புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மட்டன் கொத்துரொட்டி சாப்பிட விருப்பமான மூன்று பேரை சொல்லு என்றால் | யூட் பிரகாஷ்

மட்டன் கொத்துரொட்டி சாப்பிட விருப்பமான மூன்று பேரை சொல்லு என்றால் | யூட் பிரகாஷ்

3 minutes read

இன்றிரவு கடவுள் தோன்றி, நாளை இரவு உன்னோடு அந்த மாதிரி ருசியான மட்டன் கொத்துரொட்டி சாப்பிட, உனக்கு விருப்பமான மூன்று பேரை சொல்லு, கொண்டு வந்து நிற்பாட்டுறன் என்று வரம் தந்தால், பதில் டக்கென்று வரும்.

முதலாவது, அநீதிக்கெதிராக போராட துணிவும், தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தையும் உணர்வித்த தேசிய தலைவர் பிரபாகரன். இரண்டாவது கனவானாக (Gentleman) வாழ்வது எப்படி என்று களத்திலும் வாழ்விலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ராகுல் Dravid மற்றது எங்கட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

2003ல் டிசம்பரில் இந்திய அணி மெல்பேர்ண் வந்திருந்த போது, Dravidஐ பார்க்க நிறைய முறை முயன்று தோற்றுப் போனேன். இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலிற்கு அழைப்பெடுத்து “can I speak to Rahul Dravid” என்று விலாசமாக கேட்டது, பிறகு Dravidற்கு fax மேல் fax அனுப்பினது, என்று stalking செய்யாத குறையாக அலுப்பு கொடுத்தும் முயற்சி பிழைத்து போனது.

விக்ரோறிய மாநில அணியோடு இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டம் ஆடுகிறது என்று அறிந்து, முழு நாள் லீவு போட்டு விட்டு, MCGயில் காய்ந்தும், திரும்பியே பார்க்காத முன்னாள் காதலியைப் போல, Dravidன் தரிசனம் கிடைக்கவே இல்லை.

ஜனவரி 11, 1973ல் பிறந்த இரண்டாம் நம்பர் காரனான ராகுல் ஷரத் Dravid, எனது அபிமான கிரிக்கட் வீரர் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ட்ராவிட் என்னுடைய role model & inspiration.

Dravid ஆடுகளத்தில் ஆடும் விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும். ஆடுகளத்திற்கு வெளியே Dravid வாழும் விதம், எளிமையின் எடுத்துக்காட்டு.

“Dravid ஒரு பசையல் மன்னன், நொட்டிக் கொண்டு நிற்பான்டா, அவனைப் போய் நீ…”என்று சொன்ன நண்பர்களும் “Dravid is soooo boring ..” சொன்ன தோழர்களும் சூழ இருந்து வசை பாடி அழவைத்தும், Dravidஐ தொடர்ந்து ஆராதித்தேன்.

Dravidல் வெளிப்பட்ட கடின உழைப்பும், அணிக்காக விளையாடும் சுயநலமற்ற அர்ப்பணிப்பும், எளிமையான கனவான் தனமும் Dravidல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணமாயின.

1996ம் ஆண்டு மார்ச் மாதம் உலக கிரிக்கெட் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் படுகேவலமாக இந்திய அணி இலங்கை அணியிடம் தோற்க, அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உலக கோப்பையில் சொதப்பிய அழுகுணி காம்பிளியை தூக்கிவிட்டு Dravidஐ அணியில் இணைத்தார்கள்.

அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான சிங்கர் கிண்ண ஒரு நாள் ஆட்டத்தில், மெல்லிய மீசையோடு, No 4ல் தனது முதலாவது ஆட்டத்தில் களமிறங்கிய Dravid, மூன்று ஓட்டங்களை எடுத்த நிலையில் முரளியின் பந்துவீச்சில் களுவிடம் கட்ச் கொடுத்து Dravid ஆட்டமிழந்தார்.

Leg side சிவனே என்று போன பந்தை, வினையை விலைக்கு வாங்குவது போல், பந்திற்கும் நோகாமல் பட்டிற்கும் நோகாமல் மென்வலு கொண்டு Dravid தட்டி விட, களுவிதாரண ஒரு குருட்டு கட்ச் பிடித்தார்.

2000களின் ஆரம்பத்தில் தோளில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மெல்பேர்ண் வந்திருந்த முரளியோடு சில மணித்துளிகள் கதைக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்பொழுது முரளியிடம் Dravid-டென்டுல்கர் பற்றி கேட்டபோது “டென்டுல்கரை கழற்றலாம், Dravidஐ அசைக்க ஏலாது” என்று சொன்னார். (ஓமடா முரளி தமிழில் தான் சொன்னார்.)

1996 ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிராக, கிரிக்கட்டின் புனித பூமியான Lordsல் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி தான் கங்குலிக்கும் Dravidற்கும் முதலாவது டெஸ்ட்.

