உன் கருவறையில் – எனை
பத்து மாதங்கள் பாதுகாத்தாய்
உன் கண்ணுக்குள் வைத்து
கலங்காது எனை பராமரித்தாய்
தரையில் விழ விடாது – எனை
ஓடி வந்து ஏந்திக் கொண்டாய்
உன் நெஞ்சில் அனைத்து
பக்குவமாய் வளர்த்தெடுத்தாய்
தலை நிமிர்ந்து நான் நடக்க
வடிகாலாய் நீ இருந்தாய்
குழந்தைகளுடன் நாம் வாழ – எம்
குல தெய்வம் வேண்டி நின்றாய்
இத்தனையும் எனக்காக செய்த
என் தாயே……..
உனக்காக நான் என்ன செய்தேன்…
என் சிறு வயதில் உன்னை
வேதனைப் படுத்திய நாட்களே அதிகம்
அழுது அடம் பிடித்து –
பெற்று கொண்ட விடயமோ பலவிதம்
ஆனால் அதன் பின்னணியில் – உன்
விட்டுக் கொடுத்தலையும் தியாகத்தையும்
புரிந்து கொள்ள தவறி விட்டேன் – உன்
பாசத்தை உணராமல் விட்டு விட்டேன்
நினைத்து பார்க்கிறேன்…
வலிக்கிறது மனசு
நான் தாயான போது தான்
புரிந்து கொண்டேன்
உன் பாசமும் தியாகமும்
எத்தனை மேலானது என்று….
உன் வலியின் வேதனை
எத்தனை ஆழமானது என்று…
வயது முதிர்ந்த இந் நிலையில் – உன்னை
என்னருகில் வைத்திருக்க ஏங்குகிறேன்
என் பணிவிடைகள் மூலம் – உன்னை
என் குழந்தையாய் சீராட்ட துடிக்கிறேன்
இந்த பிறப்பில் என் தாயாய்
நீ இருக்கிறாய் – என்
அடுத்த பிறப்பில் – உன்
தாயாய் நான் பிறக்க வேண்டும் – என்
குழந்தையாய் நீ வரவேண்டும்
என் தாயாய் நீ இருந்து –
எனக்கு தந்த பாசம், தியாகம் – இவை
எல்லாவற்றையும் இரட்டிப்பாக்கி
நான் தருவேன் உனக்கு………….
– கயல் விழி –