Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 45 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 45 | பத்மநாபன் மகாலிங்கம்

21 minutes read

இரண்டு வகையான ‘ போஸ்ட் காட் ‘ விவசாயிகள் (post card farmers) யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து வந்து வன்னியில் வயல்களை பெற்றார்கள். ஒரு பகுதியினர் மலையகத்திலிருந்து வந்த, காணியில்லாத குடும்பங்களை தமது காணியில் குடியமர்த்தி, அவர்களைக் கொண்டு வேலைகளை செய்வித்து, தாமே வயல் விதைத்தார்கள். இவர்கள், விதைப்பு எப்ப? உழவுக்கு மிஷின்காரனை ஒழுங்கு படுத்தி வை. வரம்புகளைக் கட்டி விட்டாயா? பசளை எப்ப போட போறாய்? வெட்டு எப்ப? என்று கேட்டு ‘போஸ்ட் காட்’ டில் கடிதம் எழுத, குடியிருப்பவர்கள் ‘போஸ்ட் காட்’ டில் பதிலெழுதுவார்கள்.

விவசாயிகள் நெல் விதைக்கும் போதும், மருந்தடிக்கும் போதும், பசளை போடும் போதும், வெட்டின் போதும் வந்து நிற்பார்கள். தண்ணீர் பாய்ச்சும் பொறுப்பை குடியிருப்பவனிடம் விட்டு விடுவார்கள். கூலிக் காசை அவ்வப்போது சரியான முறையில் கொடுத்து விடுவார்கள். சூடு அடிக்கும் போது குடியிருப்பவனுக்கு ஒரு மூட்டை நெல்லை கொடுப்பார்கள். பல நல்லவர்கள் கூடுதலான நெல்லை கொடுப்பார்கள்.

இரண்டாவது வகையானவர்கள் வயலை குத்தகைக்கு கொடுத்துவிட்டு நிலமையை அறிய ‘போஸ்ட் காட்’ போடுவார்கள். பயிராக இருக்கும் போதும், விளைந்த போதும், வெட்டின் போதும் தமது காரில் வந்து சிறிது தூரம் வயலுக்குள் நடந்து மதிப்பீடு செய்வார்கள். குத்தகைக்காரன் “வயலில் நட்டம்” என்று சொல்லி ஏமாற்றி விடக்கூடாது என்று வருபவர்களும் உண்டு. இவன் தனது வயலில் இருந்து கூடுதலான லாபம் அடைகிறானோ? என்று அறிய வருபவர்களும் உண்டு. வயல் செய்பவன் வரம்புகளைச் செருக்கி, கட்டி, வயலை பலமுறை உழுது பண்படுத்தி, விதை நெல்லை தேடி வாங்கி, விதைத்து, மனைவிமாரின் நகைகளை அடைவு வைச்சு பசளை போட்டு, மருந்தடித்து, புல்லுப் பிடிங்கி, கிளிகளை கலைத்து, பாதுகாத்து,வெட்டி, அடித்து, நெல்லை வியாபாரிகளிடம் அவசரத்துக்காக குறைந்த விலையில் விற்று படும் கஷ்டங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் குத்தகைக்காரனை சுரண்டுவதையே தமது கெட்டித்தனம் என்றும் கருதினார்கள்.

***போஸ்ட் காட்=> தபால் அட்டை. ஒரு சிறிய வெள்ளை கடதாசி அட்டை. ஒரு பக்கம் முழுவதும் எழுதுவதற்கானது. மறுபக்கத்தில் நடுவில் ஒரு கோடு போட்டு பிரித்திருக்கும். ஒரு பாதியில் கடிதம் எழுதுபவர்கள் விலாசம் எழுத. மற்ற பாதியில் பெற வேண்டியவர்கள் விலாசம் எழுத, அந்த பாதியில் அரச முத்திரை அச்சிடப்பட்டிருக்கும். ஒரு ‘போஸ்ட் காட்டின்’ விலை ஐந்து சதம் மட்டுமே.

