சிறந்த சஞ்சிகையாளராக தன்னைஅடையாளப்படுத்தி நின்ற அன்புமணி

anpumaniஇலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து கொண்டவரும், சிறந்த சஞ்சிகையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி நின்றவருமான அன்புமணி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மனதை உலுக்கி நின்றது. இப்போது தான் பேசினோம், அதற்குள்…மனம் கவலை கொள்கிறது.

சிறுகதையாளனாக, நாவலாசிரியனாக, கட்டுரையாளனாக, விமர்சகராக, நாடக ஆசிரியராக, நடிகனாக, நாடக இயக்குனராக, இதழாசிரியனாக, நல்ல நேர்காணலாளராக, நண்பனாக வலம் வந்தவர். 06/03/1935 இல் ராசையா, தங்கமணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். தமிழின் மீதான அளப்பரிய ஈடுபாடே அவரின் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களாக வைத்து அழகு பார்த்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, ஆரையம்பதி சிறி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியை முடித்தபின் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பயின்றார். அந்த நாளைய கல்வித் தராதரக்(எஸ்.எஸ்.சி) கல்வியை கற்று முடித்தவர் லிகிதராக, உதவி அரசாங்க அதிபராக, உள்துறை உதவி செயலாளராகவும், சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அவர்களின் செயலாளராகவும் பணி புரிந்தார்.

இவரின் படைப்புக்களை மலர், தினகரன், கல்கி, செங்கதிர், ஞானம், தாரகை, வீரகேசரி, சாளரம், வெளிச்சம், தொண்டன், எனப் பல அச்சு ஊடகங்களும், ஒலி/ஒளி ஊடகங்களும் தாங்கி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செங்கதிரின் வளர்ச்சியிலும் ஊக்குசக்தியாக இருந்திருக்கிறார்.

மனித நேயம் மிக்கவர். எப்போது நான் தொலைபேசியில் அழைத்தாலும் அன்பாக பேசி என்னைக் கவர்வார். ஆரம்பத்தில் ‘மலர்’ எனும் இலக்கிய சஞ்சிகையை நடாத்தினார். பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்தார். இலக்கிய அனுபவம்இ ஆளுமை மிக்கவர். செ.யோகநாதனின் ‘தோழமை என்றொரு சொல்’ மலர் வெளியீடாகவே வெளிவந்தது.

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இவரது நேர்காணல் பார்த்தது ஞாபகம்.

மட்டக்களப்பு எழுத்தாளர்களை ஒன்று சேர்த்த பெருமையும் உண்டு. அமரர்.ரி.பாக்கியநாயகம் அவர்களின் மீது அபிமானம் கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு எழுத்தாளர் இணையம் 2008இல் ‘தமிழியல் விருது’ பெற்றமை அவரின் தொடர்ச்சியான இலக்கிய வெளிப்பாட்டிற்கான உயர்விருதாக அமைந்தமை சிறப்பாகும். ஆரையம்பதி பல எழுத்தாளர்களை கண்டுள்ளது. நவம், ஆரையம்பதி தங்கராசு, மலர்ச்செல்வன் எனப் பலரைக் குறிப்பிடலாம். இப்படிப் பலரை உள்ளடக்கிய மக்கள் அன்புமணியின் மணிவிழாவை கொண்டாடிச் சிறப்பித்தனர்.

இவரின் நாடகங்களில் நமது பாதை, என் அண்ணா, சூழ்ச்சிவலை, திரைகடல், குகைக்கோயில், விண்ணுலகில் விபுலானந்தா, அமரவாழ்வு, ஆத்ம திருப்தி, நமது பாதை எனப் பல..அவற்றுள் திரைகடல் தீபம் நாடகம் அவருக்குப் பரிசினை ப்பெற்றுத் தந்த நாடகமாகும்.

இலங்கை நீதிஅமைச்சு சமாதான நீதவானாக்கி பெருமை சேர்த்தது. விஷ்வசேது இலக்கியவிருது டென்மார்க் பாலம் அமைப்பினரால் வழங்கி உலகளவில் பேசப்பட்ட எழுத்தாளர். மேலும், மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை ‘இலக்கியச்சுடர்'(2003) விருதினையும், காத்தான்குடி சமாதானப்பேரவை ‘சமாதானக்காவலர்’ பட்டத்தினையும் வழங்கிக் கௌரவித்தனர்.  கூடவே, தமிழ்மணி விருது(1992)இ ஆளுனர் விருது(2001), கலாபூஷணம் விருது(2002), எழுத்தியல் விருது எனப் பல விருதுகளும் சிறப்பாய் அமைந்தன எனலாம்.

நான் தொகுத்த இலக்கியப்பூக்கள் தொகுப்பிற்காக

-தமிழ்மணி.சிவ.விவேகானந்த முதலியார் வாழ்க்கை வரலாறு

-நூற்றியெட்டு நாவல்களை எழுதிய பவளசுந்தரத்தம்மா

-அரையூர் அழகேசமுதலியார்

-ஆரையூர் அமரன்

 

ஆகிய கட்டுரைகளத் தந்துதவினார். அக் கட்டுரைகள் நூலுக்குப் பெருமை சேர்த்த அதேவேளையில் அவரின் எழுத்தின் எளிமையையும் பார்க்கக் கிடைத்தது. இவர் இல்லத்தரசி(1989), வரலாற்றுச் சுவடுகள்(1992), ஒரு தந்தையின் கதை(1989), ஒரு மகளின் கதை(1995), தமிழ் இலக்கிய ஆய்வு(2007), எட்டுத்தொகை, பத்துப்பாட்டு(2007) பதினென்கீழ்க்கணக்கு(2007) நூல்களை வெளியிட்டுள்ளார். கூடவே, தங்கேஸ்வரி கதிர்காமர், எஸ்.பிரான்ஸிஸ், ஆரையூர்.இளவல், வித்துவான்.ச.பூபாலபிள்ளை, வித்துவான்.அ.சரவணமுத்தன் ஆகியோரின் நூல்கள் வெளிவருவற்கு உதவியும் உள்ளார்.

ஈழத்து எழுத்தாளர் பட்டியலை தொகுக்க முற்பட்ட போதுவிருப்பமாக தனது தகவலைத் தந்துவியது இன்றும் மறக்கமுடியாது. யுத்த சூழலிலும் எனது வேண்டுகொளை ஏற்று உதவியது வாழ்நாளில் நினைத்தபடியே இருக்கத் தோன்றும்.

இல்லை என்பது நிஜம். அதுவே யதார்த்தம். 78 வயதிலும் இலக்கியப்பணியை செவ்வனே செய்த மனிதன் விபத்தில் சிக்கியதும், பின் மரணமானது செய்தியாயினும் அது பெரிய இழப்பாகும்.

அவரின் இலக்கியம் என்றும் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும்.

 

mu amu   முல்லைஅமுதன் | எழுத்தாளர்

 

ஆசிரியர்