வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
?கணவரை இழந்த என் தங்கைக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள். கூட்டுக்குடித்தனமாக இருந்த வரையில் ஒரு குறையும் இல்லை. என் தங்கையின் கணவரும் அவரது சகோதரரும் வீட்டை இரண்டாக பிரித்து ஆளுக்கொரு திசையாக மாற்றி அமைத்து வீட்டிற்குள் நுழையும் முன் அவர் இறந்துவிட்டார். அதன்பின் தொட்டதெல்லாம் நஷ்டம்தான். கடன்தொல்லையும் அதிகமாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளும் சொல்பேச்சு கேட்பதில்லை. அவள் உடல்நிலையும் சரியில்லை. செய்வினை ஏதாவது இருக்குமா? ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.
– கவிதா, வேலூர்.
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கையின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. கிரஹ நிலையைக் காணும்போது பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றிற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இது அனைத்தும் விதிப்பயனின்படியே நடக்கிறது. பொதுவாக பெரியவர்கள் நன்றாக வாழ்ந்த வீட்டினை இரண்டாகப் பிரிக்கும்போது பாதிப்பு என்பது உருவாகத்தான் செய்யும். அதற்குரிய பரிகாரங்களை வீட்டினை பிரிப்பதற்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். நடந்தவற்றைப் பற்றிப் பேசிப்பயனில்லை. மேலும் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது இவரது விதிப்பயன் என்பதால் இதுபோன்று நடக்கிறது. உங்கள் தங்கையின் ஜாதகத்தைப் பொறுத்த வரை அவருக்கு பிள்ளைகளாலும் அதிக சுகம் என்பது இருக்காது. எதிர்காலத்திலும் பிள்ளைகள் இவரை வைத்துக் காப்பாற்றுவார்கள் என்று கூற இயலாது. கடைசிவரை தன் கையே தனக்குதவி என்றுதான் வாழ வேண்டியிருக்கும். நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு உங்கள் தங்கையிடம் மனதினை திடப்படுத்திக்கொண்டு வாழப் பழக்குங்கள். எவரிடம் உதவியை எதிர்பார்க்காமல் வாழக் கற்றுக்கொடுங்கள். பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பிறந்தவீட்டார் தரப்பிலிருந்து ஓரளவிற்கு அடிப்படை உதவி என்பது கிடைக்கும். அதற்கு மேல் எதிர்பார்க்க இயலாது. மனதில் இருக்கும் பாரம் குறைந்தாலே, உடல் ஆரோக்யம் என்பது சீரடையும். இரண்டாகப் பிரிக்கப்பட்ட அதே வீட்டில் வசிக்காமல் வேறு வீட்டிற்கு குடிபோவது நல்லது. 19.08.2022ற்கு மேல் அவரது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரடையும். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை நாட்களில் விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். ஆரோக்யத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ்வார்.
“பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹ
நூமதே.”
?எனது மகனுக்கு தற்போது நடந்து வரும் சனி தசை என்பது மாரகதசை என்றும் ஆயுள் ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்றும் இங்குள்ள ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் எனது மனைவிக்கு என்னால்ஆறுதல் கூற முடியவில்லை? மேலும் தனியாக பைனான்ஸ் செய்த வகையில் நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது. உரிய ஆலோசனை கூறுமாறு கோருகிறேன்.
– ரங்கசாமி, திண்டுக்கல்.
அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஒருவருடைய ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவருடைய ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் செவ்வாய், குரு, சனி மற்றும் ராகு ஆகிய கிரஹங்களின் சேர்க்கை உள்ளது. தற்போது எட்டாம் வீட்டில் உள்ள சனியின் தசை நடந்து வருகிறது. ஜோதிட விதியின்படி எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் என்பதால் உங்கள் ஜோதிடர் சொன்னதில் தவறில்லை. அதே நேரத்தில் எட்டாம் வீடு என்பது வெறும் ஆயுளை மட்டும் குறிக்காது. விரயம், செலவு, தடைகள், நஷ்டம் என்று பல்வேறு விஷயங்களும் அதில் அடக்கம். மேலும் உங்கள் மகனின் ஜாதகப்படி அவருடைய ஜென்ம லக்னம் மற்றும் ஜென்ம ராசி இரண்டிற்குமே அதிபதி சனி என்பதாலும், அவரே ஆயுள் காரகன் என்பதாலும், அவர் ஆயுள் ஸ்தானத்திலேயே அமர்ந்திருப்பதாலும் ஆயுள்பாவத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இறைவனின் அருளால் அவர் தீர்க்காயுளுடன் வாழ்வார் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். தொழிலைப் பொறுத்த வரை அவர் பைனான்ஸ் செய்வது அத்தனை உசிதமில்லை. சுக்கிரன் 12ம் வீட்டில் இருப்பதால் நிதி நிறுவனம் சார்ந்த தொழில் நஷ்டத்தையே தரும். கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் போன்ற தொழில்கள் நல்ல லாபத்தைத் தரும். உங்கள் ஜோதிடரின் ஆலோசனைபடி வீட்டில் ஆயுஷ்ய ஹோமம் செய்யும்போது அதனுடன் சௌபாக்ய மஹாலக்ஷ்மி ஹோமமும் சேர்த்துச் செய்யச் சொல்லுங்கள். மருமகளுக்கு குழந்தை பிறந்து 40 நாட்கள் கழிந்த பின்னரே வீட்டினில் இந்த ஹோமங்களைச் செய்ய இயலும். இதற்கென தனியாக நல்ல நாள் எதுவும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஆயுஷ்ய ஹோமத்திற்கு சனிக்கிழமை கூட உகந்ததுதான். உங்கள் மகனின் ஜாதகத்தினைப் பொறுத்த வரை தடைகள், அதிர்ஷ்டமின்மை, கடுமையான உழைப்பினால் முன்னேறும் யோகம் ஆகியவையே இந்த சனி தசையின் பலன்களாக அமையுமே தவிர ஆயுளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. சனிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் கவலை தீரும்.
?கேரளாவில் பணிபுரிந்து வரும் எனது அக்காள் மகனுக்கு 35 வயதாகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பல இடங்களில் பெண் தேடியும் இதுவரை கிடைக்கவில்லை. என் அக்காவிற்கு பெரும் கவலையாக உள்ளது. தினகரனுக்கு எழுதினால் வழி கிடைக்கும் என்று பலரும் சொன்னதன் பேரில் எழுதியுள்ளேன். உரிய வழி காட்டுங்கள்.
– வசந்தா, திருப்பூர்.
நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதியின்படி உங்கள் அக்காள் மகனுக்கு 40 வயதாகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாகவே உள்ளது. ஏழாம் பாவக அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் எந்தவிதமான தோஷமும் இல்லை. 27வது வயதிற்குள் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். திருமணத்திற்கு உரிய காலத்தினை விடுத்து நமக்கு சௌகரியமான நேரத்தில் பெண் தேடினால் கிடைப்பது சுலபமில்லை. நல்லவேளையாக 07.08.2020 முதல் அடுத்த ஒன்றரை வருட காலம் சற்று சாதகமாக அமைந்துள்ளது. அந்த நேரத்தையும் விட்டுவிட்டால் பின்பு அவரது வாழ்வினில் திருமணம் என்பது நடக்காது. அவர் வேலை பார்க்கும் இடத்திலேயே பெண் அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. மகன் வீட்டிற்கு வரும் சமயத்தில் வீட்டு புரோஹிதரை வைத்து சுக்கிர சாந்தி எனும் பரிகார பூஜையை நடத்தி வெள்ளியினால் ஆன கன்றுடன் கூடிய பசு விக்கிரகத்தை தானமாகக் கொடுத்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். அன்றைய தினமே மூன்று சுமங்கலிகளுக்கு வஸ்திரத்துடன் கூடிய போஜனம் அளித்து நமஸ்கரிப்பதும் நல்லது. மிக விரைவில் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளிலேயே அம்பிகையின் அருளால் அவரது திருமணம் முடிவாகிவிடும்.
