வயல் பகுதியில் தோன்றியதால் ஈசனுக்கு ‘கேதாரநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. அம்பிகைக்கு ‘கவுரி’ என்ற பெயர் உண்டு. ஈசனை வேண்டி அம்பாள் இருந்த விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை அம்பாள் மேற்கொண்டதற்கான காரணம் ஒன்று உள்ளது. அது பற்றி பார்க்கலாம்.
பிருங்கி முனிவர், சிறந்த சிவ பக்தராக இருந்தார். ஒருமுறை கயிலாயத்தில் சிவனும், பார்வதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கினார். இது அம்பாளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
‘முனிவரே! என்னை புறக்கணித்து விட்டு சிவனை மட்டும் வணங்கியதால், நீர் சக்தியின்றிப் போவீர்’ என்று அன்னை சாபமிட்டார்.
உடனடியாக முனிவர், சக்தி அனைத்தையும் இழந்து நிற்க முடியாமல் நிலத்தில் விழுந்தார். அவருக்கு சிவபெருமான் ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார்.
முனிவருக்கு சாபம் கொடுத்த பின்பும் கூட அம்பிகையின் மனம் அமைதி கொள்ளவில்லை. ‘நானும் இறைவனும் தனித்தனியாக இருந்ததால் அல்லவா, முனிவர் ஈசனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இருவரும் ஒன்றாகி விட்டால் இப்படி நடக்காது’ என்று நினைத்த அம்பாள், திருக் கயிலாயத்தில் இருந்து பூலோகம் வந்தார். அங்கு கவுதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
கவுதமரிடம், கயிலாயத்தில் நடந்த விஷயங்களை தெரிவித்த பார்வதிதேவி, ‘நான் இறைவனுடன் ஒன்றாகிப் போவதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.
அதற்கு கவுதம முனிவர், ‘தாயே! கேதார கவுரி விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறது. அந்த விரதத்தை நீங்கள் 21 நாட்கள் கடைப்பிடித்தால், இறைவன் உங்களுக்கு தனது உடலின் பாதியை தந்து அருள்வார்’ என்று கூறினார்.
பார்வதிதேவியும் அந்த விரதத்தை கடைப்பிடித்து, ஈசனின் இடப்பாகத்தைப் பெற்று ‘அர்த்தநாரீஸ் வரர்’ ஆனார்.
அப்பொழுதும் தனது தவ ஆற்றலை பயன்படுத்தி வண்டாக மாறிய பிருங்கி முனிவர், அர்த்தநாரீஸ்வரரின் மார்பின் ஊடாக துளைத்துச் சென்று சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்டார். ஆனால் இப்போது அம்பாள் கோபம் கொள்ளவில்லை. மாறாக, பிருங்கியை ஆசீர்வதித்து தனது புத்திரனாக்கிக் கொண்டார். மேலும் தான் கடைப்பிடித்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் அருள் வழங்கும்படி, சிவபெருமானை வேண்டினார் பார்வதிதேவி. இறைவனும் அவ்வாறே அருளினார்.
விரதம் இருக்கும் முறை
கேதார கவுரி விரதத்தின் தொடக்க நாளில் ஒரு வெற்றிலை, ஒரு பாக்கு, ஒரு பழம், பலகாரம், அன்னம் முதலியவற்றை வைத்து இறைவனையும், அம்பாளையும் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையை ஒவ்வொன்றாக அதிகரிக்க வேண்டும். கடைசி நாள் அன்று 21 எண்ணிக்கையில் பொருட்களை வைத்து வழிபடுவதோடு, 21 இழையினால் ஆன நோன்புக் கயிற்றைத் தயாரித்து, அந்தக் கயிற்றுக்கு தீபம் காட்டி பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், கேதார கவுரி விரத நாள் அன்று, உபவாசம் இருந்து, தூக்கத்தை விடுத்து, அடுத்த நாள் சுவாமி- அம்பாளை பாராயணம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைப் பிடிப்பதால் வறுமை நீங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
