பிராணயாமா மூலம் 480 ஆண்டுகள் உயிர் வாழ முடியும்.

நாம் இடது நாசியில் 16 அங்குலமும், வலது நாசியில் 12 அங்குலம், சுழுமுனையில் 8 அங்குலம் என்று சராசரியாக நிமிடத்திற்கு 15 சுவாசங்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 21600 சுவாசங்களை நடத்துகிறோம்(இது சித்தர்கள் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சுவாசக் கணக்கு). சராசரியாக 12 அங்குலம் சுவாசம் வெளியேவிடுவதில் 4 அங்குலம் குறைந்து 7200 சுவாசம் நஷ்டமாகி 14400 சுவாசமே உள்ளடங்குகிறது என்கிறார்கள். இந்த நஷ்டக் கணக்கை சரி செய்யக் கண்டுபிடிக்கப்பட்ட வழியே பிராணாயாமம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே !

96 தத்துவங்களுக்குள் அடங்கிவிடுகிறான் மனிதன். அவை, அறிவு -1, குணம் -3,வினை -2,மண்டலம் -3, மலம் -3, தோஷம் -3, ஏசனை -3, கரணம் -4, பூதங்கள் -5, பொறிகள் -5, தொழில் -5, கோசங்கள் -5, நிலை -5, அவஸ்த்தை -5, புலன்கள் -5, கன்மேந்திரியம் -5, ஆதாரம் -6, தூண்டல் -8, நாடிகள் -10, காற்று -10 என்பனவாம்.

இதில் 10 காற்றுகளை(வாயு) தசவாயுக்கள் என அழைப்பர். அவை 1 பிராணன், 2 அபானன், 3வியானன், 4 உதானன், 5 சமானன், 6 நாகன், 7 கூர்மன், 8 கிருகரன், 9தேவதத்தன், 10 தனஞ்செயன் என்பனவாகும்.

மனித உடல்கள எதனால் இயக்கப் படுகின்றன? காற்றால்தான். இதையே ஒரு சித்தர் ”காயமே இது பொய்யடா ! வெறும் காற்றடைத்த பையடா !” என்று உறுதிப் படுத்துகிறார்.

மனித உடல் முழுவதும் காற்றானது நீக்கமற நிறைந்து இயங்கியும், இயக்கியும் வருகின்றது.மனித இயக்கத்திற்கு ஆதார சக்தி காற்றுதான் என்று அனைத்து சித்தர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். மனதை இயக்குவதும் சுவாசிக்கும் காற்றுதான். சித்தத்தின் சலனத்திற்கு காரணம் காற்றுதான்.

காற்றைக் கவனித்து தியானிப்பதே வாசியோகம் எனப்படும். அதாவது வாசியை கவனித்து அதனோடு ஒன்றுதல். வாசி என்ற சொல்லைத் திருப்பினால் சிவா அல்லவா, எனவே வாசியோகமே சிவயோகமாகும்.

தியானம் செய்ய சுத்தமான காற்றிருந்தாலே போதும் வேறென்ன வேண்டும் என்பார்கள். மூச்சு இல்லையேல் பேச்சு இல்லை. அதிகாலையில் தியானம் செய்வதன் சூட்சுமம் என்னவென்றால், அதற்கும் காற்றுதான் காரணம்.

சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆனால் அதிகாலையில் அதோடுகூட ஓசோனும் சேர்ந்து கிடைக்கிறது. அப்போது அது அமிர்தக்காற்று எனப்படுகிறது. அமிர்தம் உண்ட பலன் அதற்கு உண்டு. அதாவது நீடித்த ஆயுள் அல்லது மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த அமிர்தக் காற்றே தேவர்கள் சுவாசிக்கும் காற்று என்று சொல்லப்படுகிறது. அமிர்தக் காற்றில் பஞ்சபூத சக்திகள் நிரம்பித் ததும்பி வழிகின்றன.

சுவாசம்தான் மனிதனின் ஆயுளை நிர்ணயம் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்களே.

ஒரு நாயானது ஒருநாளைக்கு 72000 தடவை சவாசித்து 14 வருடங்களில் மரித்துவிடுகிறது. குதிரையானது ஒருநாள் ஒன்றுக்கு 50400 தடவைகள் சுவாசித்து 30 லிருந்து 35 வயதுகாலம் வாழ்ந்து மரிக்கிறது. யானை 28800 தடவைமட்டுமே சுவாசிப்பதால் 100 வருடங்கள் வாழ்ந்து விடுகிறது. ஆமை ஒருநாள் ஒன்றுக்கு 7200 தடவைகள் மட்டுமமே சுவாசிப்பதால் 400 வருடங்கள் உயிர் வாழ்கிறது. பாம்புகள் அதையும் மிஞ்சி 4320 தடவைகள் மட்டுமே சுவாசித்து சுமார் 500 முதல் ஆயிரம் வருடங்கள் கூட உயிர் வாழ்வதாக சொல்லப் படுகிறது.