முதலாவது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்திடம் தோற்க, பசையல் மன்னன் மஞ்ச்ரேக்கரையும் ஸ்பின்னர் ஜோஷியையும் அணியிலிருந்து தட்டிவிட்டு இரண்டாவது டெஸ்டில் கங்குலியையும் Dravidஐயும் களமிறக்கினார்கள்.

மஞ்ச்ரேக்கர் ஆடிய No 3ல் கங்குலி இறங்க, டென்டுல்கர், அஸாருதீன், அஜய் ஜடேஜாவிற்கு பிறகு No 7ல் Dravid களமிறங்கினார்.

Dravid இறங்கும் போது அணியின் நிலை 202/5, மறுமுனையில் கம்பீரமாக கங்குலி கலக்கிக் கொண்டிருந்தார். தனது முதலாவது டெஸ்ட் ஆட்டத்திலேயே 131 ஓட்டங்களை எடுத்து கங்குலி 296/6ல் ஆட்டமிழந்தார்.

வியர்த்து விறுவிறுத்து, நொட்டி, தட்டி, ஓடி ஓடி, சிங்கிள் சிங்கிளா எடுத்து, குருவி சேர்ப்பது போல் ரன்கள் குவித்து, கும்ப்ளேயோடும் சிறிநாத்தோடும் மாம்பேரியோடும் மல்லுக்கட்டி, 9வது விக்கெட்டாக Dravid ஆட்டமிழக்கும் போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 419/9.

Dravid 95 ஓட்டங்கள் அடிக்க எடுத்துக் கொண்ட பந்துகள் 267. உலக கிரிக்கட் அரங்கிற்கு தனது வரவை அறிவித்த இன்னிங்ஸாக, Dravidன் முதலாவது லோர்ட்ஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் அமைந்தது.

Dravidன் அப்பா ஒரு Jam தொழிற்சாலையில் முகாமையாளராக வேலை செய்ததால், ட்ராவிடிற்கு Jammy என்பது பட்டப் பெயராகியது. அதைவிட Wall, Mr. Dependable என்று பல பெயர்களால் Dravid விமர்சிக்கப்படுவார்.

சச்சின் டென்டுல்கர் என்ற கடவுளிற்கே ட்ராவிட் எனும் சுவர் தான் அரண் (even the god needs wall’s protection) என்று Dravid ரசிகர்கள் கிலாகிப்பார்கள்.

நட்சத்திரங்கள் நிறைந்த அன்றைய இந்திய கிரிக்கட் அணி, வெளிநாடுகளில் ஈற்றிய பல வெற்றிகளின் கதாநாயகன், Dravid தான்.

Dravid bat பண்ணும் போது விளையாடும் cover driveல் வெளிப்படும் லாவகத்தையும் square cut அடிக்கும் போது வெளிப்படும் கம்பீரத்தையும் காண கண்கோடி வேண்டும். டென்டுல்கரோடும் லக்‌ஷமனோடும் கங்குலியோடும் Dravid இணைந்து ஆடும் போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

2002ம் ஆண்டில், இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட மும்மூர்த்திகளான Dravid(148), டென்டுல்கர்(193), கங்குலி(128) மூவரும் சதிராடி சதங்கள் அடித்து, 16 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடவைத்த Headlingly டெஸ்டை இந்திய கிரிக்கட் ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள். அந்த வெற்றிக்கு அடித்தளம் இட்டது Dravidன் 148 என்று சொன்னால் மிகையாகாது.

அதே போல் 2006ல் மேற்கிந்தியத்தீவுகளிற்கெதிராக சப்ரீனா பார்க்கில் தனது தடுத்தாடும் (defensive) திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்து ட்ராவிட் (81,68) இந்திய அணிக்கு ஈட்டித்தந்த சரித்திர முக்கியம் வாய்ந்த வெற்றியையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

2001ல் தென்னாபிரிக்க அணிக்கெதிராக போர்ட் எலிஸபெத்தில் இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றிய Dravidன் 87 ஓட்டங்களும் ட்ராவிட்டின் தடுத்தாடும் ஆற்றலிற்கு கிடைத்த மகுடம்.

Dravid ஆடிய அதகளங்கள் மொக்கை அணிகளிற்கெதிரானவையல்ல. வோர்னும் மக்ராவும் கலக்கிய ஒஸ்ரேலிய அணிக்கெதிராக கொல்கத்தாவில் அடித்த 180ஐயும், அடலெய்டில் கிலப்ஸியோடும் மக்கில்லோடும் மல்லுக்கட்டி நொறுக்கிய 233ஐயும் கிரிக்கெட் வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ராவல்பிண்டியில் அக்தரையும் சமியையும் துணிவுடன் எதிர்கொண்டு குவித்த 270ஐ பாக்கிஸ்தான்காரன் மறந்தும் மறக்க மாட்டான்.

Dravidஐ பற்றி எழுதி மாளாது. ஜெயமோகனின் வெண்முரசை விஞ்சுற அளவுக்கு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம்.

யூட் பிரகாஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More