செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கிழக்கிலங்கை சூறாவளி காலத்தில் துளிர்த்த மனிதநேயம்!

கிழக்கிலங்கை சூறாவளி காலத்தில் துளிர்த்த மனிதநேயம்!

13 minutes read

ஆசிரியபீடத்தின் பிராணவாயுவும் கரியமில வாயுவும்!

முருகபூபதி.

வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக முதலில் நானும், எனக்குப்பிறகு நண்பர் செல்வரத்தினமும் பணியாற்றியதைத் தொடர்ந்து, அந்தப்பணியில் வெற்றிடம் ஏற்பட்டதற்கும் நாமிருவரும்தான் காரணம்.

எனக்கு காலிமுகத்திடலிலும் அதன்பிறகு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திலும் பணிகள் கிடைத்தமையால், கொழும்பில் அக்குவைனஸில் படித்துக்கொண்டிருந்த நண்பர் செல்வரத்தினத்தை வீரகேசரி பிரதம ஆசிரியருக்கு தொலைபேசி ஊடாகவே அறிமுகப்படுத்தி அந்த நிருபர் பணிக்கு இணைத்துவிட்டேன்.

எமது குடும்ப மருத்துவர் சோ. பாலசுப்பிரமணியம் கடற்கரை வீதியில் நடத்திக்கொண்டிருந்த சிகிச்சை நிலையத்தில் இலவசமாக தொலைபேசி இணைப்பு கிடைக்கும். அவர் இந்துவாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது அவருக்கு சென்ற கூட்ட அறிக்கை எழுதுவதற்கு நான் உதவிசெய்வதுண்டு. அதனால் அவருக்கும் நான் ஒரு செல்லப்பிள்ளை.

1977 இல் அரசு மாறியதனால் கொழும்பில் ஊடகவியலார்கள் பலருக்கு நன்மை நிகழ்ந்தது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் முன்னைய அரசின் தடையுடன் சீல்வைக்கப்பட்ட எம். டீ. குணசேனாவின் பத்திரிகை சாம்ராஜ்யத்திற்கு ஜே.ஆர், பிரேமதாசவின் புண்ணியத்தினால் விடுதலை கிடைத்தது.

அங்கு வெளியான தினபதி நாளேடு, மற்றும் சிந்தாமணி வாரவெளியீடு என்பன மீண்டும் வெளிவரத் தொடங்கின. செல்வரத்தினத்திற்கு தினபதியில் அலுவலக – நாடாளுமன்ற நிருபர் வேலை கிடைத்தது.

எனக்கு வீரகேசரியில் ஒப்புநோக்காளர் வேலை கிடைத்ததை தொடர்ந்து, அவ்வப்போது நீர்கொழும்பு பிரதேச செய்திகளை எழுதிக்

கொடுத்தேன். எனினும் நீதிமன்ற செய்திகளை பெறுவதில் தொடர்ச்சியாக நெருக்கடிகள் நீடித்தன.

எங்கள் ஊரில் வர்த்தக பிரமுகராக விளங்கிய ஐயம்பிள்ளை என்பவரின் ஏக புதல்வன் அருணகிரி சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிற்சிபெற்றுவிட்டு நாடுதிரும்பியிருந்தார். அவருக்கு சுவீடன் நாட்டுக்குச்சென்று வரும் வாய்ப்பு கிட்டியிருந்தது.

அவர் அந்தப்பயணம் சென்று மீண்டதும் ஒரு நாள் அழைத்து உரையாடிக்கொண்டிருந்தார். தமது சுவீடன் பயண அனுபவங்களை சுவாரசியமாகச்சொன்னார்.

அதனைக்கேட்டு குறிப்புகள் எழுதி ஒரு நேர்காணல் பதிவுசெய்துவிட்டு, அவரது புகைப்படமும் பெற்றுக்கொண்டேன். அவரது குடும்பத்தினர் ஊர்காவற்துறையைச்சேர்ந்தவர்கள். அச்சமயம் மித்திரன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவிருந்த கே. நித்தியானந்தனின் உறவினர்.