***** யாழ்ப்பாண குடாவில் நாட்டிலிருந்து வந்து தாங்களே வயல் செய்தவர்கள் ‘போஸ்ட் காட் ‘ விவசாயிகள் என்ற வகைக்குள் வரமாட்டார்கள். அவர்களில் பலர் வன்னி மக்களோடு சேர்ந்து வயல் செய்து வன்னி மக்களாகவும் மாறி வன்னியை வளம் பெறச் செய்தார்கள்.

மகாலிங்கம்
பொன்னம்மா

மகாலிங்கத்திற்கு தட்டுவன்கொட்டியிலிருந்து முரசுமோட்டை கிராம சேவையாளர் பிரிவுக்கு இடமாற்றம் வந்தது. அவர் முரசு மோட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக பாவித்தார். பொன்னம்மாவும் கணவனை தனியே விட மனமின்றி அந்த வீட்டுக்குப் போய், அவருக்கு வேலையில் உதவிகள் செய்து கொண்டு வசிக்க தொடங்கினா.

தியாகர்வயலில் தூரத்து உறவினனான கந்தசாமி என்ற இளைஞனும், மலையக இளைஞனான மற்றொரு கந்தசாமியும் வயலையும் மாடுகள், கோழிகளையும் பார்த்தார்கள். கிழமைக்கு ஒருமுறை மகாலிங்கமும் பொன்னம்மாவும் போய், பார்த்து, செய்ய வேண்டிய வேலையை கூறிவிட்டு வருவார்கள்.

முரசுமோட்டையில் மகாலிங்கம் எதிர்பாராத ஒரு பொறுப்பு வந்தது. அவரது நிர்வாக எல்லைக்குள் யாழ்ப்பாணத்தவருக்கு சொந்தமான ஒரு வயல் காணியை முரசுமோட்டையை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு செய்து வந்தார். காணி உரிமையாளர் ஒவ்வொரு வருடமும் குத்தகை காசை கூட்டிக் கேட்பார். அவருக்கு வயலை விதைப்பதில் உள்ள துன்பங்கள், கஷ்டங்கள் தெரியாது. காரில் வந்து எட்டி பார்ப்பார், வயல் பச்சைப்பசேல் என்று தெரியும்.

‘எனது வயலிலிருந்து இவன் நல்ல லாபம் எடுக்கிறான்’ என்று மனதுக்குள் பொருமுவார். குத்தகைக்காரன் காணியில் நின்ற தென்னைகளிலிருந்தும் மாமரங்களிலிருந்தும் காய்களை பிடுங்கி அவரது கார் டிக்கியில் வைத்து விடுவார். அந்த வருடம் காலபோக வயல் வெட்டிய போது அவர் திடீரென்று குத்தகை காசை கூடுதலாக தரும்படி கேட்டார். குத்தகைக்காரன் “ஐயா, இந்த முறை செலவுகள் அதிகம். அடுத்த வருசம் பார்ப்பம்.” என்று சொல்லி, முதல் வருடம் கொடுத்த தொகையையே அந்த முறையும் கொடுத்தார்.                                                                                                                 

காணி உரிமையாளர், அவன் தான் கேட்டபடி தரவில்லை என்ற வீம்பில், “நீ இனி என்ரை வயலை விதைக்க வேண்டாம்.” என்று மறித்தார். வயலை காலபோகம் விதைத்தவரே சிறுபோகத்திலும் விதைப்பது என்பது வழக்கம். காணியை விதைத்தவர் அந்த வழக்கப்படி ஈரமாக இருந்த வயலை உழுது, வரம்பு கட்டி சிறு போகத்திற்கு தயாராக வைத்திருந்தார்.

காணி உரிமையாளரிடம் “ஐயா, காணி உங்கடை தான். காலபோகம் செய்யிறவை சிறுபோகமும் செய்கிறதெண்ட வழக்கப்படி உழுது பண்படுத்தி போட்டன். இந்தமுறை மட்டும் செய்ய விடுங்கள், சிறு போக குத்தகை காசையும் தந்து, காணியை உங்களிட்டை ஒப்படைக்கிறன்.” என்று பணிவாக கூறியவர், பின் வந்த நாட்களில் வயலையும் விதைத்து விட்டார்.

