சன்டே லீடர்:
மின்சார சபையின் வாகனக் கொள்வனவு நிறுத்தப்பட்டள்ளது:
பல மில்லியன் ரூபா செலவில் மின்சார சபையினால் கொள்வனவு செய்ய முயற்சி எடுக்கப்பட்ட வாகனத் தொகுதியை இலங்கை பொது போக்குவரத்து ஆணைக்குழு நிறுத்தியுள்ளது. இவ்வாகனக் கொள்வனவினால் எழும் பல மில்லியன் ரூபா செலவினை பொதுமக்கள் மீது செலுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதனாலேயே இதனை நிறுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏனெனில், திறைசேரியில் தற்போது நிதி இல்லாதிருப்பதால், இந்நிதியினை மக்களிடமிருந்து அறவிட மின்சார சபை முயற்சிக்கும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
தனியார் மின் உற்பத்தியாளர்களால் நிறுத்தப்பட்டதா நான்கு மின் நிலையங்கள்?
தனியார் அனல் மின் உற்பத்தியை மேற்கொண்டு வரும் சிலரால் இலங்கையின் நான்கு மின் பிறப்பாக்கி நிலையங்களும் சூசகமாக நிறுத்தப்பட்டள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசின் தற்போதைய கொள்கையின்படி தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடனான நிரந்தர ஒப்பந்தங்கள் எதனையும் செய்வதில்லை என்பதால், தேவையேற்படும் பொழுது மட்டும் தனிநபர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் நிலைப்பாட்டில் இலங்கை மின்சார சபை உள்ளது. நுரைச்சோலை மின் நிலையமானது, தனியார் மின் உற்பத்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தளயில் பறவைகளைத் தடுக்கப் புதிய திட்டம்:
மத்தள விமான நிலையத்தில் விமான பறப்புக்கு இடையூறாக அமையும் பறவைகளை கலைப்பதற்காக இரண்டு புதிய திட்டமுன்மொழிவு முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கதுவியின் (டேரரின்) ஊடாக பறவைகள் வருவதை அவதானித்து அதியுயர் கொண்ட அடுத்தடுத்து வருகின்ற சத்தத்தினூடாக அவற்றைக் கலைத்துவிடும் திட்டமாகும். அண்மையில் கூட விமானம் பறக்கும் பொழுது இரண்டு மயில்கள் குறுக்கிட்டதால் அவ்விமான இயந்திரம் பழுதானது குறிப்பிடத்தக்கது.
காவல் துறை கைப்பற்றிய கஞ்சாவைத் தாருங்கள்:
காவல் துறையினரால் கைப்பற்றப்படும் கஞ்சாவைத் தம்மிடம் நேரடியாகக் கையளிக்குமாறு ஆயள்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது. “காவல் துறையினரால் கைப்பற்றப்படும் கஞ்சா அழிக்கப்படுவதே முறையாகும். எனினும், மருத்துவ தேவைகளுக்காக அந்த கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு எமக்கு அனுமதி தருமாறு” ஆயள்வேத திணைக்களம் சட்டத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சன்டே டைம்ஸ்:
தடுக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் இரண்டு பரீட்சிப்பின்றி விடுவிப்பு:
260 கிலோ கெரோயின் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட கொள்கலனின் பிரச்சினை தற்போது வரை தீர்க்கப்படாதுள்ள நிலையில், இரண்டு கொள்கலன்கள் பரீட்சிப்புக்கள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டிருப்பதாக சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 20அடி நீளமான இவ்விரண்டு கொள்கலன்களிலும் கழுவல் அறைச் சாதனங்கள் இருப்பதாகவே தெரிவிக்கப்படடிருந்தது. எனினும், சுங்கத் தடுப்புப் பிரிவாலும், வருமான தடையடிப் பிரிவாலும் பரிட்சிப்பதற்காக கைப்பற்றப்பட்டிருந்த இவ்விரண்டு கொள்கலன்களும் உயர் அதிகாரிகளின் கட்டளைக்கிணங்க பரீட்சிப்பு இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் மட்டுமே வந்து போகின்றன:
பயணிகள் எவரும் ஏறவோ அல்லது இறங்கவோ அல்லாத நிலையில் Sri lankan Air lines விமானங்களிற் சில ஏன் மத்தள நிலையத்தில் இறங்கி ஏறுகின்றன எனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து அனைத்து ஆசனங்களும் பயணிகளால் நிரப்பப்பட்ட விமானமொன்று மத்தள விமான நிலையத்தில் இறங்கி ஏறியதாக அவ்விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் எழுதியுள்ள விதத்தில் கேள்வி எழுந்துள்ளது.
