ஸ்வாமினாதன் முருகன்.

முருகனை தகப்பன் ஸ்வாமி அல்லது ஸ்வாமினாதன் என்பார்கள். அதாவது தந்தைக்கே குருவானவர் என்று அர்த்தம். ஸ்வாமிமலைக்கு அப்படி பெயர் வந்ததின் காரணக் கதை ஒன்று உண்டு. ஒருமுறை கைலாயத்துக்குச் சென்ற முருகனை பிரும்மா அவமதித்து விட்டார். ஆகவே அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய முருகன் பிரும்மாவிடம் பிரணவ மந்திரமான ஓம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். ஆனால் பிரும்மாவினால் அதற்கு பதில் கூற முடியாததினால் அவர் தலையில் ஓங்கி அடித்த முருகன் அவரை பிடித்து சிறையிலும் அடைத்து விட்டார் (ஆதி சங்கரரின் ஸ்ரீ சுப்பிரமணிய புஜாங்கம்- ஸ்லோகம் 12).

பிரும்மா சிறை வைக்கப்பட்டதினால் படைப்புக்கள் நின்று விட சிவபெருமானே முருகனை சந்தித்து அதன் விளக்கத்தை தனக்குக் கூறுமாறு முருகனிடம் கேட்க, சிவபெருமானிடம் அவர் தனக்கு சிஷ்யனாக இருந்து அதைக் கேட்க சம்மதித்தால் அதன் அர்த்தத்தைக் கூறுவதாகக் கூறினார். அதை ஏற்றுக் கொண்ட சிவப்பெருமான் சிஷ்யனாக மாற குருவான முருகன் அதன் அர்த்தத்தைக் கூறினார். (குமரகுருபரர், கந்தர்கலை வெண்பா 90 –98).

ஆகவே அவரை ஸ்வாமினாதன் அல்லது குருநாதன் என அழைத்து அவர் தங்கி இருந்த மலைவீட்டை ஸ்வாமி மலை அல்லது திருவேரக்கம் என அழைத்தார்கள் (அருணகிரிநாதர், திருப்புகழ் ). சர்வ வல்லமைப் படைத்த சிவபெருமானோ தன்னுடைய மகன் முன்பு அடங்கி நிற்க வேண்டி இருந்தது.

இதன் தத்துவம் என்ன என்றால் அதீத ஞானம் படைத்தவர்கள் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களுக்கு முன்னாள் சர்வ வலிமைப் படைத்தவர்களும் அடங்கியே இருக்க வேண்டும் என்பதே. அருணகிரிநாதரின் கூற்றின்படி முருகப் பெருமானே பிரணவ மந்திரம் என்றும், சிவனும் முருகனும் ஒன்றே என்றாலும், அதன் அர்த்தத்தை அவருடைய வாயால் கேட்பதே மகிழ்ச்சியை அளிக்கும் என்றே இறைவன் கருதினார் (கந்தரலங்காரம், v. 55 / கந்தர் அனுபூதி v. 36) என்றார். ஞானப் பண்டிதரான முருகன் (திருப்புகழ் 100) அடக்கமே நற்பண்பு என்பதையும், தற்பெருமையுடன் கூடிய ஞானம் அழிவிற்கு காரணமாகி விடும் என்று இதன் மூலம் காட்டுகிறார்.

ஆசிரியர்