரசைக் கண்டித்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையின்றிய வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இவ் வேலைநிறுத்தத்தில் சுமார் 10000 மீனவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு திருமலையில் கூடியது:

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு 26ம் திகதி திருகோணமலையில் கூடியுள்ளது. திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இக் கூட்டம் நடைபெற்றது. அனுமதியளிக்கப்படாத யாரும் உள்நுழைய முடியாதபடி காவல்துறைக் கண்காணிப்புடன் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சி விவசாயிகளின் ஒப்புதலின் பின்னரே குடிநீர் யாழப்பாணத்திற்கு:

கிளிநொச்சியின் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வினியோகிப்பது சம்பந்தமாக கிளிநொச்சி விவசாயிகளுக்குள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பின்னரே குடி நீர் யாழ்ப்பாணத்திற்கு வினியோகிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

வடக்கின் பிரபல பாடசாலைகளை அழிக்கும் முயற்சி:

வடக்கின் கல்வித்தரம் அதிகரித்து வரும் இவ் வேளையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் அதனை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையிட்டுள்ளது. மகாஜனாக் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை அடுத்தே இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.

 

சுடர் ஒளி :

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

ஆதரவு தேடும் படலம் ஆரம்பமாகி விட்டது. இலங்கை தனக்கு ஆதரவான நாடுகளிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டது. அத்துடன் நிற்காமல் ஜெனீவாவில் எதிர் கொள்ளும் பிரச்சனை தனிப்பட்ட அரசிற்கானது அல்ல. அது முளு இலங்கைக்கும் ஆனது. யாரெல்லாம் அரசுடன் இணைந்து செயற்படத் தயாரோ அவரெல்லாம் வரலாம் என அமைச்சர் கெஹலிய அழைப்பு விடுத்துள்ளார். அதே வேளை பிரேரணைக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் களம் இறங்கியுள்ளன. ஆரம்பத்தில் ஐ.நாவை எதிர்த்து அறிக்கையிட்ட அமைச்சர்கள் அனைவரும்; இப்போது அங்கும் இங்கும் அலைந்து ஆதரவு தேடுகின்றனர். எனினும் என்ன? உள்நாட்டின் ஆணைக்குழுக்களாலும் வெளிநாட்டுத் தீர்மானங்களினாலும் பரிந்துரைக்கப்பட்டவற்றை நிறைவேற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை. அவற்றை ஓரளவிற்காவது நிறைவேற்றியிருந்தால் இப்படி அலைந்து ஆதரவு தேடும் நிலை எழுந்திருக்காது.

 

ஆதரவைத் திரட்ட களத்தில் அமெரிக்கா + பிரிட்டன்:

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட்டாகக் களம் இறங்கியுள்ளன.

 

கொழும்பில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்:

நாடு முழுவதும் காணமற்போயுள்ளவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர்.

 

வேட்பாளர் யார்? ஐதேகவும் ஐமசுமு வும் குழப்பம்:

பெருமளவு வேட்பாளர்கள் மாகாண சபையில் போட்டியிட விருப்பம் கொண்டு விண்ணப்பித்துள்ளதால் அவர்களுள் யாரை தேர்தலில் நிறுத்துவது என்பது பற்றிய குழப்பத்தில் இரண்டு முக்கிய கட்சிகளும் தடுமாற்றத்தில் உள்ளன.

 

மஹிந்த அரசு கவிழும் காலம் வந்துவிட்டது –மனோ:

நாடு முழுவதும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பதே. நாம் கவிழ்க்கா விட்டாலும் அவ்வாட்சி தானே கவிழ்ந்து விடும் குறிகாட்டிகள் தோன்றி விட்டன என கொச்சிக்கடை பகுதியில் மனோ கணேசன் உரையாற்றியுள்ளார்.

 

ஆலயக் கலாசாரங்களைப் பேண தனியான அமைச்சு வேண்டும்:

இலங்கையில் ஆலயங்களையும் அவை சார்ந்த கலை, கலாசாரங்களையும் பேணிப் பாதுகாக்க தனியானதொரு அமைச்சு தேவை என்பது காலத்தின் கட்டாணம் ஆகும். இவ் வேண்டுகோள் தொடர்பாக தமிழக் கட்சிகள் அனைத்தும் சிந்திக்க வேண்டும் என சர்வதேச இந்துக் குருமார் சங்க ஒன்றியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

ஆசிரியர்