காணி உரிமையாளருக்கு ‘என்ரை சொல்லை மீறி வயலை விதைத்து விட்டானே’ என்ற ஈகோவில் (Ego) தனது காணியை அடாத்தாக பிடித்து விதைப்பதாக பொலிசில் முறைப்பாடு செய்தார். பொலிசார் வந்து விசாரித்து, வயலை குத்தகைக்காரன் பல வருடங்களாக விதைப்பதையும், குத்தகைய ஒழுங்காக கொடுப்பதையும் அறிந்த போது குத்தகைகாரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனர்.

நெல் விளைந்து அரிவு வெட்டுக்குத் தயாரான போது, காணி உரிமையாளர் நெல்லை அறுவடை செய்வதை நீதிமன்றம் மூலம் தடை செய்ய உள்ளார், என்று அறிந்த குத்தகைக்காரன் மகாலிங்கத்திடம் வந்து “விதானையார் ஐயா, என்ரை மனிசியின்ரை நகைகளை அடைவு வச்சு தான் வயல் விதைச்சனான், நீங்கள் தான் காப்பாற்ற வேணும்.” என்று முறையிட்டார்.

‘உரிமையாளர் இலங்கையிலேயே மிகவும் பிரபலமான, தான் பொறுப்பெடுத்த எந்த வழக்கிலும் தோற்காத வழக்கறிஞரை நியமித்துள்ளார்’ என்பதையும் ‘அந்த வழக்கறிஞர் அடுத்த திங்கள் கிழமை கொழும்பிலிருந்து வருகிறார்’ என்பதையும் குத்தகைக்காரன் தெரிவித்தார். குத்தகைக்காரனுக்கு உதவி செய்ய மகாலிங்கம் முடிவெடுத்தார்.

மகாலிங்கம், நீதவானின் நேர்மை காரணமாக அவரின் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்தார். நீதவானுக்கு மகாலிங்கத்தை நன்கு தெரியும். அவருக்கு மகாலிங்கத்தின் மேல் நல்லபிப்பிராயமும் அன்பும் இருந்தன. மகாலிங்கம் தனிப்பட்ட முறையில் அவரிடம் ஆலோசனை பெறச் சென்றார்.

நீதவான் “வழக்கு இருப்பதால் குத்தகைக்காரன் நெல்லை வெட்ட முடியாது. தடை உத்தரவு வந்த பிறகு குத்தகைக்காரனின் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தால், நீதிமன்றம் ஒரு பொது ஆளை நியமித்து நெல்லை வெட்டி, சூட்டை அடித்து, கூட்டுறவுச் சங்கத்தில் நெல்லைக் கொடுத்து, காசோலையை பெற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடும். வழக்கு முடிந்தபின் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி காசு உரியவர்களுக்கு வழங்கப்படும்.” என்றார்.

மகாலிங்கம் “ஐயா, வயலை இப்ப வெட்டாட்டில் சுற்றியுள்ள வயல்களை எல்லாம் வெட்டி விட்டு, மாடுகளை திறந்து விடுவார்கள். அவை இவனது வயலை மேய்ந்து அழித்து விடும். அற விளைந்த நெல்லும் கொட்டி விடும். ஒருத்தருக்கும் பிரயோசனம் இல்லாமல் போய் விடுமே” என்றார்.

யோசித்த நீதவான் “சட்டத்தையும் மீறாமல், ஒருத்தருக்கும் நட்டம் வராமல் ஒரு காரியம் செய்யலாம். இன்னும் தடை உத்தரவு போடப்படவில்லை. விதானை என்ற முறையில் உமக்கு ஒரு பொறுப்பு இருக்குது.

கிராம அபிவிருத்திச்சங்கத்தினருடன் கதைத்து, உமது மேற்பார்வையில், அவர்களைக் கொண்டு நெல்லை வெட்டி, அடித்து, நெல்லை கூட்டுறவுச் சங்கத்தில் கொடுத்து, காசோலையை கொண்டு வந்து நீதிமன்றத்தில் கட்ட செய்ய வேண்டும். சாட்சிக்கு ஊர் பெரியவர்கள் இரண்டு மூன்று பேரை வைத்துக் கொள்ளும். பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தது.” என்றார்.

