“400 பெண்களை விலைமாதர்களாக மாற்றினாரா ராஜராஜ சோழன்..?’’ பா.இரஞ்சித் குற்றச்சாட்டுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் பதில்!
“தேவரடியார்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்து. அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கோயிலில் தேவரடியார்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
ராஜராஜனின் மனைவியர்களுள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார் ஒரு தேவரடியார். இவர், அரியலூர் அருகே பழுவூர் பகுதியை ஆட்சிசெய்த பழுவேட்டரையர் எனப்படும் சிற்றரசர் குலத்தைச் சேர்ந்த இளவரசி.”
“ராஜராஜனின் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்கிறார்கள் பலர். ஆனால், எங்களுடைய இருண்டகாலம் அது. மிகப்பெரிய சூழ்ச்சிசெய்து எங்களுடைய நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது ராஜராஜனின் காலத்தில்தான்.
சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தன. தேவதாசி அமைப்பு முறையைக் கொண்டுவந்தது ராஜராஜன்தான்; இங்கிருந்து கோலார் தங்க வயலுக்கு 26 பேரை விற்றிருக்கிறார்கள்!”
தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வைத்த குற்றச்சாட்டுகள் இவை. உண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் என்பது, இப்படித்தான் இருந்ததா?
தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் வரலாற்றாய்வாளருமான ராஜவேலிடம் கேட்டோம்.
“ரஞ்சித், புத்தரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டவர். புத்தருக்கு விகாரம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று கடல் கடந்த தூரக் கிழக்கு நாடான ஸ்ரீவிஜய (தற்போதைய சுமத்ரா பகுதி) நாட்டு அரசன் விஜயதுங்கவர்மன் ராஜராஜனிடம் விண்ணப்பித்தான். அவனது வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் `சூடாமணிபன்ம விகாரம்’ எனும் பௌத்த வழிபாட்டுத் தலத்துக்கு `ஆனைமங்கலம்’ எனும் ஊரையே தானமாக அளித்தான் ராஜராஜன்.
நாகப்பட்டினம் நாகநாதர் சிவன் கோயிலுக்கு அருகிலேயே இந்தப் பௌத்தப் பள்ளி `ராஜராஜன் பெரும்பள்ளி’ எனும் பெயரில் கட்டப்பட்டது. ராஜராஜன் மிகச்சிறந்த ஆட்சியாளன். தமிழகத்தின் தலைசிறந்த மன்னர்களுள் ஒருவன் அவன். அவனது காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
ராஜராஜன் காலத்தில்தான் எங்களது நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டது என்கிறார் ரஞ்சித். `எங்களிடம்தான் நிலங்கள் அனைத்தும் இருந்தது’ என்கிறார். அதற்கு என்ன ஆதாரம்? முதலில் அவர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மன்னராட்சி காலத்தில் `நிலத்தின் உரிமையாளன் அரசன் ஒருவன்’ மட்டுமே என்பதை. அரசனைத் தவிர வேறு யாரும் நிலத்துக்கு உரிமைகோர முடியாது. நிலத்தை யாருக்கும் அளிக்கும் உரிமை அரசனுக்கு இருந்தது.
அரசன், ஒரு கிராமத்தை நிவந்தமாக அளிக்கிறான் என்றால் அதற்கு, `அந்தக் கிராம மக்களிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அந்த நிலத்தின் உரிமை மாற்றப்பட்டது’ என்று பொருள் கொள்ளக்கூடாது. அந்த நிலத்தில் யார் உழுதுகொண்டிருந்தார்களோ அவர்களேதான் தொடர்ந்து வேலை செய்வார்கள்.
அவர்களுக்குரிய விளைச்சல் பங்கில் எந்தவித மாற்றமும் இருக்காது. அந்த நிலத்திலிருந்து அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டிய விளைச்சல் பங்கு மட்டுமே நிவந்தம் அளிக்கப்பட்ட கோயிலுக்கு வழங்கப்படும்.
இந்த நிவந்தம், கோயில்கள், பௌத்த விகார்கள் ஆகியவற்றுக்கும் அந்தணர்கள், தேவரடியார்கள், போரில் உயிரிழந்த வீரர்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கும் அவர்கள் செய்த சேவையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனைமங்கலம் எனும் ஊரை நிவந்தமாக நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்துக்கு ராஜராஜன் வழங்கினான்’ என்றால் அந்தக் கிராமத்திலிருந்து அரசுக்குக் கிடைத்த வருவாயைத்தான் விகாரத்துக்கு வழங்கினான் என்று பொருள்.
