திருமதி வேணி விஜயராஜா, முன்னாள் வவுனியா வளாகம், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், CEFE சர்வதேச பயிற்றுவிப்பாளர், தற்போது செயற்திட்ட ஆலோசகரும், பிரித்தானியாவில் தேசிய சுகாதார துறையில் (NHS) ஆரோக்கிய பரிந்துரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவர் பல குடும்பங்களிற்கு பெற்றோர் வழிப்படுத்தல் மற்றும் குடும்ப உறவுகள் (Parenting) பற்றிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றார். இவருடன் நாம் ஒரு நிமிட நேர்காணலில் சந்தித்தபோது பரஸ்பரம் வணக்கங்கள் கூறி நேரடியாக விடையத்துக்கு சென்றோம்.
1. பிள்ளைகளின் எதிர்காலத்தினை வகுப்பதில் பெற்றோர்களின் பங்கு அல்லது அணுகுமுறை என்ன?
நாம் பிள்ளைகள் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். அதே போல் அவர்களது வாழ்க்கையினை/ எதிர்காலத்தினை அவர்கள் அமைத்துக் கொள்வதற்கும், நாம் அவர்களிற்கு அனுசரணையாக இருப்பது அவசியமாகும். எப்படி அனுசரணையாக இருப்பது?
முதலாவது பிள்ளைகள் தன்னம்பிக்கை பெற வழி வகுத்தல் வேண்டும். இதற்கு நாம் முதலில் அவர்களது தனித்தன்மைகளை அறிந்து பாராட்ட வேண்டும். நாம் பிள்ளைகளின் திறமைகள், பலவீனங்கள் அறிந்து எதுவித வேறுபாடும் இன்றி அவர்களை மனதார ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டு உண்மையாக, நேர்மையாக பிள்ளைகளை பாராட்டும் போது பிள்ளைகள் அதிக தன்னம்பிக்கை பெறுவார்கள். உதாரணமாக, ஒரு பிள்ளை கணக்கில் சிறப்பாக புள்ளிகளை பெறலாம். மற்றைய பிள்ளை மொழியில் திறமையானவராக இருக்கலாம். இங்கு நாம் பிள்ளைகளை அவர்களது திறமைகளை பாராட்டுவது சிறப்பானதாகும். அவர்களும் தமது திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். மாறாக அவர்களை ஒப்பிட்டு, மற்றவர் முன், கலந்துரையாடினால் அவர்கள் தமது மனதில் ஏமாற்றம், சலிப்பு, வெறுப்பு, பொறாமை என பல வேண்டாத விடயங்களை வளர்த்துக் கொள்ளலாம். ஆகவே உண்மையான நேர்மையான பாராட்டுதல்களை மிகைப்படுத்தாமல் வழங்குவதில் பின்னிற்க வேண்டாம்.
இரண்டாவது இது பிள்ளையின் வாழ்க்கை எனது வாழ்க்கை அல்ல என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும். நாம் பிள்ளைகளது வழியினை பிள்ளைகள் அறிந்து கொள்ள வழிகாட்டுதல் வேண்டும். நாம் பிள்ளைகளின் உண்மையான திறமைகளை தட்டிக் கொடுத்தல், ஊக்கப்படுத்துதல், மனதில் உறுதியினை வளர்க்கும் விதத்தில் பாராட்டி வழிப்படுத்தல், உரிய விழுமியங்கள், பெறுமதிகளை பகிர்ந்து கொள்ளல், குடும்ப மரபுகளை போற்றும் நடத்தைகளை ஏற்படுத்தல் என பல நல்ல கருமங்களை அறிந்து கருத்துடன் செய்ய வேண்டும்.