மகாலிங்கம் துரிதமாக செயற்பட்டார். குத்தகைக்காரன் நல்லவர், நேர்மையானவர் என்றபடியால் கிராம அபிவிருத்திச்சங்கத்தினரும் சம்மதித்து, நெல்லை வெட்டி அடிக்க முன்வந்தனர்.

வெட்டும் போது ஊர் பெரியவர்கள் ஐந்து பேர் வந்து பார்த்துக் கொண்டு நின்றனர். மகாலிங்கம் கிராம அபிவிருத்திச்சங்கத்தினருடன் போய் கூட்டுறவுச்சங்கத்தில் நெல்லை அளந்து கொடுக்கச் செய்தார். சங்கத் தலைவரான ரங்கூன் மணியத்தார் “விதானையார், நீங்கள் திங்கள் கிழமை காலமை சங்கத்துக்கு வாருங்கோ. நான் காசோலையை ஆயத்தமாய் வைச்சிருக்கிறன். நீங்கள் கொண்டு போய் நீதிமன்றத்தில் கட்டி விடலாம்” என்றார்.

திங்கள் கிழமை மகாலிங்கம் கிராம அபிவிருத்திச்சங்கத்தினருடன் போய் நீதிமன்றத்தில் காசைக் கட்டி விட்டு வெளியே வந்த பொழுது, காணி உரிமையாளரும் வழக்கறிஞரும் நீதிமன்றத்திற்குள் சென்றனர்.

மகாலிங்கம் நீதிமன்றத்திலிருந்து டீ. ஆர். ஓ. கந்தோருக்கு போய் அங்கு தனது கடமை சம்பந்தமான அலுவல்களைப் பார்த்தார். அவருக்கு அந்த பிரபல வழக்கறிஞர் தன்னைத்தேடி தனது அலுவலகத்திற்கு வருவார் என்பது தெரியும். உரிமையாளரும் வழக்கறிஞரும் தடை உத்தரவுடன் காணியைப் போய் பார்த்த பொழுது, காணி வெட்டி, அடிக்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணி நடந்தவற்றை விசாரித்து அறிந்து கொண்டு மகாலிங்கத்தைத் தேடி வந்தார். நாபன் அன்று தான் பாடசாலையால் வந்து தாயாருடன் கதைத்துக் கொண்டு இருந்தான்.

நாபனுக்கு பொன்னம்மா நடந்த கதை முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் போது வழக்கறிஞர் உரிமையாளருடன் வந்தார். “விதானையார் எங்கை? நீ யார்?” என்று கேட்டார். நாபன் “அவர், டீ ஆர் ஓ. கந்தோருக்கு போட்டார். நான் அவற்றை மகன்.” என்றான்.

சட்டத்தரணி “கொப்பர் செய்தது சரியோ? பிரச்சினை உள்ள வயலை வெட்டியிருக்கிறார். நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி விடு.” என்று சொல்லி விட்டு கோபமாக வெளியேறினார்.  நாபனுக்கு ‘தகப்பன் பிழையாக எதையும் செய்ய மாட்டார் என்றும், தடை உத்தரவு போட முன்னரே தகப்பன் வெட்டி, அடித்து நெல்லை சங்கத்தில் கொடுத்து விட்டார் என்றும்’ தெரியும்.

வழக்கு நடந்தது. குத்தகைக்காரனின் வழக்கறிஞர் “எனது கட்சிக்காரன் இனி அவரது காணிக்குள் அடியெடுத்து வைக்கமாட்டார்.  குத்தகையை கழித்துக் கொண்டு தனது காசை தரும்படி கேட்கிறார்.” என்று கூறினார். எல்லோரையும் விசாரித்த நீதவான் பிரபல வழக்கறிஞரைப் பார்த்து “ஐயா, உங்கள் கட்சிக்காரனின் காணிக்குள் இனி அவர் வர மாட்டார். உங்கள் கட்சிக்காரனின் குத்தகையை நீதிமன்றம் வழங்கும். உங்களுக்கு திருப்தி தானே?” என்று கேட்க சட்டத்தரணியும் சம்மதித்தார்.

