வைகாசி விசாக விரத சிறப்பு தெரியுமா ??

வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் “வைசாக’ மாதம் என்றிருந்து பின்னாளில் “வைகாசி’ என்றானது.

இந்த மாத பவுர்ணமி நாளை “வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. “வி’ என்றால் “பட்சி’ (மயில்), “சாகன்’ என்றால் “சஞ்சரிப்பவன்’ மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் “விசாகன்’ என்றும் வழங்குவர்.

திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து வலமாக எல்லாச் சன்னதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களாகும்.

முருகப் பெருமானின் பன்னிரு கரங்கள் :

முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் பணிகள் என்னவென்று தெரியுமா? இரு கைகள் தேவரையும், முனிவரையும் காக்கிறது.

மூன்றாவது கை அங்குசத்தைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் இருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன.

ஏழாவது கை முனிவர்களுக்கு அருள்பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது.

ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கின்றது. பத்தாவது கை மணியை ஒலிக்கின்றது (அருளோசை).

பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

வைகாசி விசாகம் பற்றி புராணத் தகவல்கள் :
இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

புத்தன் (சித்தார்த்தன்) அவதரித்ததும்(பிறப்பு) புத்தாரனதும், (திருவருள்) நிருவாணமடைந்ததும்(மறைவு) இதே திதியிற்தான் என்பர்.

சிம்மாசலம்(அஹோபிலம்) என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள்.

எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

இட்சுவாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாகக் கருதப்பட்டதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ஸ்ரீமத் ராமாயணம் கூறும்.

இந்த நாளில் தான் ஈசன், அர்ஜுனனை வேடன் போல் வந்து வீழ்த்தி, பாசுபதாஸ்திரம் வழங்கியதாக கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்த இடமாகிய திருவேட்களம் ஸ்தலத்தில் இந்த தினத்தில் அதனை மீண்டும் அரங்கேற்றி வெகு விமரிசையாக வழிபடுவர்.

பூஜை முறை :

நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால்,பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வரலாம்.

திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம்.

முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோயிலுக்கு குழுவாகச் செல்லலாம். ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.

முருகன் கோயில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும்.

பலன்கள் :
வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும்.

இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் முதலியவற்றைத் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நல்ல நாளில் விரதம் இருந்து பால்குடம், பால் காவடி, எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும் கல்வியும் பெருகும். துர்தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

ஆசிரியர்