மாறாக, பிள்ளைகள் நாம் வகுத்த வழியில் செல்ல வேண்டும், அவர்களது கருத்து, ஆர்வங்கள் இங்கு முக்கியமில்லை, அவர்களிற்கு ஒன்றும் தெரியாது, நாம் கூறும் வழியே சிறந்தது என நாம் பிடிவாதமாக இருந்தால், நாம் அவர்களது வாழ்வினை திசைமாற்றி விடலாம். அத்துடன் அவர்களிற்கு விடயங்களில் ஆர்வம் குன்றி பிற்காலத்தில், அவர்கள் தமது கடமைகள், பொறுப்புக்களில் பின் தங்கியவராக, வாழ்வில் பற்று இல்லாது வாழ நேரிடலாம். மேலும் பின்னுக்கு அவர்கள் தமது கடமைகளில் கருத்தின்றி ஒரு ஒட்டிக்கொள்ளாத வாழ்வினை அல்லது தனித்து வாழும் ஆசையினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
சில குடும்பங்களில் பெற்றோர்கள் தாம் வாழாத வாழ்வினை பிள்ளைகள் மூலம் வாழ முற்படுவார்கள். தமக்கு டாக்டராக படிக்க முடியவில்லை, பிள்ளை படித்து டாக்டராக வேண்டும் என்பார்கள். எனக்கு டான்ஸ் பழக முடியவில்லை பிள்ளை ஆட வேண்டும் என விரும்புவார்கள். இது தவறான அணுகுமுறையாகும். நாம் இது பிள்ளையின் வாழ்க்கை எமதல்ல என்பதனை விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
இறுதியாக நாம் பெற்றோராக வழமையாக எழும் பிள்ளைகளின் ஏற்றதாழ்வுகளில் பங்குபற்றி உறுதியான முறையில் வழிகாட்டுதல் வேண்டும். விமர்சித்தல், ஒப்பிடுதல், போட்டிபோடுதல், கர்வம் கொள்ளல் என திசை மாறாமல் நல்வழி காண நாம் பெற்றோர் வழிகாட்டுதல் வேண்டும்.
2. பெற்றோர்கள் பிள்ளைகளது பரஸ்பர புரிந்துணர்வினை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
பெற்றோர்கள் பிள்ளைகளது பரஸ்பர புரிந்துணர்வு அவசியம் என்கின்ற உணர்வினை நாம் கட்டாயமாக வளர்த்துக் கொள்ளல் இதற்கான ஆரம்பப்படியாகும். பொறுமையான செவிமடுத்தல், விமரிசிக்காத, மற்றவருடன் ஒப்பிட்டு கதைக்காத மனப்பாங்கு, நேர்மையாகவும் உறுதியாகவும் உங்கள் அபிப்பிராயங்களை ”உங்கள் அபிப்பிராயம்” என பகிர்ந்து கொள்ளல், என பல விடயங்கள் இங்கு உங்களிற்கு பரஸ்பர புரிந்துணர்வினை ஏற்படுத்த வழிவகுக்கும்.
மேலும் உங்களிற்கு பிடிக்கும், பிடிக்காது என வகை பிரிக்காது பிள்ளைகளது எண்ணங்களை அவர்களது வழியில் புரிந்து பாராட்டுதல் வேண்டும். பொதுவாக நாம் பாராட்டுதல் கூடாது என ஒதுக்கி விடுவோம். ஆனால் உண்மையான, மிகவும் விளக்கமான, நேரம் தாழ்த்தாத, உடனடியான வழங்கும் பாராட்டுக்கள் மிகவும் ஆரோக்கியத்தினை தரும். அதே நேரம் தன்னிடம் இல்லாத ஒரு திறமை தனது மற்றைய குடும்ப அங்கத்தவரிடம் பிள்ளை காணும் போது, அதனை பாராட்ட பிள்ளைகளை நாம் ஊக்கப்படுத்தல் வேண்டும். அது பிள்ளைக்கு தன்னம்பிக்கை வளருவதற்கு வகை செய்யும். பிள்ளை தனது தனித்தன்மைகள் அங்கீகரிக்கப்படுகிறது என அறிகையில் நிறைந்த தன்னம்பிக்கை பெறுகின்றது. அதே நேரம் மற்றவர்களது தனித்தன்மைகளை இலகுவில் ஏற்று பாராட்ட பழகிக்கொள்வார்கள். இது பரஸ்பர புரிந்துணர்விற்கும் குடும்பத்தில் அன்பு மேலோங்கவும் வழி செய்யும்.