நீதவான் “வயல் வெட்டி, அடித்து வந்த காசில் குத்தகைக்காசையும், கிராம அபிவிருத்திச் சங்கத்தினருக்கு செலவு காசையும் நீதிமன்றம் வழங்கும், மிகுதியை நீதிமன்றம் குத்தகைக்காரனுக்கு வழங்கும்.” என தீர்ப்பளித்தார்.

பிரபல வழக்கறிஞர் வழக்கு தீர்ப்பின் பின் மகாலிங்கத்தைத் தேடி வந்தார். ‘என்னவோ, ஏதோ?’ என்று பதறியபடி மகாலிங்கம் வெளியே வந்த போது, வழக்கறிஞர் “மகாலிங்கம், உண்மையிலேயே நீர் கெட்டிக்காரன் தான். கிழமை கணக்கில் நடக்க வேண்டிய வழக்கை, ஒருத்தருக்கும் நட்டமில்லாமல் மூன்று நாளில் நடக்க வைத்து விட்டீர்.” என்று பாராட்டி விட்டுச் சென்றார்.

கோட்டிலிருந்து காசோலையை எடுத்து மாற்றிய குத்தகைக்காரன், கிராம அபிவிருத்தி சங்கத்தினருடன் மகாலிங்கத்திடம் வந்து “ஐயா, நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இதைப் பிடியுங்கோ” என்று சொல்லி காசு கொடுக்க முற்பட்டார்.

மகாலிங்கம் “அண்ணை, நான் என்ரை கடமையை தான் செய்தனான். நீங்கள் நல்ல மனுசன் எண்டு எனக்குத் தெரியும், என்னை கெட்டவனாய் மாற்றாதேங்கோ.  கொண்டு போய் மனிசியின்ரை நகைகளை அடைவிலிருந்து மீளுங்கோ.” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மகாலிங்கத்தின் நடவடிக்கைகளால் குத்தகைக்காரன் மட்டுமில்லை, காணிக்காரனும் லாபமடைந்தான். வழக்கு கிழமை கணக்கில் இழுபட்டிருந்தால், அவன் அந்த பிரபல வழக்கறிஞருக்கு குத்தகை காசை விட பலமடங்கு காசு சம்பளமாகக் கொடுத்திருப்பான்.

ஒரு கலன் பெற்றோலுக்கு மைனர்1000 கார் ஓடிய தூரத்தின் அரைவாசியை விட குறைந்த தூரத்திற்கு தான் பெரிய காரான ஓப்பல் றெக்கோர்ட் ஓடியது. மகாலிங்கத்திற்கு பெற்றோல் செலவு அதிகரித்தது. சிங்கள மாமா போய்விட்டதால் வாடகைக்கும் ஓடுவதில்லை, வருமானம் நின்று விட்டது. மாதாமாதம் ‘பினான்ஸ்’ காசு கட்ட கஷ்டமாக இருந்தது.

மகாலிங்கமும் பொன்னம்மாவும் நேரே நின்று செய்யாமையினால் வயல் விளைச்சலும் குறைந்தது. இரண்டு வருடங்களின் பின் மகாலிங்கம் ஓப்பல் றெக்கோர்ட் காரை வித்து விட்டு, வந்த காசுக்கு ஏற்ற மாதிரி ஒரு எ- 40 (A-40) காரை வாங்கிக் கொண்டார்.

கணபதியார் ஒரு நாள் நீவில் காணிக்கு வண்டிலில் போய் வயலுக்கு பசளை போட்டு விட்டு திரும்பி வந்தார். அவர் எப்போதும் நிதானமாகவே வண்டிலை ஓட்டுவார். எருதுகளும் வாகனங்களைக் கண்டு மிரளாமல் ஓடக்கூடியவை. கணபதியார் றோட்டில் தனது பக்கத்திலேயே ஓட்டி வந்தார். கிளிநொச்சியிலிருந்து பூனகரி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிய றைவர் அன்று மது பாவித்திருந்தான். பஸ் அங்கும் இங்கும் ஓட பயணிகள் பயந்து கொண்டே பயணம் செய்தார்கள். பெல் அடித்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்பாட்டாமல் தூரத்தில் நிறுத்தினான். அப்படி ஓட்டி வந்தவன் கணபதியாரின் வண்டிலில் மோதி விட்டான்.

