ஐந்து உடம்புகளும் அவற்றால் ஏற்படக் கூடிய காரண காரியங்களும்.

நமது உடம்புக்குள்ளே உயிர் இருக்கிறது. இந்த உயிரைச் சுற்றியே ஐந்து உடம்புகள் மூடிக் கொண்ருக்கின்றன.
அந்த ஐந்து உடம்புகளை

1. தூல சரீரம்
2.சூக்கும சரீரம்
3. குண சரீரம்
4. கஞ்சுக சரீரம்
5. காரண சரீரம் என்பா்.

இவற்றை 1. அன்னமயகோசம் 2. பிராணமய கோசம் 3. மனோமயகோசம் 4. விஞ்ஞானமய கோசம் என்றும்சொல்வது உண்டு. கோசம் என்றால் உறை என்று பொருள்.

1. அன்னமய கோசம்:
நம் கண்களுக்குத் தெரிகிற உடம்பைத் தூலசரீரம் அல்லது அன்னமய கோசம் என்பா். இந்த உடம்பு உணவினால் கட்டப்பட்ட வீடு. தோல், மாமிசம், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் தொகுதி இது! பிறப்புக்கு முன்போ, இறப்புக்குப் பின்போ இந்த உடம்பு கிடையாது. இது நிலையற்றது. இதற்கு உறுதியான குணம் இல்லை. அறிவும் இல்லை. இந்த உடம்பையே பலா் “நான்” என்று அறியாமையால் கருதிக் கொண்ருக்கிறார்கள்.

2. பிராணமய கோசம்:
வாக்கு, கைகள், கால்கள், எருவாய், கருவாய் என்ற ஐந்த தொழிற்கருவிகளுடன் பிணைக்கப்பட்ட காற்று மயமான உடம்பு பிராணமய கோசம் எனப்படும். இது காற்றால் அமைந்த உருவம். இது போவதும், வருவதுமாய் இருப்பது. காற்றைப் போல உள்ளும் புறமுமாய் இருப்பது இந்தக் காற்றுடம்பை ஆட்டி வைப்பது மனம்.

3. மனோமய கோசம்:
ஐம்புலன்களுடன் மனம் என்ற மேலும் ஒரு கருவியுடன் கூடிய உடம்பு மனோமய கோசம். எண்ணங்களை உற்பத்தி செய்வது இந்த உடம்பே! உலகப் பொருள்களில் ஆசையைத் தூண்டி பாவ புண்ணியங்களைச் செய்ய வைத்து மீண்டும் பிறவியில் வந்து விழுவதற்குக் காரணம் இந்த மனமாகிய உடம்பே. இந்த மனம் அழிந்தால் எல்லாம் அழியும்.
பிறவிக்குக் காரணமாயும், பிறவியிலிருந்து விடுபடக் காரணமாயும், இருப்பது இந்த மனமே. இந்த மனம் இராஜசரம், தாமசரம் என்னும் குணங்களால் அழுக்கு அடையும். சத்துவ குணத்தால் தூய்மை அடையும்.

4. விஞ்ஞானமய கோசம்:
ஐம்புலன்களுடன் புத்தி என்ற கருவியும் கூடியது விஞ்ஞான மய கோசம். ஒரு பொருளை அறிவதும், செயல் புரிவதும், இதற்கு நான்தான் கா்த்தா என்று சொல்லிக் கொள்ள வைப்பதும் இந்த உடம்பே ஆகும்.

5. ஆனந்தமய கோசம்:
பரமாத்மாவின் பிரதி பிம்பமாய் இருப்பது ஆனந்தமய கோசம் ஆகும். தனக்குச் சுகம் கிடைக்கும்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் சலனமற்றுத் தூங்கும் போதும், அனைத்துப் புலன்களும் அடங்கிய நிலையில் பேரானந்த நிலை ஒன்று உள்ளது அல்லவா? அந்த ஆனந்தத்தை அனுபவிப்பது ஆனந்தமய கோசமே ஆகும்.

யோகிகளும், ஞானிகளும் எப்போதும் தியானத்தில் தன்னை மறந்த லயத்தில் இருப்பார்கள். அவர்களின் மற்ற உடம்புகள் எல்லாம் அடங்கிய நிலையில்இந்த ஆனந்த மய கோசம் என்ற உடம்போடுதான் இருப்பார்கள்.

ஆசிரியர்