மேலும் எம்பக்கத்தில் நாம் எமது தவறுகள், தோல்விகளை நேர்மையான முறையில் வெட்கமின்றி பகிர்ந்து, அவை பற்றி நேர்மையான முறையில் உரையாடும் போது பிள்ளைகள் உங்களை புரிந்து ஏற்றுக்கொண்டு விடுவார்கள். வாழ்வின் யதார்த்தம் இது என விளக்கம் பெறுவார்கள். இவ்வாறான விளக்கங்கள் குடும்பத்தில் பரஸ்பர புரிந்துணர்வு அன்பு மேலோங்க வழி செய்யும்.
3. புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழரின் இரண்டாவது தலைமுறை வாழ்வை அமைத்து மூன்றாவது தலைமுறையினர் வளர்ந்து வருகின்றார்கள். சில குடும்பங்களில் இளைய தலைமுறையினருக்கும் மூத்தவர்களிற்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது. இதற்கு எவ்விதமான அணுகுமுறை உகந்ததாக இருக்கும்?
பிள்ளைகள் சிறு வயதில் பெற்றோரை பின்பற்றுவதில் மிகவும் ஆர்வமாகவும் கருத்தாகவும் இருப்பார்கள். பிள்ளைகள் முன் நாம் அரையும்குறையுமாக அவர்களது பாட்டன், பாட்டி பற்றிய விடயங்களை கதைப்பது, வெளிப்படுத்துவது போன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எப்போதும் பிள்ளைகளதும் மூத்தோரினதும் உறவுகளை மேம்படுத்தும் விடயங்களை எடுத்துக் கூறல் வேண்டும். இது அவர்களது உறவினை மேம்படுத்தும்.
மாறாக, நாம் எமது பிள்ளைகள் முன் இ எமது பெற்றோர்கள் பற்றி அசட்டையான போக்கில் எமது ஏமாற்றங்கள்இ அதிருப்திகளை வெளிப்படுத்தினால், அதனை பிள்ளைகள் மனதில் உள்வாங்கி வைத்திருக்கலாம். இப்படியான சில பல காரணங்கள் அவர்களது உறவினை பலவீனப்படுத்தும். அதேபோன்ற அசட்டையான போக்கினை பிற்காலத்தில் பிள்ளைகள் தமது பெற்றோரிடமும் மேற்கொள்ளலாம்.
ஆகவே அடிப்படையில் எமது வாழ்க்கை முறையில் எவ்வாறு நாம் எம் பெற்றோர்களை முன்வைக்கின்றோமோ அதே முறையினை எமது பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். இதனை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
வணக்கம் லண்டனின் இப்பகுதிக்கு ஏற்ப குறுகிய நேரத்திலும் நிறைவாக எம்முடன் பேசியமைக்காக திருமதி வேணி விஜயராஜா அவர்களுக்கு வணக்கம்LONDON நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.
வந்தியத்தேவன் | வணக்கம்LONDON க்காக
(ஒரு நிமிட நேர்காணல் என்பது குறுகிய நேரத்தில் வாசிப்பவரை சென்றடையவல்லது ஆனால் பேசப்போகும் விடயத்தின் ஒரு வெட்டு முகமாகவே அது அமையும். இன்று நாம் பேசிய “பெற்றோர் வழிப்படுத்தல்” என்பது மிகப்பெரிய தளத்தில் இருந்து பேசவேண்டிய மிகவும் முக்கியமான விடயமாகும். மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் விரிவாகப் பேசலாம்
வாசகர்களே! இப்பகுதி தொடர்பாகவும் மேலே பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அவை வணக்கம் லண்டனில் இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவும்)