கணபதியார் தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். கால்களில் முறிவு ஏற்பட்டது. எருதுகள் அந்த இடத்திலேயே இறந்து விட்டன. வண்டில் நொருங்கி விட்டது. மீனாட்சி “காளியாச்சி” என்று கத்தியபடி ஓடி அச்சிடென்ற் நடந்த இடத்துக்கு போய்விட்டா.

மகாலிங்கம் தகப்பனை காரில் ஏற்றி கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக, அவர்கள் முதலுதவி செய்து விட்டு அம்புலனஸ்ஸில் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸார் றைவரை கைது செய்து, பஸ்ஸையும் பொலிஸ் ஸ்ரேஷன் கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியிலிருந்த கணபதியாரை, நாதன், நாபன், சுந்தர் (சுந்தரலிங்கம்) மூவரும் முறை போட்டு, இரவில் கூட நின்று பார்த்து கொண்டனர். கமலாவும் தவமும் முறை போட்டு சாப்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு கிழமை மீனாட்சியும், மகாலிங்கமும், பொன்னம்மாவும் நின்று பார்த்தனர். பின்னர் மீனாட்சி பஸ்ஸில் அடிக்கடி வந்து கணவனை பார்த்தா. பிணையில் வெளி வந்த பஸ் றைவர், ஆஸ்பத்திரிக்கு தேடி வந்தான்.

சக றைவர்களுடன் வந்த றைவர், மகாலிங்கத்திடமும் கணபதியாரிடமும் “ஐயா, நான் பிள்ளை குட்டிக்காரன், தெரியாமல் பிழை விட்டு விட்டன். நீங்கள் கேக்கிற காசை தாறன், என்னை காப்பாற்றுங்கோ. வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால் என்ரை வேலை போயிடும்.” என்று அழுதான். மகாலிங்கம், தகப்பன் என்ன சொல்லப்போறாரோ என்று அவரையே பார்த்தார்.

கணபதியார் அந்த வேதனையிலும் “தம்பி, அழாதை. நடந்தது நடந்து போச்சு, நீ பயப்படாதை. கஷ்டப்பட்டு உழைச்ச உன்ரை காசு எங்களுக்கு வேண்டாம். நாங்கள் உன்னிலை வழக்கு போட மாட்டம், போட்டு வா.” என்று சொல்லி அனுப்பி வைச்சார்.

கணபதியார்   தான் தடவி தடவி வளர்த்த எருதுகள், தனது கண்களின் முன்னே இறந்ததை நினைத்தபடி கண்களை மூட, கண்ணீர் வழிந்தோடியது. மகாலிங்கம் தகப்பன் சொன்ன பதிலையும், அவரது கண்ணீரைப் பார்த்து என்ன நினைக்கிறார் என்பது விளங்கியதாலும், தகப்பனை நினைத்துப் பெருமைப்பட்டார்.

நான்கு கிழமைகளுக்கு பின்பு கணபதியாருக்கு முறிந்த கால் எலும்புகள் பொருந்தி விட்டன. வேதனை குறைந்து விட்டது, ஆனால் நடக்க முடியவில்லை. “பெரியவருக்கு வயது போட்டுது, இனி நடக்க பண்ணுவது கஷ்டம். இரத்தமும் நல்லாய் வெளியிலை போட்டுது, வீட்டிலை கொண்டு போய் வைத்து நல்ல சாப்பாடு கொடுங்கோ” என்று சொல்லி பெரியாஸ்பத்திரி டாக்டர்கள் துண்டு வெட்டி விட்டார்கள்.

‘கணபதியாரை நன்கு கவனித்து சுகமாக்கவேணும் எண்டால் தியாகர்வயலுக்கு கொண்டு போவது தான் சரி.’ என்று நினைத்த பொன்னம்மா, ஆஸ்பத்திரியாலை கூட்டிக் கொண்டு வந்த அவரை நேரே தியாகர் வயலுக்கு கொண்டு சென்றா. தன்னை தியாகர்வயலில் கொண்டு போய் இறக்குவதைக் கண்ட கணபதியார் மருமகளைப் பார்த்து “என்ன பிள்ளை, என்னையும் மனுசியையும் பிரிக்கப் பாக்கிறியளோ?” என்று பதட்டமாகக் கேட்டார். பொன்னம்மா “மாமா, உங்களை ஆர் பிரிச்சது, உங்களுக்கு மாமியை பார்க்க வேணுமெண்டால் எழும்பி நடந்து போங்கோவன்.” என்றா.

