Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது | தீபச்செல்வன்

செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது | தீபச்செல்வன்

4 minutes read
VanniOnline News: செஞ்சோலை படுகொலை தினம் ...

ஓகஸ்ட் 14 செஞ்சோலை மாணவர் இனப்படுகொலை  தினம் அனுஷ்டிக்கப்பட்டமையை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகின்றது.

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நிகழ்ந்திராது. செஞ்சோலைப்படுகொலை என்பது பாரிய இனப்படுகொலைக்கான சிங்கள அரசின் உத்திகையாகும்.

அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன.

போர் நிறுத்த உப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கிண்ணஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும்.

 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்சே அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிநை்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்.

அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.

கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா?

செஞ்சோலைத்தாக்குதலில் காயமடைந்த மாணவி ஒருவர் இப்போது, ஆசிரியராக கடமையாற்றுகிறார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் புனிதர்களாக அவதாரம் எடுக்க சிங்கள இராணுவத்தினர் முயற்சித்தனர். பாடசாலை வாசல்களில் அவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். அவர்களை தாண்டி, அவர்களின் விசாரணைகளைத் தாண்டி வருவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாக தயங்கினர். அஞ்சினார். பத்து ஆண்டுகள் கடந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த தாக்குதலின் வடு இன்னும் நீங்கவில்லை.

இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் உலகத்தில் அதாவது இணைய ஊடகத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வலுவாக இடம்பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இதில் பெரும் அக்கறை கொண்டு ஈடுபடுகின்றனர். என்றாவது ஒருநாள் சிங்கள அரசு இதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அன்றுதான் இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More