சிம்புவுடன் தொழில் ரீதியான தொடர்பு மட்டும் உள்ளது என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். சமீபத்தில் ஹன்சிகா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது சிம்பு, ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் பரிசெல்லாம் வழங்கினார். இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனிடையே சிம்பு, ஹன்சிகா காதலில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்த விரிசலுக்கு சிம்புவுக்கு ஆண்ட்ரியாவிடம் ஏற்பட்ட திடீர் நெருக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதில் இருவரும் நெருக்கமாக நடித்த படங்கள் இன்டர்நெட்டில் பரவின. இதனாலேயே சிம்பு, ஹன்சிகா உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாம்.
ஆனால் ஆண்ட்ரியா தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கவுரவ வேடத்தில் வருகிறார்கள். இருவரும் ஐந்து மணி நேரம் மட்டுமே நடித்தனர். இருவருக்கும் தொழில்ரீதியான தொடர்பே உள்ளது. அதை தாண்டி எந்த உறவும் இல்லை. ஆண்ட்ரியா யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றார்.
சிம்பு – ஹன்சிகாவின் காதல் பிரிந்தது உண்மையோ, பொய்யோ, ஆனால் சிம்புவையும் கிசுகிசுவையும் பிரிக்க முடியாது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.