சசிகலாவுக்கான நீதி! | புருசோத்மன் தங்கமயில்

சசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று மாலையே சசிகலாவை முன்னிறுத்தி, அவரின் வெற்றி திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்படுகின்றது என்று வதந்தி வேகமாகப் பரப்பப்பட்டது. பேஸ்புக் வழியாக, கண நேரத்துக்குள் தொடர்ச்சியாக ஆதாரமற்ற தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் போல பலரும் பகிரத் தொடங்கினார்கள். அந்த வதந்திகள், பகிர்ந்தவர்களுக்கு சட்டச் சிக்கலை எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடும் என்று கருதிய போது, அவற்றை நீக்கிவிட்டு, சசிகலாவைச் சுற்றி ஓர் அனுதாப அலையை உணர்வு ரீதியாக கட்டமைத்துக் கொண்டார்கள். அது, யாழ். மத்திய கல்லூரி வளாகத்தை விட்டு சசிகலா வெளியேறும் வரை, சுமார் ஆறு ஏழு மணித்தியாலங்கள் அப்படியே பேணப்பட்டது.

பிரித்தானிய ஊடக மாபியாவின் ஆணைக்கு இயங்கும் தரப்புக்கள், கூட்டமைப்பின் தோல்விமுக வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூளைக்கும் நாக்குக்கும் சம்பந்தமில்லாமல் பேசும் தரப்புக்கள் என்று சசிகலாவை, ஒட்டுமொத்தமாக ஒரு பக்கத்துக்குள் தள்ளி, அவர்களின் தோல்வியை ஒரு சூழ்ச்சி போலவே பேணிக் கொண்டார்கள். அதன்மூலம், எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான தங்களது காழ்ப்புக்களையும், கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்தினார்கள். அதை, எந்தவித அடிப்படையுமின்றி, உணர்ச்சிகரமாக காவியவர்கள் இன்றைக்கு மூக்குடைபட்டு நிற்கிறார்கள்.

சசிகலா சூழ்ச்சியாக வீழ்த்தப்பட்டுவிட்டார் என்று கூறி சுமந்திரனுக்கு எதிரான அலையைப் பேணிய தரப்புக்களுக்கு, ரவிராஜின் மருமகள் முறையானவர் “..இப்படித்தான் ரவிராஜ் அவர்களையும் கொன்றார்கள்..” என்று எழுப்பிய அழுகுரல் ‘வாயில் அவலாக’ மாட்டியது. மருமகளை மகளாக்கிவிட்டு உணர்ச்சிக் கட்டத்தை ஊதிப் பெருப்பித்துக் கொண்டார்கள். அதனை வைத்து, எதையோ சாதித்த வெறியில் இருந்தார்கள்.

சசிகலா, தனக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்று உணர்ந்தால், அவர் மறு வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைக்கு செல்வதே உத்தமமானது. அதுதான் சரியாகவும் இருக்கும். இல்லையென்றால், சிவாஜிலிங்கமும், அங்கஜனும் நேற்று அவர் முன்னிலையிலேயே பேசிக் கொண்டது போல, வழக்கொன்றினூடாக விடயங்களை அணுக வேண்டும். ஆனால், அந்த வழக்கு சுமந்திரன் என்கிற நபருக்கு எதிராக அல்ல, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராகவே தாக்கல் செய்ய முடியும். எந்தவொரு தருணத்திலும் சுமந்திரன் அந்த வழக்கின் பிரதான எதிரியாக இருக்க முடியாது. அதனை, உண்மையிலேயே சட்டம் அறிந்தவர்களோடு சசிகலா உரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும்.

வெற்றியை சில நூறு வாக்குகளினால் தவறவிடும் (தேர்தல்) தோல்வியை யாராலும் உடனடியாக ஜீரணிக்க முடியாது. அதன் எதிர்வினைகளை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அந்த எதிர்வினையை நாய் உண்ணிகளாக இரத்தம் உறிஞ்சும் கூட்டம், கையாள அனுமதிப்பதுதான் இன்னும் இன்னும் மோசமான கட்டங்களை ஏற்படுத்திவிடும்.

சசிகலாவின் மகள், பேஸ்புக்கில் எழுதிய விடயங்களும், நேற்று வீடியோவில் பேசிய விடயங்களுக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் உண்டு. தாயாருடைய தோல்வியினை சகித்துக் கொள்ளாமல் அவர் உதிர்த்திருக்கிற வார்த்தைகளாக அவற்றைக் கடந்துவிடலாம். ஆனால், அவருக்கு சொல்லிக் கொள்ள வேண்டியது, அரசியலில் நிலைத்திருத்தல் என்பது, உணர்ச்சிவசமான கட்டங்களில், மற்றவர்களின் சதித்திட்டங்களில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருப்பதுதான். போலி அனுதாபிகளைக் கண்டு கொண்டு கடக்க வேண்டும் இல்லையென்றால், தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வேண்டிய வரும்.

இந்த களேபரங்களுக்கு இடையில், சசிகலாவுக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கி, மாமனிதரைக் கௌரவிக்க வேண்டும் என்கிற குரலும் சிலரினால் எழுப்பப்பட்டது. இந்தக் குரல்கள் என்ன அடிப்படையில் எழுகின்றன என்று யோசித்தால், அதுவும் அரசியலை உணர்ச்சிகரமாக மாத்திரம் அணுகும் முறையாகவே படுகின்றது. தேர்தல் காலம் முழுவதும் எதிர் திசைகளில் நின்று முட்டி மோதியவர்களை நோக்கி, இவ்வாறான கோரிக்கைகள் எவ்வாறு எழுகின்றன. அதுவும், பெண், மாமனிதரின் மனைவி என்கிற அடிப்படைகளுக்காக எதிர்க்கட்சி தன்னுடைய தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்க வேண்டும் என்பதெல்லாம் சிரிப்பைத் தவிர வேறு எதனையும் வர வழைக்கவில்லை. ஒரு உணர்ச்சிகரமான கட்டத்திற்காக, காங்கிரஸின் தேசியப்பட்டியல் ஒருவருக்கு தரை வார்க்கப்படலாமா? உண்மையில் அப்படியான கட்டம் உருவாகினால், காங்கிரஸின் பெண் வேட்பாளர்களும் தொண்டர்களும் எவ்வளவு ஏமாற்றத்தை சந்திக்க வேண்டி வந்திருக்கும். கூட்டமைப்பின் தேசியப்பட்டிலை சசிகலாவுக்கு வழங்கக் கோருவதில் ஒரு நியாயம் இருக்கின்றது. அது எப்படி காங்கிரஸைக் கோருகிறீர்கள். அதற்கு புலமை என்று பெயர் வேறு.

மாமனிதர் ரவிராஜ் அண்ணரை முன்னிறுத்திக் கொண்டு அரசியல் அசிங்கங்களை யார் நிகழ்த்தினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதில்லை. அது, அவரது ஆதரவாளர்களாக, எதிராளிகளாக ஏன் அவரின் குடும்பத்தினராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாமனிதர் என்கிற அடையாளத்துக்காகவும், அனுதாப வாக்குக்களுக்காகவும், தங்களது சுயநல ஆட்டத்துக்காகவும் சசிகலா அவர்களை இம்முறை தேர்தல் அரசியலுக்குள் அழைத்து வந்த அரசியல் பொறுக்கிகள் அதற்கான பொறுப்பினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள்தான், இன்று நிகழும் எல்லாவற்றுக்கும் பொறுப்பானவர்கள். அவர்கள் நாய் உண்ணிகளை விடவும் கேவலமானவர்கள்.

ஆசிரியர்