பொன்னம்மா, கணபதியாருக்கு நல்ல பதமான கோழிக்குஞ்சுகளை வாங்கி, சூப்பு (soup) வைத்துக் கொடுத்தா. நல்ல குஞ்சு மீன்களை வாங்கி, அரைத்த கறி காய்ச்சி, சோற்றுடன் சாப்பிட வைப்பா. முட்டையை கூடுதலாக சாப்பிட வைப்பா. கணவரை தூக்கி நிறுத்தவும், மச்ச சாப்பாடு கொடுக்கவும் தியாகர்வயல் தான் சரி என்று புரிந்து கொண்ட மீனாட்சி இரண்டு நாட்களுக்கொரு முறை காலமை வந்து நின்று, பின்னேரம் தங்கள் வீட்டுக்கு போவா.

கணபதியார் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தார். 1967 ஆம் ஆண்டு மார்கழி சாதாரண தரப்பரீட்சையை எழுதி விட்டு, வந்து நின்ற சுந்தரைப் பார்த்து கணபதியார் “தம்பி, எட்டு காட்டுத் தடிகளை, நான்கு நான்காக இரண்டு வரிசையில், ஒரு ஆள் நடந்து போறதுக்கு இடைவெளி விட்டு நடு. குறுக்காக நல்ல பிலப்பான வரிச்சு தடிகளை கட்டிவிடு.” என்றார்.

காலையும் மாலையும் சுந்தரிடம் “தம்பி என்னை ஒருக்கால் தூக்கி, நீ கட்டிய தடிகளுக்கிடையில் நிற்க வை.”என்றார். சுந்தர் தூக்கி நிமிர்த்த வேதனையில் கத்திய கணபதியார் தனது முயற்சியை மட்டும் விடவில்லை. வேதனையை தாங்கி கொண்டு கட்டிய வரிச்சு தடிகளை இரண்டு கைகளாலும் இறுக்கி பிடித்த படி, மெல்ல மெல்ல நடக்க பழகினார். தனது பயிற்சியை ஒவ்வொரு நாளும் செய்தார்.

இரண்டு கிழமை பயிற்சியின் பின் ஒரு வெள்ளிக்கிழமை, முதல் நாள் வந்து நின்ற நாதனைப் பார்த்து “தம்பி, இண்டைக்கு கோவிலுக்கு விளக்கு வைக்கிற நேரம் என்னை வண்டில்லை கூட்டிக் கொண்டு போறியா?” என்றார். நாதனும் சுந்தரும் கணபதியாரைப் பிடித்து வண்டிலில் ஏற்ற, மீனாட்சியும் சேர்ந்து ஏற இருவரையும் கோயிலுக்கு கொண்டு போனார்கள்.

பிள்ளையார் கோயில் விளக்கின் போது கணபதியார் நிலத்தில் இருந்து கும்பிட, முத்தர்கணபதி பூசை செய்தார். பின்னர் வண்டிலில் ஏற்றி காளி கோவிலுக்கு கொண்டு போனார்கள். காளி கோயில் பூசை தொடங்கி பறை மேளம் அடிக்கத் தொடங்க நடக்கமுடியாது இருந்த கணபதியார் தன்னை அறியாது எழுந்து நின்று, மேளத்தின் தாளத்திற்கேற்ப கலை ஆடத் தொடங்கினார்.

கோயிலுக்கு வந்தவர்களெல்லாம், இனி நடக்கவே மாட்டார் என்று பெரியாஸ்பத்திரியால் அனுப்பப்பட்ட, கணபதியார் எழுந்து நின்று கலை ஆடியது கண்டு “இது காளியின் அற்புதம்” என்று நினைத்தார்கள். மீனாட்சி கைகளை கூப்பியபடி   “காளியாச்சி” என்று சத்தமாக சொல்ல ஏனையவர்களும் சேர்ந்து சத்தம் இட்டார்கள்.