அந்த நேர்காணல் கட்டுரையை அருணகிரியின் படத்துடன் பிரசுரிப்பதற்காக நித்தியானந்தனிடம் கொடுத்தேன். அவர் வாசித்துப்பார்த்துவிட்டு சொல்வதாக கூறினார். நாட்கள் கடந்தன. ஆனால், நானும் தினசரி ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து அந்த நேர்காணல் கட்டுரை அச்சுக்கோர்ப்பதற்கு வரும் வரும் என்று காத்திருந்தேன். இறுதியில் வாரங்கள்தான் கடந்தன.

தினமும் வேலை முடிந்து நான் ஊர் திரும்பும்போது என்னை எதிர்கொண்டு “ எப்போது அந்த நேர்காணல் வரும்..? “என்று அருணகிரி கேட்பார்.

நானும் பொறுமை இழந்து, ஒருநாள் நித்தியானந்தனிடம் கேட்டேன். அந்த நேர்காணலை மித்திரனில் பிரசுரிக்க இயலாதிருப்பதாக சிரித்துக்கொண்டு சொன்னார். நான் பதிலுக்குச்சிரிக்காமல், அந்த மூலப்பிரதியை வாங்கிச்சென்று பக்கத்து அறையிலிருந்த வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபாலிடம் கொடுத்தேன்.

அவர் அதனை அடுத்த வாரமே வாரவெளியீட்டில் வெளியிட்டார். ஆனால் அதனை எழுதிய எனது பெயரை முருகு என்று மாற்றியிருந்தார்.

எனது முழுப்பெயரும் வராதமைக்கு காரணம் கேட்டேன்.

“ ஐ சே…. இங்கே தெரியும்தானே…! “ என்று இழுத்தார்.

அவரது வாயில் சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தது. அந்தப்புகையையும் இழுத்து வெளியே விட்டார். அது கரியமிலவாயு.

கரியமிலவாயுக்கள் பத்திரிகை – இலக்கிய உலகிலும் இருக்கின்றது என்பதை அன்றே புரிந்துகொண்டேன். மிருக மருத்துவம் படித்த அந்த அருணகிரிக்கு ( உறவினராகவிருந்தாலும் ) தான் ஆசிரியராகவிளங்கும் மித்திரனில் புகழ் தேடிக்கொடுக்கவேண்டுமா…? என்பது அதன் ஆசிரியரின் சிந்தனை !

அதனை எழுதிக்கொண்டு வந்து தருபவருக்கு தனது வெளியீட்டில் அடையாளம் கொடுத்துவிட்டால், அங்கே ஆசிரியர்களாகவும் துணை ஆசிரியர்களாகவும் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்…? “ ஓகோ… இவர் இங்கிருந்துகொண்டு வெளி இலாகாவிலிருப்பவரை மறைமுகமாக வளர்க்கிறாரா..? “ என்று எண்ணிவிடுவார்களோ என்ற தயக்கம்தான் “ ஐசே… இங்கே தெரியும்தானே..? “என்ற இழுவல் – நழுவல் பேச்சு !

எப்படியோ எனது ஆக்கம் வெளிவந்துவிட்டது எனக்கு ஆறுதல். அத்துடன் அந்த அருணகிரிக்கும் திருப்தி.

அந்த ஆக்கம் வீரகேசரி வாரவெளியீட்டில் 07-01 – 1979 ஆம் திகதி வெளியானது !

இந்தக்கதை ஒருபுறம் இருக்கத்தக்கதாக மறுபுறத்தில் மற்றும் ஒரு தொடர் கதை அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீரகேசரி ஆசிரியபீடத்தில் பணியாற்றிய சோமசுந்தரம் ராமேஸ்வரன் வீரகேசரியின் தினப்பதிப்பில் இரண்டாம் பக்கத்தை கவனித்துக்கொண்டிருந்தார். அதில்தான் ஆசிரியத்தலையங்கமும் வெளியாகும்.

