உங்களுக்குள் வசைபாடாதீர் | அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்உங்களுக்குள் வசைபாடாதீர் | அஜித், விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுறுத்தல்

நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரது ரசிகர்கள் தங்களுக்குள் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

வீரம், ஜில்லா படங்களையொட்டி அவர் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நிலைத்தகவல்:

“தலயா? தளபதியா?

அஜித்தா? விஜய்யா?

பொங்கல் போட்டியில யாருக்கு வெற்றி?

ஜில்லாவா? வீரமா?

இந்த ஆரோக்கியமான போட்டி சினிமா உலகத்துக்கு சம்பாரிச்சு தரப்போறது எத்தனையோ கோடிகள். முதல் இடம் இரண்டாம் இடம் தாண்டி ரெண்டு பேருமே தனக்காக உருவாக்கி வச்சுருக்க ரசிகர் கூட்டம் இவுங்க ரெண்டுபேரோட படங்களையும் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்காங்கன்ற நிலைமை தான் இவ்வளவு கோடிகளை திரையுலகத்துக்கு சம்பாரிச்சு தருது. ஒரு வகையில் இது ஆரோக்கியம்தான்.

ஆனாலும் அந்த சராசரி பாமர ரசிகன் இன்னும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. அந்த எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் பூர்த்தி செய்ததா?

இந்தக் கேள்விகளை, அதற்கான பதிலை எப்ப்படி சொல்வது என தெரியாமல் இன்று நமது வலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற எல்லா நெட்வொர்க்கிலும் ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது.

உங்களை போன்ற ரசிகர்களால்தான் அவர்கள் இருவரும் இந்த உயரம் போனார்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க மாட்டார்களா? இருவருக்குமே அந்தப் பக்குவம் இருக்கிறது.

ஆகவே ரசிகர்களே… உங்கள் தேவை அவர்களிடம் என்ன என்பதை உணர்த்துவது தான் நாகரீகம். மாறாக, கிண்டல் செய்து எழுதுவதை மாற்றி இன்னும் அவர்களை உயரம் கொண்டுபோக வித்திடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல படங்களும், திரையுலகுக்கு நிறைய வருமானமும், நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம்.

இவ்வாறு இயக்குநர் சேரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்