அடுத்த இரண்டு நாட்களும் கணபதியார் கால்களின் வேதனையினால் வருந்தினார். மீனாட்சி    ஒவ்வொரு நாளும் வந்து கணவனை பார்த்து விட்டு போனா. மீனாட்சி வராத ஒரு நாள் அதை தாங்க முடியாத கணபதியார் பொன்னம்மாவிடம் “பிள்ளை, ஒரு பேப்பரும் பென்சிலும் தா” என்று கேட்டு வாங்கி ஒரு கடிதம் எழுதினார். சுந்தரை கூப்பிட்டு “தம்பி, இதை கவனமாக கொண்டு போய் கோச்சியிட்டை குடு.” என்று கொடுத்து அனுப்பினார்.

கணபதியாருக்கு சுந்தரில் நல்ல விருப்பம் இருந்தது. எதையும் சுந்தரிடமே கேட்பார். அவன் அதை மீனாட்சியிடம் கொண்டு போய்க் கொடுக்க அவ “தம்பி, கொப்பர் என்ன எழுதியிருக்கிறார் எண்டு வாசி.” என்றா.

கடிதத்தில் “பட்சமுள்ள மீனாட்சி அறிய வேண்டியது, நான் இரண்டொரு நாளில் வீட்டுக்கு வந்திடுவன். நீ உடம்பை கவனமாக பார்த்துக்கொள், கவலைப்படாமல் இரு. நெடுக இஞ்சை நடந்து வந்து அலையாதை, மருமகள் என்னை வடிவாக பார்க்கிறா.” என்று எழுதப்பட்டிருந்தது.

தியாகர் வயலுக்கு வந்த சுந்தர் “அப்பு, ஆச்சிக்கு காதல் கடிதம் எழுதி என்னட்டை தந்து விட்டவர்.” என்று சொல்லி அப்புவை கேலி செய்ய, எல்லாரும் சிரித்தார்கள்.

பெரியாஸ்பத்திரியில் டாக்டர்களால் “இனி நடக்கமாட்டார்” என்று அனுப்பப்பட்ட கணபதியார் எழுந்து நடந்தது, தன்னம்பிக்கையோடு எடுத்த பயிற்சிகளாலா? அல்லது காளியாச்சியின் அருளினாலா? என்பது விளங்காத புதிர் ஆகும்.

இங்கு நடந்தது முழுவதும் நாபனுக்கு தெரியாது. 1968ஆம் ஆண்டு நாதன் கலைப்பிரிவில் கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டான். மூன்று கிராமங்களிலும் முதல் முதலாக பல்கலைக்கழகம் போவது பத்மநாதன் தான். குடும்பத்தினர் மட்டுமல்ல ஊரவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மகாலிங்கம் மகனை கொழும்பிற்கு கூட்டிக் கொண்டு போவதற்கு ஆயத்தப்படுத்தினார். நாபன் தமையனை வழியனுப்பி வைக்க வந்தவன், கணபதியார் தலையில் சிறிய கடகத்தில் நெல்லையும் தோளில் மண்வெட்டியையும் வைத்துக் கொண்டு, விதைத்த வயலுக்கு மூலை கொத்த புறப்பட்டதைக் கண்டு திகைத்துத் தான் போனான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/

பகுதி 34 – https://vanakkamlondon.com/stories/2021/04/109845/

பகுதி 35 – https://vanakkamlondon.com/stories/2021/05/110730/

பகுதி 36 –  https://vanakkamlondon.com/stories/2021/05/111664/

பகுதி 37 –   https://vanakkamlondon.com/stories/2021/05/112697/

பகுதி 38 –   https://vanakkamlondon.com/stories/2021/05/113713/

பகுதி 39 –   https://vanakkamlondon.com/stories/2021/06/114747/

பகுதி 40 –  https://vanakkamlondon.com/stories/2021/06/115804/

பகுதி 41 –  https://vanakkamlondon.com/stories/2021/06/116949/

பகுதி 42 –  https://vanakkamlondon.com/stories/2021/06/118039/

பகுதி 43 –  https://vanakkamlondon.com/stories/2021/06/119015/

பகுதி 44 –  https://vanakkamlondon.com/stories/2021/07/120022/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More