பெரும்பாலும் செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூதான் எழுதுவார். அபூர்வமாக என்றாவது ஒருநாள் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் எழுதுவார். அவருக்கு முன்பிருந்த ஆசிரியர் கே.வி. எஸ். வாஸ் ஆசிரியத்தலையங்கம் எழுதிவந்தார். அவர்தான் ரஜனி என்ற புனைபெயரில் மித்திரனில் தொடர்ந்து துப்பறியும் மர்மக்கதைகள் எழுதியவர்.

அவர் விடைபெற்ற காலத்திற்கு சமீபமாகத்தான் நான் அங்கே ஒப்புநோக்காளராக இணைந்திருந்தேன்.

சோ. ராமேஸ்வரன் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதியவர் அவரது சிறுகதைகளை மல்லிகையிலும் படித்துவிட்டு நான் அவரிடம்

கருத்துச்சொல்வதனாலும், நானும் சிறுகதைகள் எழுதிவருவதனாலும் எமக்கிடையே இலக்கிய நட்புணர்வு வளர்ந்தது.

தான் கவனிக்கும் இரண்டாம் பக்கத்தில் தான்தான் Feature Editor . இடைக்கிடை ஏதும் கட்டுரைகள் எழுதித்தருமாறு கேட்பார். எமது எழுத்தாளர் சங்கம் தமிழ் – சிங்கள மொழிபெயர்ப்புகள் குறித்து அக்கறை செலுத்திவந்தமையால் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை மூலமே தேசிய ஒற்றுமை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி ராமேஸ்வரனிடம் கொடுத்தேன். அதனை அவர் 23-05 1978 ஆம் திகதி வீரகேசரியின் இரண்டாம் பக்கத்தில் வெளியிட்டு, அதற்கு பதினைந்து ரூபா சன்மானமும் பெற்றுத்தந்தார்.

ஆனால், எனது ஆக்கங்களை வெளியிடுவதிலும் எனது பெயரை முழுமையாக பதிவுசெய்வதிலும் தயக்கம் காண்பித்த அங்கே பணியாற்றிய இரண்டு பொறுப்பாசிரியர்கள் இதனை அறியமாட்டார்கள்.

1978 ஆம் ஆண்டு நவம்பரில் கிழக்கிலங்கையை சூறாவளி கோரமாகத்தாக்கியது. வீரகேசரியில் வானிலை அறிக்கை செய்தியை ஒப்புநோக்கிவிட்டு நடு இரவு வீடு திரும்புகையில் கடற்கரை நகரமான எங்கள் ஊரிலும் அந்த சூறாவளியின் எதிரொலியை அவதானிக்கமுடிந்தது.

கடும் குளிர்காற்றுக்கும் மழைக்கும் மத்தியில் நான் வீடு திரும்பியிருந்தேன். எமது உறவினர்கள் மட்டக்களப்புக்கு சென்றவிடத்தில் சிக்கிக்கொண்டார்கள். அவர்களது குடும்பத்துப்பிள்ளைகள் என்னைத்தேடி வந்தார்கள். மறுநாள் கடமைக்குச்சென்று மூன்று நாட்கள் லீவு கேட்டேன். அனுமதி கிடைத்தது.

கிழக்கிற்கான ரயில் – பஸ் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. எதற்கும் விசாரித்துப்பார்ப்போம் என வேலை முடிந்து வழக்கமாக ஆமர்வீதியில் பஸ் பிடிக்காமல், பிரதான பஸ் நிலையம் அமைந்த புறக்கோட்டைக்கே சென்றேன்.

அம்பாறைக்கு ஒரு பஸ் நடு இரவு இரண்டு மணிக்கு புறப்படுவதாகவும் அது பதுளை மார்க்கமாகச்செல்லும் என்றும் தெரியவந்தது.

தாமதிக்காமல் ஊர் திரும்பி, கையிலிருந்த பணத்தில், அரிசி, மாவு, சீனி, தேயிலை, கோப்பி மற்றும் உலர் உணவுப்பொருட்களை வாங்கி ஒரு பெட்டியில் அடக்கிக்கொண்டு எனது தம்பியையும் துணைக்கு

அழைத்தவாறு மீண்டும் புறக்கோட்டைக்கு நடு இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தேன்.

