சுமங்கலிப் பிரார்த்தனை பயன்.

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது.

பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.

சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள்.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும்.

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.

இதில், ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவதால், இதற்கு, “மங்கலப் பெண்டுகள்” என்றும் பெயர் உண்டு.

இது தற்காலத்தில் மருவி, “மங்கிலிப் பூண்டு” என்று வழங்கப் படுகிறது.

வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் , மகனுக்கு செய்யும்போது , வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம்.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும்.

வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார்,

மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.

மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது.

இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம்.

அல்லது கன்யா பெண்களாகவும் இருக்கலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம்.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும். அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள். இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள் வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான்.

இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.

இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம்.

இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை. மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம்.

அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.

அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர்.

இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம்.

அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம்.

இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம். இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.

அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப் புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.

முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும். (புதுப் புடவையை அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், முதலில் அவர்கள் மடிப் புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும்).

இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து,மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும்.சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.

பொதுவாக, புடவை நனைத்துக் கொடுப்பதானால், சிரார்த்த சமையலும், அப்படியே புதுப் புடவையைக் கொடுப்பதானால், கல்யாண சமையலும் செய்ய வேண்டும். கல்யாண சமையல் என்றால், மோர்க்குழம்பு, பருப்புசிலி, இது போல செய்ய வேண்டும். எந்த வகை சமையலிலும், கண்டிப்பாக, மஞ்சள் பொங்கல், வாழைக்காய், இவை இரண்டும் இருக்க வேண்டும்.

குளித்து வந்த பெண்டுகளுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜ லம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும். பெண்டுகள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை,சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம். அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில்எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும்.

இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

இதே கிரமத்தில் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு,பெண்டுகள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும்.

பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும்.

ஆசிரியர்