வீரகேசரி :
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
வடபகுதி மக்கள் இரு பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர். அவை காணிச் சுவீகரிப்பும் மீள்குடியேற்றத்தின் போதான கைவிடப்பட்ட நிலையும் ஆகும். காணிச் சுவீகரிப்பானது இரண்டு வகையாக நிகழ்கின்றது. சிங்கள மக்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேற்றும் நடவடிக்கையின் மூலமும், இராணுவத்தேவைக்கு காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டின் மூலமும் வாழ்விடங்களைத் தமிழ்மக்கள் இழந்து வருகின்றார்கள்.
அடுத்ததாக மீள் குடியேற்றம் என்ற பெயரில் தரிசு நிலங்களில் கொண்டு சென்று விடப்படும் மக்களை அதற்குப் பின்னர் யாருமே கணக்கில் எடுப்பதாக இல்லை. அவர்கள் செல்வாக்குடன் வாழ்ந்த கடின உழைப்பாளிகள் இன்று பரதேசிகளாகப் போயிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அண்மையில் இந்திய வீட்டுத் திட்டத்தின் 3வது கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை வவுனியாவில் அரங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உண்மை நிலையை உணராமல் இந்திய வீட்டுத் திட்டம் அரசியல்வாதிகளின் அடிவருடிகளுக்கு வழங்கப்படுமானால் அத் திட்டத்தின் உண்மை நோக்கம் எய்தப்படாமலே போய்விடும்.
சர்வதேச விசாரணை தேவை – யாழ் ஆயர்:
வடக்கில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பாக நம்பகரமான விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். அதனை இலங்கை தானாகவே மேற்கொள்ளுமாயின் அவ்விசாரணைகளில் இராணுவத் தலையீடு நிச்சயமாக இருக்கும். எனவே இவ்விசாரணை சர்வதேச மட்டத்திலேயே நடத்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ் வேண்டுகோளை அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்க உதவி இராசாங்க செயலரிடம் தெரிவித்துள்ளார்.
படையினர் முகாம்களைவிட்டு வெளிவருவதில்லை – காவல்துறை கேட்டுக்கொண்டாலே வருகை தருகின்றார்கள் – நீதி அமைச்சர் ஹக்கீம்:
பாதுகாப்புப் படையினர் பொது மக்களைக் கைது செய்வதில்லை. அவர்கள் முகாம்களிலேயே உள்ளனர். அவசியம் ஏற்பட்டுக் காவல்துறை கேட்டால் மட்டுமே பாதுகாப்புப் படையினர் முகாம்களை விட்டு வெளியே வருகின்றார்கள் என இலங்கையின் நீதி அமைச்சர் அமெரிக்க இராசாங்கச் செயலருக்குத் தெரிவித்துள்ளார்.
அதிகூடிய புள்ளிகளைப் பெற்றும் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பில்லை – தமிழ் பரீட்சார்த்திகள் வழக்கு:
எழுத்துப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் தமிழர்கள் என்ற காரணத்தால் கிழக்கு மாகாண சபையால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத தமிழர்கள் ஏழு பேர் வழங்கப்படவுள்ள நியமனங்களை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கின் பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண ஆளுனர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்திய மத்திய அரசால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க முடியும் – சுஷ்மா சிவராஜ்:
பாரதிய ஜனாதாக் கட்சி ஆட்சி அமைத்ததும் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் என மத்திய அரசின் எதிர்கட்சித் தலைவியான சுஷ்மா சிவராஜ் தெரிவித்துள்ளார். தமிழக அரசினால் தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அரசின் மனிதாபிமானமற்ற செயலால் வடமாகாண சபை சீராக இயங்க முடியவில்லை- விக்னேஸ்வரன்:
வடமாகாண சபை எதிர்கோள்ளும் முட்டுக்கட்டைகள் தொடர்பில் சனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதும் அவற்றைத் தீர்ப்பதாக அவர் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. மனிதாபிமானமற்ற இச் செயலால் வடமாகாண சபையின் சீரான இயக்கம் தடைப்பட்டுள்ளது என வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலைமுரசு :
ஆசிரியரின் பேனாவில் இருந்து:
வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூட அரசு கவனத்திற் கொள்ளவில்லை என்பதையே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் தெளிவாகச் சுட்டி நிற்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களில் தமிழர்களே பெரும் இக்கட்டான வாழ்நிலையை நாளாந்தம் சந்தித்து வருகின்றார்கள். எனினும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
ஆனால் தமிழர்களின் பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் வாழ்நிலை வடக்கு கிழக்கில் சற்று தேறிய நிலையாகவே உள்ளது.