அங்கு நான் ஒரு சிங்கள மனிதாபிமானியை சந்திக்கநேர்ந்தது. அந்தச்சம்பவத்தை இன்றளவும் என்னால் மறக்கமுடியாதிருக்கிறது.

மட்டக்களப்பைச்சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த இரவில் கிழக்கு நோக்கி பஸ் செல்கிறதா என விசாரிக்கவந்தனர். நானும் தம்பியும் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு என்னிடம் வந்து கேட்டனர்.

நாமும் மட்டக்களப்பு செல்லவே வந்துள்ளோம். அம்பாறை பஸ் இரண்டு மணிக்கு புறப்படுகிறது என்றோம். அவர்களும் எம்மைப்போன்று நிவாரண உதவிப்பொருட்களை சேகரித்து வீட்டில் வைத்துவிட்டு பஸ் நேர அட்டவணை பார்க்க வந்தவர்கள்.

நான் அவர்களை குறிப்பிட்ட பஸ்ஸின் சாரதியிடம் அழைத்துச்சென்று அவர்களது நிலையை விளக்கினேன். அவர்கள் வசிப்பது கொள்ளுப்பிட்டி காலிவீதியில். ஆனால் அந்த பஸ் வெல்லம்பிட்டிய பாதையில் மலையகம் நோக்கிச்சென்று அம்பாறை செல்லவேண்டியது.

அவர்களின் நிலை அறிந்த அந்த பஸ் சாரதி, நடத்துனரை அருகில் அழைத்து பேசினார். அவரும் தலையாட்டினார்.

குறிப்பிட்ட நேரத்தில் அந்த இரண்டு தமிழ் இளைஞர்களையும் உடன் ஏற்றிக்கொண்டு அந்த பஸ் காலிவீதிக்குச்சென்று கொள்ளுப்பிட்டியில் அவர்கள் சேகரித்து வைத்திருந்த உலர் உணவுப்பொதிகளுடன் மீண்டும் திரும்பி வேறு மார்க்கத்தில் வெல்லம்பிட்டிய ஊடாக மலையகம் நோக்கிச்சென்றது.

அந்தச் சாரதி பலாங்கொடை நகரத்தில் பஸ்ஸை சில நிமிடங்கள் தரித்துவிட்டு பின்னாலிருந்த ஆசனத்தில் நீட்டி நிமிர்ந்து உறங்கி எழுந்து மீண்டும் பயணத்தை தொடர்ந்தார்.

நடத்துனரும் எம்மோடு உரையாடி கிழக்கின் நிலைமைகள் பற்றி கேட்டு அறிந்தார்.

இது நிகழ்ந்தது ஜே.ஆர். ஜெயவர்தனா தார்மீக அரசை உருவாக்கிய 1977 காலத்திற்கு அடுத்த ஆண்டு 1978 ஆம் ஆண்டிலாகும்.

1977 இனக்கலவரம் பற்றி இதற்கு முந்தைய அங்கத்தில் பதிவுசெய்துள்ளேன்.

தென்னிலங்கையில் தமிழர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

1978 நவம்பரில் கிழக்கில் சூறாவளி வந்தபோது, பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் தேவை கருதி, அன்று அவ்வாறு நடந்துகொண்ட மனிதாபிமானிகள் இருவரும் பிறப்பால் சிங்களவராக இருந்தபோதிலும் உதவ முன்வந்தார்கள்.

மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை தவறான திசையில் மாற்றுவது அரசியல் வாதிகளின் நாக்குத்தான் என்பதையும் அன்று புரிந்துகொண்டேன்.

மட்டக்களப்பு, கல்முனை, பாண்டிருப்பு பிரதேசங்களுக்கெல்லாம்

சென்று பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு உதவிசெய்தபோது, பல தொண்டு நிறுவனங்களும் இறங்கி புனர்வாழ்வுப்பணிகளில் ஈடுபடுவதை அவதானித்தேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் உட்பட மேலும் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் பஸ்களில் வந்து இறங்கி சேவைசெய்தனர்.

