Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி | நிலாந்தன்

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி | நிலாந்தன்

6 minutes read

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக்  ஆக மாற வேண்டும்! சண் மாஸ்டர் அறைகூவல்

இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் உலக சமூகத்திடமும் குறிப்பாக ஐநா விடமும் இரண்டு விடையங்களை கேட்கிறார்கள்.

முதலாவது நீதி. இரண்டாவது இழப்பீடு.

நீதி வேண்டும் என்றால் அதற்கு விசாரணை செய்ய வேண்டும். காணாமல் ஆக்கியவர்களை விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது இலங்கைத் தீவில் மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் படைத்தரப்பை எப்பொழுதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்படும் படைப் பிரதானிகளை அவர்கள் எது விதத்திலாவது பாதுகாப்பார்கள்.

அமெரிக்காவால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஒரு படைத் தளபதியை ஒரு வைரசுக்கு எதிரான  நடவடிக்கைக்கு தலைமை தாங்க விட்டு அதன்மூலம் படைத் தரப்பை அவர்கள் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு ஒரு நோய்த்  தொற்று காலத்தில் சிவில் கட்டமைப்புகளை படைமையப்படுத்தி அதன்மூலம் நாட்டை மேலும் ராணுவ மயப்படுத்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் காலம் எனப்படுவது இலங்கைத் தீவில் படைத் தரப்பை மகிமைப்படுத்தி இருக்கிறது. வைரசுக்கு பின்னரான அரசியல் சூழலில் படைத்தரப்பு ஒரு வைரஸை வென்ற படையாக புதிய பலத்தோடு எழுச்சி பெற்றிருக்கிறது. எனவே காணாமல் ஆக்கியவர்கள்  என்று குற்றம் சாட்டப்படும் படையாட்களை   விசாரிப்பதற்கு ராஜபக்சக்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அவ்வாறான விசாரணைகளுக்குத்   தேவையான ஓர் அரசியல் சூழல் இப்போது இல்லை.

இப்பொழுது மட்டும் அல்ல முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்திலும் அப்படி ஒரு சூழல் நிலவவில்லை. அப்படி ஒரு சூழலை உருவாக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கவில்லை. ஆனால் அவரும் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக் கொண்டு அனுசரணை வழங்கிய ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று  தீர்மானத்தின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஐநாவின் 30/1 தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்கிறது. நிலைமாறுகால நீதியின் கீழ் உண்மையை வெளிக் கொண்டுவரும் விதத்தில் விசாரணைகள் நடாத்தப்பட்டு அந்த உண்மைகளின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு நிலைமாறுகால நீதியை நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஐ.நாவுக்குக் காட்டுவதற்காக சில கட்டமைப்புக்களை உருவாக்கியது.

அதில் முதலாவது-காணாமல் போனவர்கள் தொடர்பான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது. அது தொடர்பான சட்ட மூலத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இரண்டாவதாக சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

மூன்றாவதாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம்  ஒன்றை உருவாக்கியது. இந்த அலுவலகத்தின் கிளைகள் தமிழ் பகுதிகளிலும் நிறுவப்பட்டன.

நாலாவதாக சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான ஓர் அலுவலகத்தையும் உருவாக்கியது.

ஐந்தாவதாக இழப்பீட்டுக்கான ஒரு அலுவலகத்தையும் உருவாக்கியது.

ராஜபக்சக்கள் தொடக்கத்திலிருந்தே காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை எதிர்த்தார்கள். அவர்களுக்கு நெருக்கமான அமரபுர நிகாய அந்த எதிர்ப்பை கூர்மையாக வெளிப்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க அமரபுர நிகாயாவுக்கு வாக்குறுதிகளை வழங்கி சமாதானப்படுத்தி காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை உருவாக்கினார்.

அந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் ஒரு விடயம் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. காணாமல் ஆக்கிய ஒருவர் தனது குற்றத்தை அந்த அலுவலகத்தின் முன் ஏற்றுக்கொள்வாராக இருந்தால் அவருடைய அடையாளத்தை மறைக்கும் அதிகாரத்தை அந்த அலுவலகம் கொண்டிருக்கிறது. அவர் யார் என்ற விவரத்தை எந்த நீதிப் பொறிமுறைக்  கூடாகவும் எந்த நீதிமன்றத்திலும் போய் கேட்டுப் பெற முடியாது. அதை மறைப்பதற்கு முழு அதிகாரம் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்துக்கு உண்டு.

இதுதொடர்பாக சில செயற்பாட்டாளர்கள் அந்த அலுவலகப்  பிரதானிகளோடு உரையாடிய பொழுது ஒரு சட்ட செயற்பாட்டாளர் “அப்படி என்றால் உங்களுடைய அலுவலகம் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றதா?”என்று கேட்டிருகிறார். அதற்கு அந்த அலுவலகத்தின் இரண்டாம் நிலைப் பிரதானியாகிய ஒருவர் பின்வருமாறு சொன்னாராம் “உங்களுக்கு இதுவும் வேண்டாமா ?” அதாவது ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதனையாவது அறிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லையா?” என்று. இதுதான் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் நிலை.

