ஏகாதசி திதியில், பெருமாளை தரிசிப்போம். நம் பாவங்களையும் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவார் மகாவிஷ்ணு.
ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய அற்புதமான நாள். மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் உன்னதமானது, விரதம் மேற்கொள்வதற்கான நன்னாள் என்றெல்லாம் சொல்லிப் பூரிக்கின்றனர் ஆச்சார்யர்கள்.
மாதந்தோறும் ஏகாதசி நாளில், பெருமாளை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அந்தநாளில், காலையில் எழுந்தது முதல் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். வயதானவர்கள் திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். மேலும் விரதம் மேற்கொள்ளவேண்டும், சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. அவரவரின் உடல் வலுவைப் பொறுத்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஏகாதசி நாளில், பெருமாளின் சகஸ்ரநாமங்களைச் சொல்லிப் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். விஷ்ணுவின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதும் அவரையே நினைத்து பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தரவல்லது.
அன்றைய தினம் மாலையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, திருமாலை ஸேவிப்பது, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும். நம் பாவங்களையெல்லாம் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தந்தருள்வார் பெருமாள் எனப் பூரித்துச் சொல்கின்றனர் பக்தர்கள்.
நன்றி : வி.ராம்ஜி | இந்து தமிழ்