வீரகேசரி அலுவலக நிருபர்கள் ஆர். திவ்வியராஜன், டீ. பி. எஸ். ஜெயராஜ் ஆகியோரும் அங்கே முகாமிட்டு செய்திகளை சேகரித்தனர். அவர்கள் மட்டக்களப்பு வீரகேசரி கிளை அலுவலகத்தில் அப்போதைய மட்டுநகர் நிருபர் கதிர்காமத்தம்பியுடன் செய்தி எழுதி அனுப்பிக்கொண்டிருந்தனர்.

பல நாட்கள் தடைப்பட்டிருந்த ரயில்போக்குவரத்து சீரடைந்ததும் நானும் தம்பியும் மட்டக்களப்பில் சிக்கியிருந்த உறவினர்களுடன் ஒருநாள் காலை ரயிலில் புறப்பட்டோம்.

திவ்வியராஜனும் ஜெயராஜும் கதிர்காமத்தம்பியும் சேகரித்து எழுதி வைத்திருந்த செய்திகளை என்னிடம் தந்துவிட்டனர். அந்த ரயில் கொழும்பு கோட்டைக்கு வந்ததும், நேரே நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடாமல் கிராண்ட்பாஸ் சென்று வீரகேசரியில் சேர்ப்பிப்பேன் என்று அந்த நிருபர்களுக்கு உறுதியளித்தவாறு எனது கடமையை செய்தேன்.

மட்டக்களப்பிலிருந்து திரும்பும் பாதையில் இருமருங்கும் நேர்ந்திருந்த சேதங்களை பதறிய மனதுடன் அவதானித்துக்கொண்டு வந்தமையால் எனது மனதிலும் ஒரு செய்திக்கட்டுரை ஓடியது.

வீடு திரும்பியதும் அதனை எழுதி மறுநாள் கடமைக்குச்சென்று நண்பர் ராமேஸ்வரனிடம் கொடுத்தேன். மட்டக்களப்பு நிலைமைகளை பிரதம ஆசிரியரிடம் தெரிவித்தேன். நான் எழுதிய அந்த செய்திக்கட்டுரைக்கு அழிவுற்ற இயற்கை வளங்களை

ஆக்கத்திற்கு பயன்படுத்துவோம் என்ற தலைப்பு கொடுத்திருந்தேன்.

அவரும் எனது செய்திக்கட்டுரையை படித்துவிட்டு திருப்தி தெரிவித்தார். அந்த உழைப்பிற்கும் பதினைந்து ரூபாதான் சன்மானம் கிடைத்தது.

அதற்கு முன்னர் 1978 இல் ஏப்ரில் இறுதியில் எமது எழுத்தாளர் சங்கமும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகமும் இணைந்து கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் , புதிய அரசின் வருகையினால் திறந்த பொருளாதாரக்கொள்கையின் அடிப்படையில் இந்திய வணிக நோக்குள்ள சஞ்சிகைகள் மீதான முன்னைய கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், அதனால் ஏற்படக்கூடிய சாதக – பாதக பலன் குறித்து ஆராயும் கருத்தரங்கினை ஒழுங்குசெய்திருந்தோம்.

அந்த நிகழ்ச்சியில் வீரகேசரி ஆக்கத்துறை மேலாளரும் வீரகேசரி பிரசுரங்களை கிரமமாக வெளியிட்டவருமான எஸ். பாலச்சந்திரன், மல்லிகை ஜீவா, சோ. சிவபாதசுந்தரம், சோமகாந்தன், பிரேம்ஜி ஞானசுந்தரன் ஆகியோருட்பட வேறும் சிலரும் உரையாற்றினார்கள்.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து எழுதி ராமேஸ்வரனிடம் கொடுத்தேன். அதில் வீரகேசரி பாலச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தமையால், எனது மூலப்பிரதி அவரது அறைக்கு பரிசீலனைக்குச்சென்றதுடன், செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூவும் அதனை வாசித்துப்பார்த்தார்.