அதற்காக அவர்கள் கடைப்பிடிக்கும் அரசியல் தந்திரோபாயம் சற்று வித்தியாசமானது.
ஆனால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு அன்றில் இருந்து இன்று வரை தெளிவானதாகவே இருக்கின்றது. அத் தெளிவினால்தான் வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி வந்துள்ளனர்.
எனவே வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்கும் அதனை முன்னெடுப்பதற்கும் அவற்றிற்கும் மேலாக வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களை சனநாயகப் பண்போடு ஆள்வதற்கும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தேர்ந்துள்ளார்கள்.
இந் நிலையினை சரியாகப் புரிந்து கொள்ள அரசு ஏனோ விரும்பவில்லை. அரசின் நினைப்பின் படி நிவாரணங்களும், அபிவிருத்திப் போர்வைகளும், அழகிகளின் குத்தாட்டங்களும் (கிளிநொச்சியில் மத்திய கல்லூரியின் விளையாட்டுத் திடலில் வடமாகா சபைத் தோ்தற் பிரசார நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்டது), அரசுடன் ஒட்டிவாழும் தமிழ்க்கட்சிகளின் அறிக்கைகளும் வடக்குக் கிழக்கில் உள்ள மக்களின் மனங்களை மாற்றிவிடும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் அரசுடன் ஒட்டியுள்ள கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன் போது நிவாரணம் பெறச் சென்ற ஒருவர் கூறியது ”தாரதெல்லாம் வாங்குவம்இ ஆனால் புள்ளடி மட்டும் வீட்டுக்குத்தான்” என முனுமுனுத்தார்.
இதுதான் தமிழர்களின் மனநிலை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு அரசு உரிய தமிழக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்தை அடைய முடியூம்.
பிரதான தமிழ்க்கட்சியின் தலைவர் தெளிவாக ஒரு விடயத்தைச் சொல்லிவிட்டார். ”ஒரு நாடு – இரு தேசம்” என்பதே அது. அதனை உறுதிப்படுத்த அவர் பொதுக்கூட்டமொன்றில் சிங்கக் கொடியை ஏந்தி சைகை மூலமும் வெளிப்படுத்தி விட்டார்.
ஆனால் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கும் அரசும் அதன் சில கூட்டு இனவாதக் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை புனர்வாழவிற்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோசமிட்டுள்ளன. அதனையும்; தாண்டி மற்றொரு பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க வின் உறுப்பினர் ஒருவர் ”வடமாகாண சபை அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்பட்டு விட்டது- அது சர்வதேச விசாரணையைக் கோரிவிட்டது” எனக் குரலெழுப்பியூள்ளார்.
வட மாகாண சபையின் முதலமைச்சா; தாம் மக்களின் உணர்வூகளையே பிரதிபலித்தோம் எனஇக் குரல்களுக்கு பதிலாகத் தெரிவித்திருப்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதாவது வடக்கு வாழ் மக்கள் சா;வதேச விசாரணையொன்றை வேண்டி நிற்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையே அவர்களின் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் வெளிப்படுத்தி யிருக்கின்றோம் என்பதே அது.
இங்கு தான் முக்கியமான விடயமொன்று தொக்கி நிற்கின்றது. ஒரு நாட்டின் மக்களில் இன அடிப்படையில் பிரிந்துள்ள இரு சாராரில் தெற்கு மக்கள் சுதந்திர விசாரணை வேண்டாம் எனக் கோரும் போது வடக்கு மக்கள் சுதந்திர விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன் அடிப்படையைக் கூர்ந்து பார்த்தால் ”ஒரு நாடு – இரு தேசம்”| என்ற விடயம் உட்கிடையாக ஓடியிருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
அதனைப் புரிந்து கொண்டால் அயலவன் எங்கள் வீட்டுச் சண்டைக்குள் கழுத்தை நீட்டுவானா? புரிந்து கொள்ளாத வரைக்கும் ஜெனீவாவிற்கு படையெடுக்கத்தான் வேண்டும்.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)