கர்ம யோகத்தின் மூன்று படிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கர்ம யோகத்தின் முதல்படி மனதை ஒருமுகப்படுத்துவதாகும். மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம் எனப்படும். அலைபாயும் மனதைக்கட்டுப்படுத்தி மனதில் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள தியானம் உதவும். மனத்தெளிவு பெற்ற பின் மனம் என்னும் கழனியில் முதல் வித்தாக பக்தி என்னும் வித்தை விதைக்க வேண்டும். பக்தியின் வித்தாக தாம் விரும்பும் ஏதாவதொரு தெய்வத்தை குருவாக ஏற்று வழிபாடு செய்து கொண்டு வரவேண்டும்.

கர்ம யோகத்தின் இரண்டாம் படி மனிதநேயமாகும். குருவருள் துணைக்கொண்டு தன்னைப்போன்று இறைவனால் படைக்கப்பட்ட பிற உயிர்களின் உயர்வுகளையும் தாழ்வுகளையும் எண்ணிப்பார்த்தல்; தர்மத்தின் ரூபமாகிய பிற உயிர்களிடத்து இருக்கின்ற உயர்வுகளை மனதில் பதிந்து கொள்ளுதல்; தன் கடமைகளை கர்ம யோகம் மூலம் எவ்வாறு பிறரிடம் செயலாற்றுவது என்பதை அறிந்து தெளிந்து செயலாற்றுதல் போன்றவைகள் கர்ம யோகத்தின் இரண்டாம் படியாகும்.

ஒரு மனிதன் கர்ம யோகத்தைப்பின்பற்றி வாழ்க்கையை நடத்தும் பொழுது ஊழ்வினையானது வாழ்க்கையில் பல சோதனைகளை ஏற்படுத்தி அவனை கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் பொழுது, குருவருள் துணைக்கொண்டு கர்ம யோகத்தை குறையில்லாமல் செய்ய மனிதனாகப்பிறந்து உயர்வான கடமைகளையாற்றிக்கொண்டு தர்ம சொரூபம் கொண்ட உயர்வான ஆற்றலை சேமித்து வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களை நேரில் கண்டு அவர்களின் ஆசீர்வாதங்களை அடிக்கடி பெற்றுக்கொண்டு வந்தால் ஊழ்வினையின் வீரியம் குறைந்து கர்ம யோகம் முழுமை பெற்று அதன் முழுபலனைக்கொடுத்து உயர்வு ஏற்படுத்தும். குருமார்களின் நேரடி ஆசீர்வாதங்களைப்பெறும் பொழுது அவர்கள் சேமித்து வைத்துள்ள நல்லூழ் ஆற்றலின் ஒரு பகுதியானது ஆசீர்வாதம் பெற்றுக்கொள்பவரின் ஆன்மாவிற்குப்பகிர்ந்தளிக்கப்படுவதால் ஊழ்வினையிலுள்ள தீவினைகள் குறைக்கப்பட்டு கர்ம யோகத்தின் முழுபலனை ஒரு மானிடன் அடைய இறையருள் கூட்டுவிக்கின்றது. எனவே, கர்ம யோகத்தின் மூன்றாம் படி மிக முக்கியமான படியாகும்.

ஆசிரியர்