பிற்காலத்தில், மன்னராட்சி முறை வீழ்ச்சியடைந்த பிறகுதான் உழுதவர்கள் நிலத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். அதுவரை நிலங்களின் உரிமை அனைத்தும் அரசன் ஒருவனுக்கு மட்டுமே இருந்தது.
நம் சமூகத்தில் எல்லாச் சமூக மக்களும் ஒன்று சேர்ந்துதான் வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் அவரவர் செய்யும் வேலைகளைக்கொண்டே பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு சமூகத்துக்குப் பின்னாலும் ஒவ்வொரு தொழில் இருந்தது. கோயில்களில் இன்ன சாதியார் நுழையக் கூடாது என்று எங்கேயும் ஒரு கல்வெட்டுகூட பதிவாகவில்லை.
அடுத்ததாக, `தேவதாசி அமைப்பு முறையைக் கொண்டுவந்து 400 பெண்களின் வாழ்க்கையை வீணடித்தார் ராஜராஜன்’ என்று வரலாறு பற்றி எதுவுமே தெரியாமல் பேசியிருக்கிறார் ரஞ்சித். ராஜராஜனுக்கு முன்பே, 8-ம் நூற்றாண்டில் தேவரடியார்கள் `தளிக்கூத்தாடிகள்’ எனும் ராஜவேல் பெயரில் இருந்ததற்கான கல்வெட்டு, மாமல்லபுரத்தில் கிடைத்திருக்கிறது.
`தளி’ என்றால் `கோயில்’ என்று பொருள். கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் மருத்துவமனை, பள்ளி, வங்கி, பண்பாட்டு மையம் என்று பலவிதங்களில் செயல்பட்டிருக்கிறது. கோயிலில் கலை நிகழ்த்தியவர்கள் தளிக்கூத்தாடிகள். ராஜராஜன் கல்வெட்டில் `தேவரடியார்கள்’ என்று இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
`தேவரடியார்’ என்றால் இறைவனுக்கு அடியவர்களாகப் பணிபுரிபவர்கள். கோயிலை மெழுகி சுத்தம் செய்வது, அபிஷேகத்துக்குத் தேவையான தண்ணீர் சேகரிப்பது, நடனமாடுவது, இசைப்பது, சமைப்பது, பக்தர்களுக்கு அன்னமிடுவது போன்ற கோயில் தொடர்பான பணிகளைச் செய்கிறவர்களாக இருந்தவர்கள் `தேவரடியார்கள்’. இவர்கள் ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள்.
அவர்களில் 400 பேரைத் தேர்ந்தெடுத்து தஞ்சைப் பெரிய கோயிலுக்கு இடமாற்றம் செய்தான் ராஜராஜன். `தேவரடியார்கள்’ எனப்பட்டவர்கள் அக்காலத்தில் மிகப்பெரிய அளவில் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இவர்கள் அரசு ஊழியர்களைப் போன்றவர்கள். இவர்களுக்கென்று தனியாக `இறையிலி நிலங்கள்’, தங்கும் வீடுகள் வழங்கப்பட்டன.
தேவரடியார்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்து. அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கோயிலில் தேவரடியார்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
ராஜராஜனின் மனைவியர்களுள் ஒருவரான பஞ்சவன் மாதேவியார் ஒரு தேவரடியார். இவர், அரியலூர் அருகே பழுவூர் பகுதியை ஆட்சிசெய்த பழுவேட்டரையர் எனப்படும் சிற்றரசர் குலத்தைச் சேர்ந்த இளவரசி.
சமண, பௌத்த சமயங்களில் பெண்கள் துறவியாக மாறியதைப்போல இறைவனுக்குச் சேவை செய்ய தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தேவரடியார்கள்.
ராஜராஜனின் காலத்திலும் சரி, அவனுக்குப் பின்னால்வந்த தமிழக மன்னர்களின் காலத்திலும் சரி தேவரடியார்களின் நிலை மிகவும் உயர்ந்ததாகவே இருந்தது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்கள் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்த பிறகுதான் ‘தேவரடியார்கள்’ என்று போற்றப்பட்டவர்கள் ‘தேவதாசிகள்’ என்று இழிநிலைக்கு ஆளானார்கள்” என்கிறார் அவர்.
