ஆனையிறவு புகையிரத நிலையப் பெயரை மாற்றி சிங்களப் பெயர் வைப்பது மொழி உரிமையை மீறும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் எனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தமிழ் மொழி அமுலாக்கலை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கின்றேன். ஆனால், எதுவுமே வெற்றிபெறவில்லை. இதனால் மனவேதனையுடனேயே உள்ளேன் என்றும் அமைச்சர் தனது மனக் குமுறலையும் வெளிட்டார்.
இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
வெள்ளவத்தை தமிழ் சங்கம் அமைந்துள்ள வீதியின் பெயரை தமிழ் சங்க வீதியென பெயரிடுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட்டன.
பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசினேன். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பேசினேன். அவரும் இப்பெயர் பலகையை நிறுவுவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு அறிவித்தார். அவர் மாகாண செயலாளருக்கும் அறிவித்தார்.
ஆனால், இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை தமது தீர்மானத்தை தனக்கு அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். பின்னர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால், இன்றுவரை நான் எடுத்த எந்த முயற்சியும் நிறைவேறவில்லை. இது சிறியதொரு விடயம். ஆனால், ஏன் இவ்வளவு இழுபட்டு செல்கின்றது என்பது புரியவில்லை.
மீண்டும் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
முயற்சியை கைவிடமாட்டேன். ஆனால், தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கின்றேன். எதுவுமே நிறைவேறுவதில்லை.
இதனால் மனவேதனையுடன்தான் இருக்கின்றேன். என்ன செய்வது? ஆனால், எனது முயற்சியை கைவிடப்போவதில்லை.
ஆனையிறவு
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயரை மாற்றி சிங்களப் பெயர் வைப்பதென்பது கடுமையான மொழி உரிமை மீறலாகும். இதனை கடுமையாக எதிர்க்கின்றேன். இதனை எதிர்த்து போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
ஆனால், இம்முயற்சி வெற்றி பெறுமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.