அதன்பின்னர் அந்த ஆக்கம் 1978 மே 03 ஆம் திகதி இரண்டாம் பக்கத்தில் வெளியானது. மறுநாள் 04 ஆம் திகதி செய்தி ஆசிரியர் அதனை அடிப்படையாக வைத்து ஆசிரியத்தலையங்கமும் எழுதினார்.

இவ்வாறு வீரகேசரியில் ஒப்புநோக்காளராக பணியாற்றிக்கொண்டே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன்.

அதே 1978 ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரின் நினைவு தினம் வந்தது. அதற்கு முதல்நாள் ராமேஸ்வரன் என்னிடம் வந்து, “ பூபதி… நாளை பாரதியார் தினம் ஒரு சிறிய கட்டுரை உடனே எழுதித்தரமுடியுமா..? “ எனக்கேட்டார். தாமதிக்காமல் நான்கு பக்கங்களில் எழுதிக்கொடுத்தேன். அதனையும் அவர் எனது பெயருடன் வெளியிட்டார்.

“ மச்சான்… நீ… எங்கள் பிரிவில் இருக்கவேண்டியவன் “ என்று புன்னகையுடன் நற்சான்றிதழும் உதட்டினால் தந்தார்.

குறிப்பிட்ட பாரதியார் பற்றிய அச்சிறிய பத்திரிகை நறுக்கினை 1983 ஆம் ஆண்டு நடந்த பாரதி நூற்றாண்டு விழா கண்காட்சியில் எவருக்கும் தெரியாமல் ஒரு நீதியரசர் திருடிய சுவாரசியமும் நிகழ்ந்தது! அதுபற்றி பின்னர் எழுதுவேன்.

இந்தப்பின்னணிகளுடன் மித்திரன் நித்தியானந்தனும் வாரவெளியீடு ராஜகோபாலும் எனது ஆக்கங்களை தொடக்கத்தில் எனது பெயருடன் வெளியிடுவதில் காண்பித்த தயக்கத்தை காலப்போக்கில் கைவிட்டார்கள்.

எதற்கும் காலம் பதில் சொல்லும் என்பதுபோன்று பின்னாளில் இவர்களைப்பற்றியெல்லாம் நான் எழுதநேர்ந்தது !

நித்தியானந்தன் மித்திரனில் புனைபெயரில் மர்மக்கதைகள் எழுதியதுடன், பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல் தூவ சிறுவர் இலக்கிய நாவலை தமிழில் மொழிபெயர்த்து வாரவெளியீட்டில் எழுதினார்.

ராஜகோபால் டாக்டர் லலிதா என்ற புனைபெயரில் மித்திரன் வாரமலரில் மருத்துவம், உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் எழுதினார்.

ராமேஸ்வரன் பின்னர் விவசாயத்திணைக்களத்தில் அங்கு வெளியான இதழின் ஆசிரியராக பணியாற்றியபோது சில சிங்கள ஆக்கங்களை என்னிடம் தந்து மொழிபெயர்த்து வெளியிட்டதுடன், அதற்கும் சன்மானம் பெற்றுத்தந்தார்.

எனது ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்த வீரகேசரி மூர்த்தி – மேகமூர்த்தி என்ற பெயரில் மல்லிகையிலும் எழுதியவர்.

ராமேஸ்வரனும் மூர்த்தியும் டீ.பி. எஸ் ஜெயராஸும் விரகேசரி விளம்பர – விநியோகப்பிரிவு சிவப்பிரகாசம் உட்பட சில வீரகேசரி குடும்பத்தினரும் தற்போது கனடாவில் வசிக்கின்றனர்.

இவர்களில் சிலரை 2007 இல் கனடாசென்றபோது சந்தித்தேன். எனது எழுத்துலக பயணத்தில் இணைந்திருந்தவர்களையும் இந்தத் தொடரில் நினைவுகூருகின்றேன்.

letchumananm@gmail.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More