மனிதனுக்கு விதிக்கப்பட்ட சுவாசமாக சித்தர்கள் குறிப்பிடும் எண்ணிக்கை 21600 ஆகும். அப்படி சுவாசிக்கும் மனிதன் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம் என்கின்றனர். அதே சுவாசத்தை உற்று கவனித்து இழுத்து நிதானமாக மூச்சுவிட பழகிக் கொண்டால் ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர். உதாரணமாக 10800 தடவைகள் நிதானமாக நன்றாக மூச்சுவிட பழகிவிட்டான் என்றால் 240 ஆண்டுகள் உயிர் வாழலாம். 5400 தடவையே நாள் ஒன்றுக்கு சுவாசிப்பவன் 480 ஆண்டுகள் உயிர் வாழலாம் . இதையே திருமூலர் சித்தர்

”காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
கூற்றை உதைக்குங் குறி அதுவாமே!”

என்று குறிப்பிடுகின்றார். நமது சரீரம் அல்லாது மேலும் நான்கு சூக்கும சரீரங்கள் நமக்கு உண்டு என்று சித்தர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் ஐந்து. அன்னமய கோஷம் -இது நம் தூல தேகமாகும். பிராணமய கோஷம் – பிராணனும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. மனோமய கோஷம் – மனமும், கர்ம இந்திரியங்களும் கூடி நிற்பது. விஞ்ஞானமய கோஷம்- புத்தியும், ஞானேந்திரியங்களும் கூடி நிற்பது. ஆனந்த மய கோஷம் – பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பது.

பஞ்சபூத சக்தியாலும், அன்னத்தாலும் நரம்பு, தோல், இரத்தம், மாமிசம், நகம், ரோமம், சுக்கிலம் ஆகிய தாதுக்களால் ஆன தூல தேகமே அன்னமய கோஷம். அந்தக்கரணம், ஞானேந்திரியங்கள், பிராணாதிகள், கர்மேந்திரியங்கள் போன்றவற்றின் சேர்க்கையே சூக்கும சரீரங்களாகிய பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்றும்.

நம் தூல சரீரத்தின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற அறிவுக் கருவிகளான ஞானேந்திரியங்களையும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபதம் என்கிற கர்மேந்திரியங்களையும் இயக்குவது பிராணனே. நாம் தூங்கினாலும், விழித்திருந்தாலும் நம் இதயத்தை இயங்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தை தடையில்லாமல் நடைபெற வைப்பதும், நுரையீரலை இயக்கி மூச்சை முறைப்படி நடத்துவதும் பிராணனே. இப்படி உடலின் சகல உள்வெளி இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராணனே பிராணமய கோஷம். அன்னமய கோஷத்தைக் கலந்து பரவி தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது பிராணமய கோஷம், அன்னமய கோஷத்தின் ஆத்மா பிராணமய கோஷம். இந்த அன்னமய கோஷத்தை விட்டு உணர்வை உள்நிலைப்படுத்துபவன் பரம்பொருளே. தான் இந்த உடம்பு இல்லை என்கிற மெய்யுணர்வு வளர்ச்சிக்கு நுட்பமாக உடம்பினுள்ளும் வேறாகி நிற்கும் பிராணமய கோஷம் காரணமாகிறது.

சித்தர்கள், மகான்கள், யோகிகள் தங்கள் உடலை மாயமாக்கி மறையும் சித்துக்கு அன்னமய கோஷம் பிராணமய கோஷத்தில் அடங்குவதுதான் காரணம்.

சித்துக்களைக் கடந்து, அதற்கு மயங்காதவர்கள் பிராணமய கோஷத்தையும் கடந்து உணர்வை உள்ளே செலுத்த மனோமய கோஷம் ஆட்கொள்கிறது. மனிதனுக்கு எது சரி, எது உணமை என்பதைத் தெளிவுபடுத்துவதே மனோமய கோஷம் தான். மனம் அழிந்து உணர்வு தலைதூக்குமிடம் விஞ்ஞானமய கோஷம். நம் பாதை சரிதானா ? என்ற கேள்வியோடு இலட்சியத்துக்கான முடிவு எடுக்கப்படுவது விஞ்ஞானமய கோஷத்தினால்தான். விஞ்ஞானமய கோஷத்தை எட்டுபவர்களுக்கே உள்ளும் புறமும் ஜோதியைக் காண வாய்ப்பு கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சியின் வெற்றியின் மகிழ்ச்சியை உணரும் இடமே ஆனந்தமய கோஷம். யோகத்தின் எட்டு நிலைகளையும் கடந்தவர்களுக்கே ஆனந்தமய கோஷத்தை அனுபவிக்க முடியும்.

இந்திரியங்களைக் கட்டி மனத்தை வென்று நம் உடலில் உயிராய் கலந்து நிற்கும் இறைவனை உணர்ந்து, கலந்து, இன்புற்று இருக்கும் நிலையே ஆனந்தமய கோஷத்தில் உணரப்படுகிறது. இந்த கோஷங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது ஆன்மா. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மனம் உள்ளே ஒடுங்க ஒடுங்க உணர்வுகள் ஒடுங்குகின்றன. உணர்வுகளின் ஒடுக்கமே சமாதி நிலை. இவ்வளவும் பிராணனின் கைவல்லியத்தால்தான் விளைகிறது.

ஆசிரியர்