ரஞ்சித்தின் கருத்து பற்றி பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசினோம், “இயக்குநர் ரஞ்சித் பேசியிருப்பது ஏற்கெனவே பலரும் பேசிய ஒன்றுதான். 1950-களுக்குப் பின்னர் தமிழகத்தில் இருக்கும் முற்போக்காளர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் பேசிய கருத்துகளின் நீட்சியாகத்தான் ரஞ்சித் பேசியதை நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பிற்கால சோழர்கள் பற்றியும் ராஜராஜனின் ஆட்சிக் காலம் பற்றியும் தமிழ் அறிஞர்களும், ஆங்கிலத்திலிருந்த வந்த ஆய்வாளர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் செய்து வந்த ஆய்வுகளின் தொடர்ச்சிதான் ரஞ்சித்தின் கருத்து.
சோழர் காலம் பற்றி அதிலும் குறிப்பாக, ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம் பற்றி தமிழில் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. இன்றிருக்கும் கோயில்களின் வடிவங்களை அவர்தான் கட்டினாரா என்பதே அதில் கேள்விக்குறிதான். இன்றைய வடிவம் என்பது அவரது காலத்துக்குப் பின்னால்கூட உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அவர் ஒரு அரசர் என்பதில் இங்கு யாருக்கும் மாறுபட்ட கருத்த இருக்க முடியாது. ஆனால், நாம் எதை எக்கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதில் ஆரம்பிக்கறது இங்கிருக்கும் பிரச்னைகள்.
இந்தியா முழுக்கவே இங்கிருக்கும் ஜாதிக் குழுக்கள் அவர்களின் ஜாதி அபிமானத்தை, நம்பிக்கையை இறுக்கமாக்கிக் கொள்ளும் தருணமாக இதைப் பார்க்கிறார்கள்.
அவர்களுக்கான அடையாளச் சிக்கல் உருவாகும்போதுதான் இது மாதிரியான பண்டைய பெருமைகளை, பழம்பெறும் மன்னர்களை, சடங்குகளைச் சூடிக்கொள்ள விரும்புகிறார்கள்.சூடிக்கொள்ள எதுவும் பெரிதாக இல்லாதபோது, அரைகுறையாக இருக்கும் சின்னச் சின்ன தகவல்களைப் பெரிதுபடுத்தி, பூதாகாரப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள்.
புனைவுகளைக் கட்டமைத்துவைத்துவிட்டு அதில் செயற்கையான புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கிறார்கள்.மஹாராஸ்டிராவில் சிவாஜியை எதிர்த்து யாரேனும் பேசினால், என்ன நடக்குமோ அதன் ஒரு மாதிரியைத்தான் இன்று தமிழகத்தில் சிலர் ரஞ்சித்தின் மேல் காட்டிவருகிறார்கள்.
ரஞ்சித் பேசிய கருத்துகள் தவறு என்றால், அதற்கு எதிராக நாம் நமது கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான தளத்துக்கு இந்த விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்.
ரஞ்சித் எப்படிப் பேசலாம் என்று அவரை வாயடைப்பதோ, அவரின் மீது வழக்குப் போடுவதோ, அவரை அச்சுறுத்தும் தொனியில் நடத்துவதோ, தலித்துகள் எப்படி இதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்கிற நிலைமைக்கு இதைத் தள்ளக்கூடியது. அந்தப் பேச்சுரிமையைக்கூட அவர்களிமிருந்து பிடுங்கும் ஒரு செயல். ரஞ்சித் பேசியவற்றில் இருக்கும் தவ்றுகளைச் சுட்டிக்காட்ட இங்கு எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.
மக்களாட்சியில் இருக்கும் நாம் ஒரு மன்னராட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதே ஆச்சர்யமளிக்கிறது. அனைவருக்கும் இங்கு தன் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிப்பதே மக்களாட்சிதான். மன்னராட்சிதான் சிறப்பென்றால், நாம் அனைவரும் ஏன் மக்களாட்சிக்கு வரப்போகிறோம்” என்றார்.
நன்றி – சி.வெற்றிவேல்