அதேசமயம் தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற ஒரு ஏற்பாட்டுக்கு குற்றவாளிகளைப் புலனாய்வு செய்து புலன் விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். 

இலங்கைத் தீவில் இந்த அலுவலகம் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை பதிவு செய்யும் ஓர் அலுவலகமாகவே பெருமளவுக்கு நடைமுறையில் சுருக்கப்பட்டது. இந்த அலுவலகம் இப்பொழுதும் இயங்குகிறது. அதற்கு வேண்டிய நிதி இப்பொழுதும் வழங்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் ராஜபக்சக்கள் அந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐநா தீர்மானத்தில்  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளின்படி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை குறிக்கும் மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அவர் இயற்கையாக இறக்கவில்லை அல்லது கொல்லப்படவும் இல்லை அவர் காணாமல் ஆக்கப்பட்டார் என்று மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது இன்று வரையிலும் யாருக்கும் வழங்கப்படவில்லை. மாறாக இல்லாமல் போனதற்கான ஒரு சான்றிதழை வழங்க அவர்கள் முயற்சித்தார்கள். certificate  of absent. ஆனால் அந்தச் சான்றிதழைக் காட்டி காணாமல் ஆக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெற முடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் பேச்சாளரான கெகெலிய ரம்புக்வெல சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார்…காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தவருக்கு நட்ட ஈடு இல்லை என்று. அவர்களில் அநேகர் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

ராஜபக்சக்கள் மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாகவும் துணிச்சலாகவும் நடக்கவில்லை. அந்த மக்களின் வாக்குகளை பெற்ற நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தொடர்ச்சியாகப் பாதுகாத்து வந்த கூட்டமைப்பு அது தொடர்பில் எந்தக் கரிசனையையும் காட்டவில்லை. அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் எதிர்ப்பைக் காட்டவில்லை. இதன் விளைவாகவே காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் வவுனியாவில் வைத்து சம்பந்தரை நோக்கிச் செருப்பைக் காட்டினார்.

இவ்வாறு மக்கள் செருப்பை தூக்கிக் காட்டும் ஒரு நிலைமையின் வளர்ச்சிப் போக்கை இம்முறை தேர்தல் முடிவுகளில் காணமுடிந்தது. கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்திருக்கிறது. மாற்று அணி நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அதே சமயம் தென்னிலங்கையில் ராஜபக்சக்கள் அசுர பலத்தோடு ஆட்சியை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே நிலைமாறுகால நீதியை அவர்கள் ஐநா பரிந்துரைக்கும் பரிந்துரைக்கும் வடிவத்தில் அல்லது ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட வடிவத்தில் நிறைவேற்றப் போவதில்லை என்று நடைமுறைகள் நிரூபித்திருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்ட அலுவலகங்களை ராஜபக்சக்கள்  தொடர்ந்தும் இயங்க அனுமதித்திருக்கிறார்கள். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம்; இழப்பீட்டிற்கான அலுவலகம்;சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும்  பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றன தொடர்ந்தும் இயங்குகின்றன. அவை முன்பு ஒப்பீட்டளவில் சுயாதீனமான இயங்கின. இப்பொழுது நீதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களைத் தொடர்ந்து இயங்க விடுவதன் மூலம் ராஜபக்சக்கள் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறார்களா? நிலைமாறுகால நீதிச்  செயற்பாடுகள் ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு விதத்தில் இலங்கைதீவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்ற செய்தியா அது?

தேர்தலுக்கு சில கிழமைகளுக்கு முன்பு விஜயதாஸ ராஜபக்ச ஒரு விடயத்தை சூசகமாகச் சொல்லியிருந்தார். பொறுப்புக் கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து தாங்கள் சிந்திக்க போவதாக. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல் தான். எனவே பொறுப்புக் கூறலுக்கான அதாவது நிலைமாறுகால நீதிக்கான “ராஜபக்சக்களின் மொடல்” ஒன்றை அவர்கள் நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?.

நிச்சயமாக “ராஜபக்சக்களின் நிலைமாறுகால நீதியில்” காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் காணாமல் ஆக்கியவர்களை எப்படியும் பாதுகாப்பார்கள். அதேசமயம் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புக்களை தொடர்ந்தும் இயங்க விடுவதன் மூலம் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஒரு பொய்த் தோற்றத்தை காட்டுவார்கள். அதாவது அவர்கள் தங்களுக்கான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கக் கூடும். அது நிச்சயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது. எனவே அடுத்த ஆண்டும் ஓகஸ்ட் 30ஆம் திகதி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராட வேண்டியிருக்குமா?

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More